கடந்த மே 29, 30களில் கூடிய சட்டமன்றம் நெருக்கடிகளுக்கு நடுவே கூடிய சட்டமன்றம். முதல் நாள் ஸ்டெர்லைட் பிரச்சனையைப் பற்றிப் பேசவேண்டும் என்று கேட்டதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக வெளிநடப்பு செய்தது. இது அவர்களுக்கு வசதியாகிப் போக பிரச்சனைகளை குறித்துப் பேசும் நேரத்தில் அவர்களின் வழக்கப்படி... மக்கள் பிரச்சனையையெல்லாம் பேசவில்லை. தங்களுக்கே உரித்தான வழக்கத்தில் புகழ் பாடத் தொடங்கிவிட்டனர்.
இதில் உச்சகட்டம் மதுரை தொகுதி எம்.எல்.ஏ.சரவணன்தான். தொடங்கியது என்னம்மோ அவர்களது அம்மாவின் புகழில்தான். ஆனால் போகப்போக அவருடைய பாதை மாறியது போல, திடீரென இதயதெய்வம் எடப்பாடி பழனிசாமி என்று கூறிவிட்டார், கூடவே இரட்டை சகோதரர் பன்னீர்செல்வத்தையும் இதயதெய்வம் என கூறிவிட்டார். அதிமுக தொண்டர்களால் அன்போடு அழைக்கப்பட்ட இந்தப் பெயர், தற்போது இப்படி அலைக்கழிக்கப்படுகிறதே என்று கதறுகின்றனர். ஜெயலலிதா இருந்தவரை குனிந்த தலை, இல்லை, இல்லை குனிந்த முதுகு நிமிராத அமைச்சர்கள் இன்று எடப்பாடி பழனிச்சாமியை இதயதெய்வம் என்கின்றனர். இந்த ஆட்சி இன்று கலைந்துவிடும், நாளை கலைந்துவிடும் என்று பேசிக்கொண்டிருந்தாலும், தன்னை எதிர்த்தவர்களைக்கூட இப்போது தன் வசம் வரவைத்து எடப்பாடி பழனிசாமி தன் அரசியல் தந்திரத்தைக் காட்டி வருகிறார்.
தன் பதவியைக் காத்துக்கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே அரசியல்வாதிகள் கடைபிடிக்கும் மறைமுக நெறி. அன்று ஜெயலலிதா இன்று எடப்பாடி பழனிசாமி. அன்று அண்ணா, அடுத்து கலைஞர் இன்று ஸ்டாலின் என புகழ் பாடி பதவியைக் காப்பாற்றிக்கொள்ள நினைப்பவர்கள் இருக்கும்வரை இப்படியான பட்டப்பெயர்களும், புகழும், யாருக்கும் சொந்தமில்லை என்பதை நிரூபிக்கிறது...