Skip to main content

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தால் தீவிரவாதியா? - வேல்முருகன் கண்டனம்!

Published on 15/12/2020 | Edited on 15/12/2020

 

Velmurugan

 

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ஆம் தேதி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். டெல்லியில் தற்போது கடும் குளிர் வாட்டி எடுக்கும் நிலையிலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தில்  இருந்து பின்வாங்காமல் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

விவசாய அமைப்புகளுக்கும் அரசுக்கும் சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், வேளாண்  சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறும் மோடி அரசு, 6ஆம் கட்டப் பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிட்டது.

 

இதனையடுத்து, விவசாய அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் முழு அடைப்பு நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவளித்தன.

 

இந்த நிலையில், விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டங்களை இழிவுபடுத்தும் விதமாக, மோடி அரசும், பா.ஜ.க நிர்வாகிகளும் பேசி வருவது கண்டனத்துக்குரியது.

 

குறிப்பாக,  விவசாயிகள் அமைப்புகள் என்று அழைக்கப்படுபவை, உண்மையில் வெளிநாட்டுச் சக்திகளுக்காச் செயல்படுவதாகவும், தேசவிரோதிகளின் அமைப்புகள் எனவும் விவசாயிகள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியுள்ளார் அமைச்சர் கமல் பட்டேல்.

 

மத்திய இணையமைச்சர் ராவ்சாஹேப் தாதாராவ் தன்வே, டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டத்தின் பின்னணியில் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மறைமுகமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறி, விவசாயிகளை அவமானப்படுத்தியுள்ளார்.

 

இன்னொரு படி மேல் போய், விவசாயிகளுடன் மாவோயிஸ்ட், நக்சல், இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊடுருவியிருக்கிறார்கள் என்று கூறி, விவசாயிகள் போராட்டத்தை மேலும் இழிவுப்படுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். 

 

இதனிடையே, பெயரளவுக்குப் பேச்சுவார்த்தைகளை மட்டும் நடத்திவிட்டு, மோடி அரசு வேடிக்கை பார்க்கிறது. துணை ராணுவத்தை இறக்கியதோடு மட்டுமில்லாமல், சாலைகளில் முள்வேலிகள், ட்ரோன் மூலம் கண்காணிப்பு எனப் போராட்டத்தை எப்படியாவது வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதிலேயே மோடி அரசு குறியாக உள்ளது.

 

ஆனால், புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பது போராடும் விவசாயிகளின் கோரிக்கை.  அதில் எந்தச் சமரசமும் இல்லை.

 

cnc

 

எனவே விவசாயிகளையும், நாட்டு மக்களையும் அழிக்கக் கொண்டு வரப்பட்ட புதிய வேளாண் சட்டத்தை முறியடிக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயக ரீதியில் போராடி வரும், விவசாயிகளின் குரல்வளையை நெரிக்க முயலும் மோடி அரசுக்கு, நாம் தக்க பாடம் புகட்டுவோம்.

 

மேலும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 18ஆம் தேதி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கிறது. அப்போராட்டத்தில், நானும் கலந்து கொள்கிறேன். எனேவ விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்