Skip to main content

அன்று விவசாயத்தின் பிடியில், இன்று கார்ப்பரேட்டுகளின் பிடியில்... மனமகிழ் விவசாயம் முதல் மண் அழியும் ஓ.என்.ஜி.சி. வரை நாகப்பட்டிணம் வரலாறு

Published on 18/10/2018 | Edited on 18/10/2018
Nagapattinam



தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள நாகை மாவட்டம், ஒரு காலத்தில் சோழநாடு என்றும், பிறகு சுதந்திர இந்தியாவின் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் கீழ் தஞ்சையாகவும் இருந்து, நாகை காயிதே மில்லத் மாவட்டமாக உதயமான நாள் இன்று.
 

ஆங்கிலேயர் ஆட்சிகாலம்வரை, தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பிறகு நிர்வாக வசதிக்காக தற்போது உள்ள திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளையும் உள்ளடக்கி, தஞ்சை மாவட்டத்தில் இருந்து 1991, அக்டோபர் 18ஆம் நாள் நாகையை தலைநகராகக்கொண்ட நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

 

Nagapattinam


 

இன்றைய நிலவரப்படி, நான்கு நகராட்சிகளையும், 11 ஊராட்சி ஒன்றியங்களையும், 10 பேரூராட்சிகளையும், 432 ஊராட்சி மன்றங்களையும், உள்ளடக்கியதுதான் நாகப்பட்டினம்.
 

மேலும் சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய பாராளுமன்ற தொகுதியையும் கொண்டு விளங்கிவருகிறது. 

 

Nagapattinam


டெல்டா மாவட்டத்தின் கடை மடைபகுதியாக இருந்துவரும் இந்த மாவட்டம் மழைக்காலத்திலும், தண்ணீர்பஞ்சம் வரும்போதும், சுனாமியாக இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது நாகைதான், இது வழக்கமான நிகழ்வாகவே இருக்கிறது. 
 

சுனாமியில் இந்த மாவட்டம் பெரும் பின்னடைவை சந்தித்தது. அந்த பேரழிவில் இருந்து இன்னும் நாகை மாவட்டம் முழுமையாக மீளவில்லை. ஆண்டு தோறும் சுனாமி ஒத்திகையை அரசு நிர்வாகம் நடத்துகிறது. சுனாமி நினைவு நாளில் மீனவர்களும், கடலோரத்தில் இருக்கும் மக்களும் கடல்கொன்ற மக்களின் நினைவை வணங்குகின்றனர்.

 

Nagapattinam


 

மீன்பிடிதொழிலும் அதற்கு நிகராக விவசாயமும் ஓரு காலத்தில் ஓங்கி இருந்தது. மயிலாடுதுறை, குத்தாலம், கொள்ளிடம், நாகப்பட்டினம் முதலிய இடங்களில் நெல்விளைச்சல் அதிகமாகவே இருக்கும். நெல்லை தவிர கரும்பு, வாழை, ராகி, காய்கறிகள், பூக்கள் முதலியவைகளும் விளைவிக்கப்பட்டன.
 

ஆனால் இன்று அனல்மின்நிலயங்களின் ஆதிக்கம், இறால்குட்டைகளின் ஆக்கிரமிப்பு, ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் ஊடுருவலால் பெரும்பகுதியான விவசாயம் பொய்த்துவிட்டது. தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் பட்டியலில் முதல் இடம் பிடிக்கிற மாவட்டமாக விளங்கி வருகிறது. 

 

Nagapattinam



கொள்ளிடம் ஆற்றின் கரையோரமுள்ள திருமுல்லைவாசலில் துவங்கி தெற்கே கோடியக்கரை வரையிலும் 120 கி.மீ கடற்கரையைக்கொண்டிருப்பதால் மீன்பிடித்தல் தொழில் அமோகமாக விளங்கி வருகிறது. 
 

பூம்புகார், நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய இடங்களில் பெரிய அளவில் மீன்பிடித்தொழில் நடக்கிறது. மீனும், கருவாடும் நாகையிலிருந்து ஏற்றுமதி செய்கின்றனர். அதோடு மீனவர்களுக்காக மீன்வள பயிற்சிநிலையமும், மீன்வளப்பல்கலைக்கழகமும் மீன்பிடி தொழிலை கற்றுக்கொடுக்கிறது. மீன்பிடி தொழிலுக்கும் விவசாயத்திற்கும் நடுவில் உப்பளத்தொழில் சில இடங்களில் நடக்கிறது. 


 

Nagapattinam


நாகையின் வரலாறு எப்படிப்பட்டது வழக்கறிஞரும் சமுக ஆர்வளருமான வேதாரண்யம் பாரிபாலன் கூறுகையில், ‘’ 1782-முதல் நாகப்பட்டினத்தைத் தலைநகராகக்கொண்டே பிரிட்டிஷார் தஞ்சை மாவட்டத்தை ஆளத்தொடங்கினர். 
 

