தருமபுரி மக்களவைத் தொகுதியில் இன்று (19.05.2019) எட்டு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாமக இளைஞரணித் தலைவரும், தருமபுரி பாராளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் நத்தமேடு வாக்குச்சாவடியில் நடந்த மறுவாக்குப்பதிவை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், இது தேவையற்ற மறுவாக்குப்பதிவு. ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்றால் அங்கு வாக்களித்த மக்கள் புகார் கொடுத்திருக்க வேண்டும் அல்லது வாக்குச்சாவடியில் உள்ள முகவர்கள் புகார் கொடுத்திருக்க வேண்டும். தேர்தல் அதிகாரி புகார் கொடுத்திருக்க வேண்டும். இங்கு உள்ள எட்டு வாக்குச்சாவடியில் யாருமே புகார் கொடுக்கவில்லை. திமுக முகவர்கள் உள்ளிட்ட யாருமே புகார் கொடுக்கவில்லை.
திமுக வேட்பாளர் புகார் கொடுத்தார். அதற்கு காரணம் அவருக்கு தோல்வி பயம். இதனாலத்தான் நாங்கள் தோற்றோம் என காரணத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த முறையைவிட இந்த முறை அதிக வாக்குப்பதிவு நடக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வெளியூரில் இருக்கும் அனைவரும் வாக்களிக்க வந்திருப்பார்கள்.
ஸ்டாலின் பாஜகவுடன் பேசி வருகிறார்... மத்திய அமைச்சர் பதவிகள் கேட்டிருப்பதாக செய்திகள் பரவுகிறதே...
நிச்சயமாக அது உண்மையாக இருக்கும். ஏனென்றால் ஸ்டாலின் விரத்தியில் இருக்கிறார். என்னைக்கு நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தமோ அன்றிலிருந்து ஸ்டாலினுக்கு விரத்தி ஆரம்பித்துவிட்டது. ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர் என்று சொன்ன ஸ்டாலின், மேற்கு வங்கம் சென்ற பிறகு அவரது பேச்சை மாற்றிக்கொண்டார். ஆனால் தமிழகம் வந்து மீண்டும் ராகுல்காந்திதான் பிரதமர் என்று சொல்லுகிறார்.
3வது அணி தொடர்பாக சந்திரசேகரராவிடம் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஸ்டாலின். அதுவும் சரியாக வருகிறதா இல்லையா என்று தெரியவில்லை. அடுத்து பாஜகவிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே மிகுந்த குழப்ப நிலையில் ஸ்டாலின் இருக்கிறார். அவர் எங்கே பேசினாலும் எதுவும் எடுபடப்போவது கிடையாது. காரணம் அவர்கள் வெற்றிப்பெறபோவது கிடையாது. இவ்வாறு கூறினார்.