ரஜினியின் அரசியல் துறவற முடிவுக்குப் பிறகு அவரது மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்களில் பெரும்பாலானோர், “இது தெரிஞ்சதுதான்” என்று சொல்கிறார்கள். “அவர் அரசியலுக்கு வந்திருந்தால் ஆதரிச்சிருப்போம். இல்லை என்பதால், எங்க வழி தனி வழின்னு பார்த்துக்குவோம்” என்கிறார்கள்.
ரஜினி அரசியலுக்கு வந்தால் அதை வைத்து அதிகாரத்தைக் குறி வைக்கலாமென்று ரொம்ப காலமாக கணக்கு போட்டு செலவழித்த சில மன்ற நிர்வாகிகள் செம அப்செட்டில் உள்ளனர். அவங்கவங்களும், இதுநாள்வரை தொடர்பில் இருந்த அரசியல் கட்சிகளில் ஐக்கியமாகி வருகிறார்கள். சமீபத்தில்கூட காஞ்சி மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் பலரும் தி.மு.க.வில் ஐக்கியமானார்கள். இதேபோல் பலரும் பல்வேறு கட்சிகளில் இணைந்துகொண்டிருக்கிறார்கள்.
ரஜினியின் ஆன்மிக அரசியலை எதிர்பார்த்திருந்த நிர்வாகிகளை ஆர்.எஸ்.எஸ். தரப்பு அணுகிவருவதால், அவர்கள் பா.ஜ.க.வில் சேர்ந்து வருகின்றனர். அதன்படி சமீபத்தில் கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி, ராஜபாளையம் பகுதி ரஜினி மக்கள் மன்றத்தினரும் பா.ஜ.க.வில் சேர்ந்திருக்கிறார்கள்.
ரஜினி எப்படியும் வாய்ஸ் கொடுப்பாரென்று இப்போதும் பா.ஜ.க பலமாக நம்புகிறது. ரஜினியைப் பொறுத்தவரை அவருக்கு உடல்நிலைதான் முக்கியம். ஏற்கனவே சிங்கப்பூரில் கிட்னி மாற்று சிகிச்சை செய்துகொண்டவர் என்பதால், டாக்டர்கள் அவர் உடல்நலத்தில் தீவிர கவனம் செலுத்துகிறார்கள். மேல் சிகிச்சைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல இருக்கும் ரஜினி, அங்கு ஒருமாத காலம் இருப்பார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தங்கள் கட்சியை ஆதரித்து அறிக்கை வெளியிடும்படி பா.ஜ.க. மேலிடம் ரஜினியிடம் கேட்க, ‘விரைவில் தருகிறேன்’ என்று ரஜினி சொன்னதாகச் சொல்லும் பா.ஜ.க தரப்பு, ஆன்மிக அரசியல் பற்றி விளக்கி, தங்கள் தரப்பை ஆதரிக்கும் வகையில் ரஜினியோட அறிக்கை வரும் என்று நம்பிக்கையோடு சொல்கிறது.