தி.மு.க.வின் கோவை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட அமைப்பை அண்மையில் பிரித்தார் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். இதனையடுத்து மேலும் சில தி.மு.க மாவட்ட அமைப்புகளை உடைத்து புதிய மா.செ.க்களை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் ஸ்டாலினிடம் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.
இதுகுறித்து தி.மு.க தரப்பில் விசாரித்தபோது, "தமிழகம் முழுவதும் தி.மு.க.வில் உள்கட்சி அதிருப்தி இருக்கவே செய்கிறது. இதனைச் சரிக்கட்ட தி.மு.க.வின் சில மாவட்ட அமைப்புகளை பிரிப்பதில் கவனம் செலுத்துகிறார் ஸ்டாலின்.
திருவள்ளூர் மாவட்ட தி.மு.க.வை 3 ஆக பிரித்து, ஆவடி, பூந்தமல்லி தொகுதிகளை உள்ளடக்கி ஆவடி நாசரையும், திருவள்ளூர், திருத்தணி தொகுதிகளை உள்ளடக்கி வி.ஜி.ராஜேந்திரனையும், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி தொகுதிகளை உள்ளடக்கி முன்னாள் எம்.எ.ல்.ஏ சேகரையும் மா.செ.வாக நியமிக்க ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமாரும், சட்டமன்ற தி.மு.க கொறடா சக்கரபாணியும் மா.செ.க்களாக இருக்கின்றனர். இந்தச் சூழலில், முத்தரையர் சமூகத்துக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஒரு மாவட்டத்தை உருவாக்கலாமா என விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் நத்தம் ஒன்றியச் செயலாளர் ரத்னகுமாருக்கும், ஆண்டி அம்பலத்துக்கும் மா.செ. போட்டி இருக்கும்.
11 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய சேலம் மாவட்டத்தில் சிவலிங்கம், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், செல்வகணபதி ஆகிய மூன்று மா.செ.க்கள் இருக்கின்றனர். 3 மா.செ.க்களுடன் புதிதாக 2 மா.செ.க்களை நியமிக்கவும் திட்டமிடப்படுகிறது. அதாவது, வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவாளர்களை திருப்திப்படுத்த, வீரபாண்டி மற்றும் சங்ககிரி தொகுதிகளை உள்ளடக்கி வீரபாண்டி ராஜாவுக்கும், ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி தொகுதிகளை உள்ளடக்கி ரேகா பிரியதர்ஷினிக்கும் மா.செ பதவி கொடுக்கலாமா என ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
இதுதவிர, 10 தொகுதிகள் அடங்கிய நெல்லையில் ஆவுடையப்பன், சிவபத்மநாபன், வஃகாப் ஆகிய மூன்று மா.செ.க்கள் இருக்கின்றனர். புதிய மாவட்டமாக தென்காசி உருவாகியிருப்பதற்கேற்ப தி.மு.க.வின் அமைப்பையும் மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் புதிய மா.செ. ஒருவரை நியமிக்க தலைமை ஆலோசிக்கிறது. புதிய நியமனம் நடக்கும் போது ஆவுடையப்பனும் மாற்றப்படலாம். அதேபோல, சென்னையில் உள்ள 4 மா.செ.க்களின் எண்ணிக்கையை 7 ஆக உயர்த்தவும் ஆலோசிக்கப்படுகிறது" என அறிவாலய வட்டாரங்களில் எதிரொலிக்கின்றன.