தலைமைச் செயலாளர் சண்முகத்திற்கு எதிராக உரிமை மீறல் பிரச்சனையை நாடாளுமன்றக் கூட்டத்தில் எழுப்ப தீர்மானித்து அதற்கான கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் டி.ஆர்.பாலுவும் தயாநிதியும் கொடுத்துள்ளனர். விரைவில் துவங்கவிருக்கும் மழைக்கால கூட்டத் தொடரில் இந்தப் பிரச்சனை வெடிக்கவிருக்கிறது.
தி.மு.க. எம்.பி.க்கள் கொடுத்துள்ள உரிமை மீறல் விவகாரம், மத்திய அமைச்சரவை செயலர் மூலம் பிரதமர் மோடியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தைத் தொடர்புகொண்டு பிரதமர் அலுவலக அதிகாரிகள் விசாரித்திருக்கிறார்கள்.
அப்போது, தி.மு.க. எம்.பி.க்கள் நடந்துகொண்ட விதத்தையும், ஒரு கட்டத்தில் தன்னை மிரட்டுவது போல நடந்து கொண்டனர் என்றும் நடந்ததை விரிவாக பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் சண்முகம். விபரங்களைக் கேட்டுக்கொண்ட அதிகாரிகள், இதனைக் கடிதமாக அனுப்பி வைக்குமாறு சண்முகத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர். அவர் அனுப்பும் கடிதத்தில் தி.மு.க.வை கார்னர் செய்யும் அரசியல்ரீதியான தாக்குதல்களும் இருக்கும் எனக் கோட்டை வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. சண்முகம் கூறிய தகவல்கள் பிரதமர் மோடியிடம் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், தயாநிதிக்கு எதிராகப் புகார் கொடுக்க தமிழக பா.ஜ.க.வினருக்கு வலியுறுத்தும் யோசனை தயாரானது என்கின்றன டெல்லி தகவல்கள். தயாநிதிக்கு எதிராக டெல்லியின் கோபத்துக்கு என்ன காரணம் என விசாரித்த போது, "2019 நாடாளுமன்ற தேர்தல் சமயத்திலேயே, தயாநிதி மாறன், ஆ,ராசா, கனிமொழி, கார்த்தி சிதம்பரம், திருமாவளவன் ஆகிய 5 நபர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும் என விரும்பியது பா.ஜ.க. தலைமை. ஆனால், அந்த ஐவரும் வெற்றிப்பெற்றதை பிரதமர் மோடி அப்போதே ரசிக்கவில்லை.
மேலும், நாடாளுமன்றத்தில் மோடிக்கு எதிராக மிகவும் ஆவேசமாக ஆக்ரோஷப்படுகிறார் தயாநிதி. அந்த வகையில், தயாநிதிக்கு எதிராகத் தற்போது பிரச்சனை உருவாகவும் அதில் அரசியல்ரீதியாகத் தீவிரம் காட்டுகிறது மத்திய பா.ஜ.க. அரசு" எனச் சுட்டிக்காட்டுகின்றனர் தேசிய பா.ஜ.க.வினரோடு தொடர்புடைய தமிழக பா.ஜ.க.வினர்.