நல்லகண்ணு அய்யா... பொதுவாக அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என யாரும் அவரைக் குறிப்பிடும்போது அய்யா என்ற மரியாதையுடன்தான் குறிப்பிடுவார்கள். எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களும் கூட அவரை விமர்சிப்பதில்லை, காரணம் விமர்சிக்கத்தக்க வகையில், இடத்தில் அவர் என்றுமே இருந்ததில்லை. தன் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு யாருடன் இருந்தாலும், இவரது நிலைப்பாடு எப்பொழுதுமே மக்களுடன்தான். அப்படிப்பட்ட மாபெரும் தலைவரின் 94ஆவது பிறந்தநாள் கடந்த வாரம் (26 டிசம்பர் 2018) வந்தது. உறவினர், நண்பர்கள், கட்சித் தோழர்கள், பொதுமக்கள் என பலரும் அவரை வாழ்த்தினர். அன்று வெளிவந்த புகைப்படங்களில், நக்கீரன் ஆசிரியர் குடும்பத்துடன் சென்று நல்லகண்ணு அய்யாவை சந்தித்து வாழ்த்திய படங்கள் இருந்தன. அதிலும் இரண்டு குடும்பமும் ஒன்றாக அமர்ந்து எடுத்துக்கொண்ட குரூப் ஃபோட்டோ ஒன்றில் மகிழ்வும், நெகிழ்வும் நிறைந்திருந்தது. ஒரு அரசியல்வாதி - பத்திரிகையாளர் உறவு போல இல்லை அவர்கள் உறவு. ஆசிரியரிடமே கேட்டோம்... இந்தப் புகைப்படத்தில் உறைந்திருக்கும் அந்தத் தருணம் நிகழ்ந்தது எப்படி, உங்களுக்கும் அவருக்கும் இடையிலான உறவு எப்படி என்று. சிரித்துக்கொண்டே, மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்...
"2010இல் தமிழக அரசு எனக்கு 'பெரியார் விருது' வழங்கியது. கலைஞர் கையால் அந்த விருதைப் பெற்ற போது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. அதன் பிறகு இப்போது 2018ஆம் ஆண்டு 'பிஹைண்ட் உட்ஸ்' எனக்கு அளித்த விருதை நல்லகண்ணு அய்யா கையால் பெற்றபோது வாழும் பெரியார் கையால் இந்த விருதைப் பெறுகிறோம் என்ற பெருமை எனக்கு ஏற்பட்டது. அதை நான் அந்த மேடையில் சொன்னேன். வாழும் பெரியார் என்றால் வெறும் புகழ்ச்சிக்காக சொல்வது இல்லை. உண்மையாக நான் உணர்வது. 94 வயதிலும் நல்லகண்ணு அய்யா, நடந்தே கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார், மீட்புப் பணியில் பங்களித்தார். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் கொஞ்சமேனும் தண்ணி ஓடுதுன்னா அதுக்குக் காரணம் நல்லகண்ணு அய்யா வழக்கு நடத்தி குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க வாங்கிய தடைதான். இன்றும் சிவகாசி பட்டாசு ஆலை தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் என்றால் அவர்தான் முன்னின்று போராடுகிறார். இப்படி, இத்தனை வயதில், வைரம் பாய்ஞ்சு தன் உடலுடன் மக்களுக்காக சுற்றி சுற்றி செயல்படும் ஒரு தலைவருடன் நமக்கு அறிமுகம் இருக்கிறது என்பதே பெரிய விஷயம். அவர் நம் மீது, நம் குடும்பத்தின் மீது பாசம் வைக்கிறார் என்பதெல்லாம் எனக்குக் கிடைச்ச பேறுதான்.
நல்லகண்ணு அய்யாவுக்கு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெரிய வரலாறு இருக்கு, பெரிய தலைவர்களின் பழக்கம் இருக்கு. எத்தனையோ தருணங்களில் பெரிய பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கு. இந்தியா முழுவதும் அவர் மேல் அன்புள்ள அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் இருக்கிறார்கள். இது எதையுமே அவருக்காகவோ, அவரது குடும்பத்தினரின் யாருக்காகவுமோ பயன்படுத்தியவர் இல்லை. பல அரசியல் தலைவர்கள் எளிமையானவர்கள்தான். ஆனால், அவர்களது குடும்பத்தில் யாரோ ஒருவர் ஏதோ ஒரு பயனடைந்திருப்பார். இப்படிப்பட்ட அரசியல் உலகில் தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தின் எந்த உறுப்பினரும் எந்த வகையிலும் அரசியலால் பலனடையாமல் தூய வாழ்க்கையை வாழ்பவர் நல்லகண்ணு அய்யா. பொதுவாகவே கம்யூனிஸ்டுகளின் கொள்கை இதுதான் என்றாலும், நல்லகண்ணு அய்யா என் கண் முன்னே இப்படி வாழ்பவர்.
