கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிகம் பேர் தேர்ச்சி அடைந்திருக்கிறார்களே… அதை யாரும் பாராட்ட மாட்டார்கள். நீட்டை அரசியலாக்குவதே வேலையாக இருக்கிறார்கள் என்று பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள்.
யார் அதிகமாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்? தேர்ச்சி பெற்றவர்களுக்கெல்லாம் மருத்துவ இடங்கள் இங்கே இருக்கின்றனவா? இருக்கிற இடங்கள் போக மீச்சமுள்ள தேர்ச்சி பெற்ற 7 லட்சம் பேருக்கு என்ன வாய்ப்பு வைத்திருக்கிறீர்கள்? என்ற கேள்விகளுக்கெல்லாம் அவர்களிடம் பதிலே இல்லை.
அனிதாவை பலிகொடுத்த பிறகு நடைபெறும் மூன்றாவது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இந்த தேர்வில் இந்தியா முழுவதும் மொத்தமாக 14 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில் 7 லட்சத்து 97 ஆயிரத்து 42 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதாவது மொத்தத்தில் 56.50 சதவீதம் பேர்.
தேர்ச்சி பெற்றவர்களில் ராஜஸ்தானைச் சேர்ந்த நளின் கண்டேல்வால் என்ற மாணவர் 720க்கு 701 மார்க்குகளும், டெல்லி, மற்றும் உபியைச் சேர்ந்த இரு மாணவர்கள் 720க்கு 700 மதிப்பெண்களும் எடுத்திருக்கிறார்கள்.
ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகமாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 7 லட்சத்து 80 ஆயிரம் பெண்களில் 4 லட்சத்து 45 ஆயிரத்து, 761 பேரும், 6 லட்சத்து 30 ஆயிரம் ஆண்களில் 3 லட்சத்து 51 ஆயிரத்து 278 பேரும் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்த்து அரசுக்கு இருக்கிற 36 ஆயிரத்து 615 இடங்களுக்கும் தேர்ச்சி பெற்றிருக்கிற 7 லட்சத்து 97 ஆயிரத்து 42 மாணவர்களுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்கிறது?
இருக்கிற இடங்கள் நிரப்பப்பட்ட பிறகு மிச்சமுள்ள மாணவர்களுக்கு ஏது இடம்? இவர்களுடைய தேர்ச்சி அடுத்த ஆண்டுக்கோ, அடுத்துவரும் ஆண்டுகளுக்கோ மருத்துவ இடங்களைப் பெறுவதில் முன்னுரிமை பெற்றுத்தருமா? என்ற கேள்விகளை பெற்றோர் எழுப்புகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வுக்காக ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்பரேட் கம்பெனிகள் நடத்தும் கோச்சிங் சென்டர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்தி படிப்பார்கள். அவர்களில் சில லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். சில ஆயிரக்கணக்கான மாணவர்கள் மட்டும் இடம்பெற்று படிக்கப் போவார்கள். கனவுகளுடன் லட்சக்கணக்கில் செலவழித்து படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விரல்சூப்பிக் கொண்டு அடுத்த ஆண்டும் நீட் தேர்வுக்கு காத்திருக்க வேண்டும். ஒரு பேச்சுக்கே வைத்துக்கொண்டாலும் 1 லட்சம்பேர் 720க்கு 700 மார்க் எடுத்துவிட்டால் எந்த அடிப்படையில் இடங்களை நிரப்புவார்கள்? மிச்சமிருக்கிற மாணவர்களுக்கு என்ன பதில் சொல்வார்கள்?
இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றிருக்கிற மாணவர்களில் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 20 ஆயிரத்து 9 பேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 63 ஆயிரத்து 749 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிற நிலையில், உயர்ஜாதியினர் 7 லட்சத்து, 4 ஆயிரத்து 335 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இவர்களில் எவ்வளவுபேர் இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்ச்சி பெற்றவர்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்த கணக்கு மட்டும் தெரியவில்லை என்றே போய்விடுகிறது.
இந்தத் தேர்ச்சி கணக்கு அகில இந்திய அளவிலானது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தேர்ச்சி விகிதம் உயர்சாதியினரின் தேர்ச்சி விகிதத்துக்கு மிகக் குறைவாக இருப்பதையும், மத்திய அரசு அமல்படுத்தும் 49.5 சதவீத இடஒதுக்கீடுக்கும், தமிழகம் கடைப்பிடிக்கும் 69 சதவீத இடஒதுக்கீடுக்கும் தேர்ச்சி பெற்றவர்களை எப்படி நிரப்புவார்கள் என்பதும் பெற்றோரின் இன்னொரு முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
தேர்ச்சி பெற்றவர்களிலேயே லட்சக்கணக்கான மாணவர்கள் இடம் கிடைக்காமல் ஏமாறப் போகும் நிலையில், தேர்வு எழுதி பெயிலாகி தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் மாணவர்களுக்கு இந்த அரசு தரும் பதில் என்ன?
எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, மிக சிம்ப்பிளாக, நீட்டை வைத்து அரசியல் செய்வதாக டாக்டர் தமிழிசை போன்றவர்கள் இன்னமும் சொல்வது, சமூக நீதியைக் குத்திக் கிழிக்கும் செயல் அல்லவா?