தமிழகத்திற்கு சில தினங்களுக்கு முன்பு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கமலாலயம் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், " தமிழகத்தில் கலைஞர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியல் வெற்றிடம் நிலவுகிறது. அதனை பாஜக பயன்படுத்தி வரும் தேர்தலில் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்" என்ற தொனியில் பேசியதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ அவர்களிடம் கேள்வியை முன்வைத்தோம், நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " பாஜக கூறுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நிர்வாகம் நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் அவர்கள் சிறப்பான ஆட்சியைக் கொடுத்து வரும் சூழ்நிலையில் அதற்கான தேவை ஏற்படவில்லை.
குறிப்பாக அதிமுக கூட்டணியில் இருந்துகொண்டே அவர்களை அமித்ஷா விமர்சித்துப் பேசியுள்ளார். அவர்கள் இல்லை என்றால் இந்த சட்டமன்ற தேர்தலில் இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட அவர்களால் பெற முடியாது. அப்படி இருக்கையில் அதிமுகவை அவர்கள் விமர்சிப்பதை எப்படி அந்தக் கட்சியினர் ஏற்றுக்கொள்வார்கள். அதிமுக கூட்டணியால் நாங்கள் வெற்றி பெறவில்லை; எங்கள் சொந்த செல்வாக்கால் வெற்றி பெற்றோம் என்றெல்லாம் தற்போது புது கோஷ்டி ஒன்று கிளம்பியுள்ளது. அவர்கள் வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனியாக நிற்க வேண்டியதுதானே? இவர்களின் உண்மையான பலத்தை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கு ஒரு போதும் பாஜகவினர் தயார் இல்லை.
இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில் தற்போது அதிமுக பாஜகவின் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தவரை சமூகநீதியில் அவர்கள் யாரிடமும் விட்டுக் கொடுத்ததில்லை. ஆனால் தற்போது அவர்கள் பாஜகவின் நிலைப்பாட்டுக்குச் சென்றுள்ளது அவர்களுக்குக் கட்சி ரீதியாகவே பாதிப்பை ஏற்படுத்தும். மிகப்பெரிய தவற்றை தற்போது அதிமுக செய்துள்ளது. தவறான முன்னுதாரணத்தை அவர்கள் ஏற்படுத்தி விட்டதாகவே கருத வேண்டியுள்ளது. இது இப்படியே போய்க்கொண்டிருந்தால் அதிமுகவுக்கு மாற்றாக பாஜகவைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பை அவர்களே ஏற்படுத்தி விடுவார்கள்.
தமிழகத்தில் வெற்றி பெற்றால் இந்தியா முழுவதும் நாம் வெற்றி பெற்றதாக அர்த்தம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளதைப் பற்றி அனைவரும் கேட்கிறார்கள். நான் முன்பே சொன்னதுபோல அதற்கு வாய்ப்பே கிடையாது. இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட அவர்கள் அதிமுகவின் துணையோடு பெற்றதுதான். தனியாக நின்றால் அவர்கள் மட்டும் தனியாகத் தெருவில் நிற்க வேண்டியதுதான் வரும். அதிமுக சிதைந்திருப்பதாக இவர் சொல்கிறார். ஆனால் அந்த இயக்கத்தைச் சிதைத்ததே இவர்கள்தான். அப்படி அதிமுக சிதறுவதால் கிடைக்கும் பலனை தாங்கள் அறுவடை செய்யலாம் என்று பார்க்கிறார்கள்" என்றார்.