ஒவ்வொரு வருடமும் அய்யாவின் பிறந்தநாள் எப்பொழுது வரும் என்று காத்திருந்து அவரைப் போய் பார்ப்பேன். மற்ற நாட்களிலும் அவரை சந்திப்பது நடக்கும் என்றாலும், அந்த நாளில் அவரது குடும்பத்துடன் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த முறை யார் யார் வர்றாங்கன்னு முன்னாடியே கேட்டுக்கிட்டேன். அவுங்களும் "மாமா எப்போ அப்பாவைப் பார்க்க வர்றீங்க?"ன்னு கேட்டாங்க. என் இளைய மகள், வழக்கறிஞரா உருவாகிக்கிட்டு இருக்காங்க. அவுங்க, "அப்பா, தாத்தாவுக்கு குளோப் ஜாமூன் ரொம்பப் பிடிக்கும்"னு சொல்லி முந்துன நாளே அவுங்க கையாலேயே செஞ்சு கொண்டு போய் கொடுத்தாங்க. அதை விரும்பி சாப்பிட்டவர், காலையில் என்னிடம் சொன்னார், "பேத்தி குளோப் ஜாமூன் கொண்டுவந்துச்சு, ரொம்ப நல்லா இருந்துச்சு"ன்னு. நல்லகண்ணு அய்யாவின் மனைவி ரஞ்சிதம் ஆச்சிக்கு என் மனைவி, குழந்தைகள் மேல் ரொம்பப் பிரியம். அவுங்க தவறினப்போ எங்க குடும்பத்துல ஒரு இழப்பாதான் நாங்க உணர்ந்தோம். இந்த பிறந்தநாளுக்கு என் மூத்த மகள் இல்லையேன்னு அவர் கேட்டார். என் மூத்த மகள் நக்கீரனின் வெள்ளி விழாவுக்கு உருவாக்குன நக்கீரன் சில்வர் ஜூபிலி வீடியோவைப் பார்த்துட்டு "பேத்தி பெரிய ஆளா வருவாங்க"ன்னு உச்சி முகர்ந்தார். அய்யா அவரது குடும்பத்தினர் பேரன், பேத்திகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். ரொம்ப பாசமா இருப்பார். அவரது குடும்பத்தினரும் அதே பாசத்துடன் அவரை கவனிப்பவர்கள்.
இந்த முறை அவருக்குப் பிறந்த நாள் வந்த போதும் ஆவலோடு காத்திருந்து நான், என் மனைவி, இளைய மகள், என் தம்பி மகன்கள் அனைவரும் போய் அய்யாவைப் பார்த்தோம். அங்க இருந்த அவருடைய குடும்பத்தினரும் நாங்களும் ரொம்ப மகிழ்ச்சியா பேசிக்கிட்டுருந்தோம். இயல்பா பேசிக்கிட்டுருக்கும்போது 'நாம எல்லோரும் சேர்ந்து ஒரு குரூப் ஃபோட்டோ எடுத்துக்கலாமே'னு பேசினோம். அந்த ஃபோட்டோவில் அந்த தருணத்தின் மகிழ்ச்சி, பெருமை எல்லாம் அப்படியே உறைஞ்சுருக்கு. நல்லகண்ணு அய்யா காலத்துக்கும் நலமோடு வாழணும், அவரோடு நாங்களும் இருக்கணும். இது ஒரு சின்ன பேராசை" என்று நெகிழ்வான குரலில் நக்கீரன் ஆசிரியர் சொன்னபோது, அந்த புகைப்படத்தின் உள்ளே அன்பு, மரியாதை, பாசம், சமூக அக்கறை என அத்தனையும் பொதிந்திருப்பது நமக்குப் புரிந்தது. அத்தனை அழகாக அந்தப் புகைப்படம் அமைந்ததற்கு அவையே காரணம் என்று தெரிந்தது.