
மதுரை மாவட்டம், லாலாபுரம் பள்ளி மாணவர்கள் கள்ளிக்குடி கோயிலில் பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் இருந்த பாசன பேரேரிகளின் பெயர்களைப் படித்து வியந்தனர்.
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஒன்றியம், லாலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றத் துவக்க விழாவும், கல்வெட்டுகளைப் படிக்கும் பயிற்சியும் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியை முத்துலட்சுமி தலைமை தாங்கினார். ஏழாம் வகுப்பு மாணவி ரதி அனைவரையும் வரவேற்றார்.
தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலாளரும் தமிழாசிரியருமான ராஜேஸ்வரி மன்ற அறிமுக உரையில், "தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மூலம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதல்கட்ட தொல்லியல் பயிற்சி இம்மாதம் 6-ம் தேதி மதுரையில் நடந்தது. இப்பயிற்சியை பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்பது அரசின் விருப்பம். அதன்படி தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, வரலாறு, தொல்லியலை பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ளவும், பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும் பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தொடங்கப்பட்டது” என்றார். ஏழாம் வகுப்பு மாணவன் முகமது ஹாரூன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்குரிய ஏற்பாடுகளை மாணவர்கள் அபி, காவியா, சந்தோஷ்குமார், முகமது ஹஸ்ரத் ஆகியோர் செய்தனர்.
மன்ற நிகழ்வின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு கி.பி.13-ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்ட கள்ளிக்குடி குலசேகரப்பெருமாள் கோவிலில் கல்வெட்டுகளைப் படிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. கல்வெட்டுகளில் இவ்வூரில் இருந்த பெரியகுளமான விக்கிரமபாண்டிய பேரேரி, குமரநாராயணப் பேரேரி, இராசசிங்க பேரேரி, கோவிந்தப் பேரேரி ஆகிய பாசனப் பேரேரிகளின் பெயர்களைப் படித்து மாணவர்கள் வியந்தனர்.