கரோனா ஒழிப்பிற்காக பிரதமர் தனிப்பட்ட முறையில் திரட்டிய பி.எம்.கேர் நிதியில் இருந்து 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்துள்ளார். இதுதவிர உலக வங்கியிடம் இருந்தும் கரோனா ஒழிப்பிற்காக நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களைத் தமிழக அரசு திரட்டியுள்ளது. ஆனால் இந்தத் தொகை எல்லாம் எங்கே போனது என மர்மம் நிறைந்த கேள்விகளைக் கேட்கிறார்கள் தமிழக சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்கள்.
கடந்த வியாழக்கிழமை 11,773 பேருக்கு சோதனைகளை நடத்தியது தமிழக சுகாதாரத்துறை. அந்தச் சோதனையில் 447 பேருக்கு கரோனா நோய் பாதித்தது எனக் கண்டுபிடித்தது. மொத்தம் 9,674 கரோனா நோயாளிகளைப் பெற்று இந்தியாவிலேயே 2 ஆவது இடத்தைப் பெற்றது தமிழகம்.
புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 4.02 சதவிகிதம் கரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். மாறாக, வியாழக்கிழமை அன்று 3.08 சதவிகிதம் நோயாளிகள்தான் கண்டுபிடிக்கப்பட்டார்கள். அதுவரை 500க்கும் மேல் சென்றுகொண்டிருந்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 400ஐ தொட்டது.
உலக சுகாதார அமைப்பு நிறைய சோதனைகளை மேற்கொள்ள வேண்டும், சோதனைகள் மூலம் புதிய புதிய நோயாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும், ஒருநோயாளி இருபது நிமிடம் நோய் இல்லாதவரிடம் பேசிக்கொண்டிருந்தாலே நோய் இல்லாதவருக்கு கரோனா நோய் வந்துவிடும் என எச்சரிக்கிறது. இதற்கு நேர்மாறாக தமிழகத்தில் கரோனா நோய் பரிசோதனைகள் குறைக்கப்பட்டது ஏன்? எனத் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டோம்.
அதற்கு அவர்கள், "கரோனா நோயைச் சோதனை செய்யக்கூடிய பி.சி.ஆர். சோதனை கருவிகள் மிகக் குறைவாக இருப்பதுதான் தமிழக அரசு சோதனைகளைக் குறைத்ததற்கான காரணம்'' என்கிறார்கள்.
சோதனை செய்யக்கூடிய பி.சி.ஆர். கருவிகளை ஒருமுறைதான் பயன்படுத்தமுடியும். அதனால்தான் 10 லட்சம் பி.சி.ஆர். கருவிகளுக்குத் தமிழக அரசு ஆர்டர் கொடுத்தது. கொரிய நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட அந்த ஆர்டர்படி ஒரு லட்சம் பி.சி.ஆர். கருவிகள் வந்துவிட்டது எனக் கடந்த வாரம் தமிழக அரசு பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் திடீரென பி.சி.ஆர். கருவிகள் பற்றாக்குறை ஏன் வந்தது? எனக் கேட்டோம். ஒரு லட்சம் பி.சி.ஆர். கருவிகள், கொரிய நிறுவனத்திடம் இருந்து வரவில்லை. வந்ததாகச் சொல்லப்படும், பி.சி.ஆர். சோதனைக் கருவிகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை என்கிறார்கள்.
பி.சி.ஆர். சோதனைக் கருவிகள் பற்றாக் குறையால் கரோனா சோதனை செய்வது நிறுத்தப்பட்டது என்பது எங்களுக்கே அதிர்ச்சியான தகவலாகத்தான் இருக்கிறது. பி.சி.ஆர். கருவிகள் கரோனாவில் இருந்து டாக்டர்களையும், நர்சுகளையும் பாதுகாக்கும் பி.பி.இ. ஆடைகள் என அனைத்தையும் வாங்குவதற்கான ஒப்பந்தங்களைத் தமிழ்நாடு மெடிக்கல் சேல்ஸ் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குனர் உமாநாத் மற்றும் அந்த நிறுவனத்தில் முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் நெருக்கமான கண்சல்டன்ட் ஆனந்த் ஆகியோர் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
இப்பொழுது கூட சீன நிறுவனத்திடம் இருந்த வெண்டிலேட்டர்களை வாங்குவதற்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் ஆர்டர்களைத் தமிழக அரசு கொடுத்திருக்கிறது. சீனாவைச் சேர்ந்த இந்தத் தரம் குறைவான கம்பெனியிடம் வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்கு டாக்டர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அதையும் மீறி முதலமைச்சர் எடப்பாடி, நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்க்கு வெண்டிலேட்டர்களை வாங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். இது ஒரு மிகப்பெரிய ஊழல் என பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறார்கள் சுகாதாரத்துறை வல்லுநர்கள்.
