Skip to main content

கொடூர விபத்து! -அதிர்ச்சியான இ.பி.எஸ். & ஓ.பி.எஸ்.!

Published on 28/02/2019 | Edited on 04/03/2019

மெகா கூட்டணி அமைந்துவிட்ட சந்தோஷத்தில், கூட்டணியின் தலைமைக் கட்சியான அ.தி.மு.க.வின் முன்னணியினரை விருந்துக்கு அழைத்தார் பா.ம.க.வின் நிறுவனரான டாக்டர். ராமதாஸ். சென்னையிலிருந்து புறப்பட்ட முதல்வர் எடப்பாடியும் மதுரையிலிருந்து புறப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் 21-ஆம் தேதி இரவு 8 மணிக்கு திண்டிவனம் வந்தனர். அங்கே ஒரு மினி பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் மாவட்ட மந்திரியான சி.வி.சண்முகம். அந்தக் கூட்டத்தில் மைக் பிடித்த எடப்பாடி, தி.மு.க.வை ஒரு பிடிபிடித்துவிட்டு, ""கடந்த தேர்தலில் அம்மாவுக்கு எப்படி வெற்றியைக் கொடுத்தீர்களோ, அதேபோல் இந்த முறையும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்'' என தொண்டர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.
pmkfest
கூட்டம் முடிந்து இரவு 9.25-க்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உட்பட அ.தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள், தைலாபுரம் தோட்டத்திற்குள் நுழைந்தார்கள். 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது நடந்த கலவரத்தில் அ.தி.மு.க.வினரும் பா.ம.க.வினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். அந்த மோதலில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினரான முருகானந்தம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். சி.வி.சண்முகம் காருக்கு அடியில் படுத்து, மயிரிழையில் உயிர் தப்பினார்.

அப்போதிருந்தே சி.வி.சண்முகத்திற்கும் பா.ம.க. தலைமைக்கும் ஏழாம் பொருத்தம்தான். அந்த பழைய பகை நினைப்பில்தான், அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி ஒப்பந்தம் ஸ்டார் ஓட்டலில் கையெழுத்தானபோது, சண்முகம் அங்கு செல்லவில்லை. எனவே திண்டிவனம் பொதுக்கூட்டத்துடன் சரி, தைலாபுரம் விருந்துக்கு செல்வதில்லை என்ற முடிவோடுதான் இருந்தார் சி.வி.சண்முகம். ஆனால் எடப்பாடியோ "பழசு எதையும் மனசுல வச்சுக்காதீங்க, வண்டில ஏறுங்க' என சண்முகத்தை வற்புறுத்தி அழைத்ததன் பேரில் தைலாபுரம் தோட்டத்திற்குள் எண்ட்ரியானார் சி.வி.சண்முகம்.

முதல்வர் உட்பட கேபினெட்டே ஆஜராவதால், தோட்டத்தைச் சுற்றிலும் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தோட்டத்திலிருக்கும் விருந்தினர் வரவேற்பு அறைக்குள் இருபத்தைந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கட்சியின் மற்ற முன்னணியினரின் கார்களை வெளியிலேயே நிறுத்திவிட்டதால், போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. முதல்வர் உட்பட அமைச்சர்கள் அனைவருக்கும் சால்வை போர்த்தி வரவேற்றனர் ராமதாஸும் அன்புமணியும். பழைய பகை மறந்த புது விருந்தினரான சி.வி.சண் முகத்துக்கு சிறப்பு வரவேற்பு தரப்பட்டது. பரஸ்பர நலவிசாரிப்புகள், சிறிது நேர அளவளாவல்களுக்குப் பின் விருந்து மண்டபத்திற்கு அனைவரும் சென்றனர்.

ஆம்பூரிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த சமையல் கலைஞர்களின் கைப்பக்குவத்தில் தயாரான சிக்கன், மீன் வகையறாக்கள் உட்பட 80 வகை உணவுகள் ரெடியாக இருந்தன. அவற்றை இரு கட்சிகளின் முன்னணியினர் ஒருகை பார்த்தாலும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., டாக்டர் ராமதாஸ் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சைவ உணவுகளை மட்டுமே விரும்பிச் சாப்பிட்டனர். கூட்டணி நல்லபடியாக அமைந்திருப்பதால் அசைவம் வேண்டாமே என ராமதாஸிடம் எடப்பாடி சென்டிமெண்டாக ஃபீல் பண்ணியதால்தான் சைவமாம். 55 நிமிடங்களில் நடந்து முடிந்த கோலாகல விருந்துக்குப் பின் எடப்பாடி உட்பட அனைவரும் இரவு 10.30-க்கு தைலாபுரம் தோட்டத்தைவிட்டுப் புறப்பட்டனர், வெளியில் காத்திருந்த ஏகப்பட்ட மீடியாக்களிடம் எதுவும் பேசாமல்.
pmkfest
அனைவரையும் வழியனுப்பிவிட்டு, இரவு 12 மணிக்கு மேல் விழுப்புரத்தில் இருக்கும் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார் எம்.பி. ராஜேந்திரன். அதிகாலை 4 மணிக்கு எழுந்து, தனது உதவியாளர் தமிழ்ச்செல்வனுடன் சென்னைக்குப் புறப்பட்டார் எம்.பி. ராஜேந்திரன். எம்.பி.யுடனேயே பகல் முழுவதும் பயணித்து, இரவில் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கி ஓய்வெடுத் திருந்ததால், சரியான தூக்க கலக்கத்தில் இருந்தார் டிரைவர் அருமைசெல்வம். இதன் விளைவால்தான் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவர் மீது கார் பலமாக மோதியதில், காரின் முன்பகுதி நொறுங்கி, டிரைவரின் அருகில் இருந்த எம்.பி.ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். டிரைவர் அருமை செல்வமும் எம்.பி.யின் உதவியாளர் தமிழ்ச்செல்வனும் விழுப்புரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டனர்.

22-ஆம் தேதி பொழுது விடிந்ததும் இந்த சோக செய்தியைக் கேள்விப்பட்ட இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் பதறியடித்து ஓடி வந்து ராஜேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தயவால் மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் ஆகி, 2014-ல் எம்.பி.யு மானார் ராஜேந்திரன். வானூர் அருகே உள்ள அதனப்பட்டு என்னும் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், சாதுவான அரசியல்வாதி என்று பெயரெடுத்தவர். இவருக்கு சாந்தா என்ற மனைவியும் திவ்யா, தீபிகா என்ற மகள்களும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். ராஜேந்திரன் மரணத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் ஜெ. பிறந்த நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த கோரவிபத்து நடந்த இரண்டே நாட்களில், அதாவது 24-ஆம் தேதி, கட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக கள்ளக்குறிச்சி எம்.பி. காமராஜ், காரில் போய்க் கொண்டிருந்த போது, தலைவாசல் அருகே, கார் தலைகுப்புற கவிழ்ந்து, அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பியிருக்கிறார் காமராஜ். மேற்கண்ட இரு சம்பவங்களும் அ.தி.மு.க. தொண்டர்களிடையே ராங் சென்டிமெண்டை ஏற்படுத்தியதால் ஷாக்காகியுள்ளனர்.