1844- நாகப்பட்டினத்தில் அர்ச். சூசையப்பர் கல்லூரி தொடங்கப்பட்டது வணிகத்தை பெருக்கவே. 1861 நாகையிலிருந்து தஞ்சைக்கு இரயில்பாதை போடப்பட்டது. 1866-இல் நகராண்மைக் கழகம் நிறுவப்பட்டது. தென்னிந்திய இரயில்வேயின் தொழிற்கூடமும் பல ஆண்டுகளாக நாகையில் தான் இருந்தது. 1928-இல் இத்தொழிற்கூடம் திருச்சியை அடுத்துள்ள பொன்மலைக்கு கொண்டுசென்றனர். 

 

Nagapattinam



இதன் விளைவாக தொழிலாளர்கள் நாகையிலிருந்து பொன்மலைக்கு சென்றனர். நாகையில் இருந்த பெரும் தொழில் அதிபர்கள், தொழில் நிறுவனங்கள் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுவிட்டன. 
 

புகழ்பெற்று விளங்கிய நாகை துறைமுகம் 1941-க்குப்பிறகு தனது முக்கியத்துவத்தை இழந்தது. அந்த இடத்தை தற்போது தூத்துக்குடி பெற்றுள்ளது. டச்சு ஆட்சியின் அடிச்சுவடாக செயிட் பீட்டர் தேவாலயம், ஹாலண்டு பங்களா, 20 அடி உயரமுள்ள கொடிமரம், டச்சுமார்கெட், ஹாலாண்டு ரோடு போன்றவை இன்றளவும்  இருக்கிறது.

 

Nagapattinam


வேளாங்கண்ணி மாதா கோவில், நாகூர் தர்கா, எட்டுக்குடி, சிக்கல் முருகன், நவக்கிரக ஸ்தலங்களான திருவெண்காடு, வைத்தீஸ்வரன்கோயில், கீழப்பரும்பள்ளம்கோயில், மயிலாடுதுறை மயூரநாதர், திருக்கடையூர் உள்ளிட்ட கோவில்களைகொண்டு இந்து, கிருஸ்துவ, முஸ்லீம் சமயங்களின் சமரச மாவட்டமாக இன்றளவிலும் விளங்குகிறது. 
 

அதோடு சமயத்தையும், தமிழையும் வளர்த்திடும் விதமாக உருவாக்கப்பட்ட திருவாடுதுறை ஆதீனமும், தருமபுரம் ஆதினமும் இன்றளவும் வரலாற்றின் சான்றாகஇருக்கிறது. 


சோழரின் தலைநரமாகவும், துறைமுக நகரமாகவும், வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகாரும் நாகை மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்கிறது. பல நாட்டு வணிகர்கள் புழங்கிய தெருக்களும், கண்ணகி, கோவலன், மணிமேகலை முதலியோர் வாழ்ந்த வாழ்க்கையினை மறைந்த முன்னாள் முதல்வரான கலைஞரின் கைவண்ணத்தால் கலைக்கூடமாக இன்றும் கம்பீரமாக இருக்கிறது. அதனை காண்பதற்கு இன்றும் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து மகிழ்கின்றனர்.
 

போர்ச்சுக்கீசிய கப்பல் கடலில் சிக்கி சின்னாப்பின்னமடைய இருந்த நேரத்தில் கரை சென்றால் கன்னிமேரிக்கு கோயில் எடுப்போம் என்று வேண்டிக்கொண்டதால் கி.பி. 1565 வேளாங்கண்ணி கடற்கரையில் மாதா ஆலயம் நிறுவினர்.


அங்கு தினசரி மக்கள் வந்துபோனாலும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30 தொடங்கி, செப்டம்பர் 8 வரை ஆரோக்கிய மாதாவின் நினைவாக பெரிய திருவிழா இன்றளவும் நடைபெறுகிறது.
 

நாகப்பட்டினத்திற்கு 40 கி.மீ. வடக்கேயும், மயிலாடுதுறைக்கு 30 கி.மீ. கிழக்கேயும், வங்காள விரிகுடா கடலோரத்திலுள்ள துறைமுக நகரமாக இருந்துவந்த தரங்கம்பாடி கோட்டை இன்றும் கான்போரை மெய்சிலிற்க வைக்கிறது. 