தமிழகத்தில் கரோனாவின் நிலை எப்படி இருக்கிறது என நடத்தப்படும் சோதனைகள் முறையானதாக இல்லை. தேவைக்கேற்றவாறு சோதனைகளைக் குறைவாகவும், அதிகமாகவும் நடத்தி கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்காட்டு கிறார்கள். உண்மையில் தமிழகத்தில் கரோனா நோய்ச் சோதனைகள் சரியான எண்ணிக்கையில் நடத்தப்பட்டால் மகாராஷ்டிராவைத் தாண்டி முதலிடத்திற்குக் கூட தமிழகம் வரும் என எச்சரிக்கிறார்கள்.
நந்தம்பாக்கம் வணிக வளாகத்தில் கரோனா நோயாளிகளுக்கென ஒரு சிறப்பு மையத்தை மாநகராட்சி உதவியுடன் தமிழக அரசு நிறுவியது. அந்த மையத்தில் போதிய வசதிகள் இல்லை என நோயாளிகள் சண்டை போட்டதால் அவர்களை எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி, மீனாட்சி மிஷன் போன்ற மருத்துவ மனைகளுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது.
இதுதவிர அங்கங்கே இருக்கக்கூடிய வசதி குறைந்த மையங்களுக்குக் குறைந்த அளவு நோய்த் தொற்றுள்ள கரோனா நோயாளிகளைத் தமிழக அரசு அனுப்பி வைக்கிறது. அவர்கள், அங்கு மருத்துவ வசதிகள் போதவில்லை என நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமாக தமிழக அரசின் கரோனா சிகிச்சை மையங்கள் போராட்டங்களைச் சந்தித்து வருகின்றன. இதற்கிடையே அப்பல்லோ போன்ற தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பணக்கார நோயாளிகளிடம் நாள் ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சம் சிகிச்சைக்காக வாங்குகிறார்கள் எனப் புகாரும் எழுகிறது.
கோவையில் கரோனா நோய் இல்லை என்கிற நிலையை உருவாக்கிவிட்டதாக அமைச்சர் வேலுமணி அறிவிக்கிறார். அங்கும் ஈஷா யோகா மையத்தில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகள் பற்றிய எண்ணிக்கை மறைக்கப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகிறார்கள். இதற்கிடையே அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், செயலாளர் பீலா ராஜேஷ்க்கும் இடையே ஒரு கடும் சண்டை சுகாதாரத்துறையில் நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடியின் தீவிர ஆதரவாளராக பீலா ராஜேஷ் மாறிவிட்டார். அதனால் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் எனத் தினமும் அறிக்கை தரும் பொறுப்பையும் பீலா ராஜேஷிடம் இருந்து விஜயபாஸ்கர் பறித்துக்கொண்டார்.
கரோனா ஒழிப்பிற்காக பல்வேறு மருத்துவப் பணியாளர்களைச் சமீபத்தில் விஜய பாஸ்கர் நியமனம் செய்தார். மருத்துவப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க தனியான தேர்வாணையம் உள்ளது. அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவப் பணியாளர்களை அவரது சொந்த மாவட்டங்களில் நியமனம் செய்யாமல் வெவ்வேறு மாவட்டங்களில் நியமனம் செய்தார். அவர்கள் தங்களது சொந்த மாவட்டத்திற்குப் பணிமாறுதல் செய்ய வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் தர வேண்டும் என்று கோடிக் கணக்கில் விஜயபாஸ்கர் வசூல் செய்கிறார்.
அதேபோல் சுகாதாரத்துறையில் அரசு சார்பு செயலாளராக விஜயபாஸ்கருக்கு நெருக்கமான ஒருவரை விதிமுறைகளை மீறி நியமனம் செய்திருக்கிறார் என பீலா ராஜேஷ் தரப்பு அமைச்சர் மீது குற்றம் சாட்டுகிறது. இப்படி அதிகாரப்போட்டி, ஊழல், வெளிப்படைத்தன்மை என எதுவும் இல்லாமல் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது.
கரோனாவுக்காக அரசு இதுவரை 6 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து பெற்றிருக்கிறது. இதுதவிர உலக வங்கி போன்ற கடன் கொடுக்கும் நிறுவனங்களிடம் இருந்தும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பெற்றிருக்கிறது. இந்தப் பணத்தைத் தமிழக அரசு எப்படிச் செலவு செய்தது என்பது பற்றிய முழுமையான தணிக்கை விவரங்கள் தமிழக சுகாதாரத்துறையிடம் இல்லை. இது பெரும் ஊழல் என எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இது தவிர தமிழகத்தில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்கள் கோடிக் கணக்கான ரூபாய் நிதிகளாகவும், உபகரணங்களாகவும் அளித்துள்ளன. இந்தியாவில் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான எல்&டி நிறுவனம், கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் நூற்றுக்கணக்கான படுக்கைகளுடன் அதிநவீன வெண்டிலேட்டர்களுடன் ஒரு பெரிய மருத்துவமனையையே தமிழக அரசுக்குக் கொடுத்தது. அந்த மருத்துவமனையை இன்று வரை தமிழக அரசு பயன்படுத்தவே இல்லை என வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.