 

சீகன்பால்க் என்ற ஜெர்மானியர் தமிழ் எழுத்துக்களை ஜெர்மனியில் செய்ய சொல்லி தரங்கம்பாடியில் அச்சிட்டார். 'புதிய ஏற்பாடு' 1715-இல் இங்குதான் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது சிறு நகரமாக இருந்தாலும், பழைய கட்டிடங்கள், பாழடைந்துள்ள சின்னங்கள், டேனிஷ்காரரின் புகழ்பரப்பும் கோட்டை, மசூதி, கோயில்கள், பள்ளிக்கூடங்கள் இன்னும் சுற்றுலா பயணிகளை சுண்டி இழுத்துக்கொண்டுதான் இருக்கிறது.
 

நாகை மாவட்டத்தின் கடைகோடி பகுதியான, வேதாரண்யத்திற்கு தெற்கே இருக்கும் கோடியக்காட்டில் மான்களும், குதிரைகளும், நரிகள் போன்ற விலங்குகளும் உள்ளன. பறவைகளின் சரணாலயமும் இங்குள்ளது, சீசனுக்கு சீசன் பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வந்துசுற்றுள்ளா பயணிகளை மகிழ்விக்கிறது. 
 

மான்கள் அதிகம் இருந்ததால் பண்டையக் காலத்தில் இவ்வூரை 'திருமரைக்காடு' என்று அழைக்கப்பட்டிருக்கிறது. 1930-ஆண்டு சர்தார் வேதரத்தினம் பிள்ளை தலைமையில் ராஜாஜி 'உப்பு சத்தியாகிரகம்' செய்த இடமானதால் இந்தியா முழுவதும் தெரிய துவங்கியது.  
 

தமிழிசைக்குத் தரமான பாடல்களைத் தந்த அருணாசலக் கவிராயர் பிறந்ததும், தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளுடன் போராடிய தில்லையாடி வள்ளியம்மை பிறந்ததும் நாகை மாவட்டத்தில் உள்ள தில்லையாடியில்தான். வள்ளியம்மையை நினைவு கூரும் வகையில் அவருக்கு நினைவுமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 

 



மயிலாடுதுறையில் வேதநாயகத்தின் சமாதியும் இருக்கிறது. வேதநாயகத்தின் சமாதி எப்படி சிறைபட்டு இருக்கிறதோ அதுபோலவே நாகைமாவட்டமும், நாகை மாவட்டத்தின் தொன்மையான வரலாறும் சிறைப்பட்டுக் கிடக்கிறது என்கிறார் வேதனையுடன்.
 

’’திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் பிறந்த திருக்குவளையும் நாகை மாவட்டத்தில்தான் இருக்கிறது. அவர் பிறந்த ஊருக்கு ஆட்சியில் இருக்கும்போது சகல வசதிகளையும் கொண்டு வந்தார், அதோடு அண்ணா பல்கலைக்கழகத்தையும் கொண்டுவந்து புகழ் சேர்த்தார். ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அதனையெல்லாம் சிதைத்து வருகின்றனர். 
 

அதே போல் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் மணல்மேடு என்னும் இடத்தில் நூல்மில் ஆலையும், தலைஞாயிற்றில் சர்க்கரை ஆலையும் உருவாக்கினார். அவர் பெயர் கூறி நூற்றாண்டுவிழா கொண்டாடும் அதிமுக அரசு அதற்கு மூடுவிழா நடத்திவிட்டனர்.
 

வரலாற்றில் மறக்க முடியாத, மறைக்க முடியாத கீழவெண்மணியும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகில்தான் இருக்கிறது. கூலிக்காக போராடி தீயில் கருகிய போராளிகளுக்காக மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியினர் மணிமண்டபம் கட்டி ஆண்டு தோறும் நிகழ்வை பறைசாற்றி வருகின்றனர். 

 

Nagapattinam


 

இலங்கை கடற்பகுதிக்கும், தமிழக கடற்பகுதியான கோடியக்கரைக்கு இடையில் 20 நிமிடத்தில் பயணிக்கும் தூரம் என்பதால் விடுதலைப்புலிகள் இருக்கும் வரை இருநாட்டு மீனவர்களும் அங்கும் இங்குமாக மீன்பிடித்துள்ளனர். அதை சாதகமாக்கிகொண்ட சிலர் தங்கம், கஞ்சா உள்ளிட்டவைகளை கடத்தியும் வந்தனர். 
 

 

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி இறப்பிற்கு பிறகு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆங்காங்கே காவல் கண்காணிப்பகம் அமைக்கப்பட்டது. ஆனால் இன்று முக்கால் பகுதி காவலர்களின் பற்றாக்குறையால் முடிங்கிவிட்டது, கடத்தலும் ஜோராக நடக்கிறது. ஆளும் அதிமுக அரசை போலவே நாகை மாவட்டமும் செயலற்றுக்கிடக்கிறது’’ என்கிறார் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர்.

 

 

 

 

 

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.