உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 55 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட கரூர் எம்.பி. ஜோதிமணி பிரதமர் குறித்து பேசியதை பா.ஜ.க. சர்ச்சையாக்கியது. இதுதொடர்பாக நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி விவாதங்களில் நீங்கள் பேசிய பேச்சுக்கு பா.ஜ.க. தரப்பில் கடும் எதிர்வினை ஆற்றி இருக்கிறார்கள். பிரதமரை எப்படி அவ்வாறு விமர்சனம் செய்யலாம் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், இதைத் தவிர்த்திருக்கலாம் என்று தற்போது நினைக்கிறீர்களா?
பிரதமர் மக்களோடு களத்தில் இல்லை, மத்திய அமைச்சர்கள் மக்களோடு களத்தில் இணைந்து இருக்கவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடர்ந்து மக்களோடு இணைந்து செயல்பட்டு வருகிறேன். இந்தியாவின் இந்த நிலையை உலக நாடுகள் தொடர்ந்து பார்த்து வருகின்றது. ஒரு சிறுமி காயமடைந்த தனது தந்தையை 1,200 கிலோ மீட்டர் மிதிவண்டியில் அழைந்து வந்த அவலம் இந்த நாட்டில்தான் நடைபெற்று இருக்கின்றது. ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் மக்கள் சாலைகளில் நடந்து தன்னுடைய வீடுகளுக்குச் செல்கிறார்கள். கடும் இன்னல்களுக்கு மத்தியில் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் அவர்கள் நடந்து செல்லும் அவலத்தைத் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். இந்த மாதிரியான சம்பவங்கள் வேறு எந்த நாட்டிலாவது நடைபெற்று நாம் பார்த்திருக்கிறோமா? அல்லது கேள்வியாவது பட்டிருக்கிறோமா என்றால் இதுவரை அப்படியான சம்பவங்களை நாம் கேட்டிருக்க முடியாது, பார்த்திருக்க முடியாது. இதுதான் உண்மை நிலைமை.
ஆனால் இந்தியாவில் இத்தகைய கோரமான சம்பவங்களை நாம் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். தினமும் மக்களின் கஷ்டங்களை நாங்கள் நேரில் பார்த்து வருகின்றோம். ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி இதுவரை மக்களைச் சந்தித்துள்ளாரா? ஏன் சந்திக்கவில்லை, மற்ற நாட்டுத் தலைவர்கள் எல்லாம் மக்களைச் சந்தித்து வரும் நிலையில் இவர் மக்களைச் சந்திக்கத் தயங்குவது ஏன்? அமெரிக்க அதிபரோடு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் தினமும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். அந்தச் சந்திப்புகள் அனைத்தும் சண்டையில் முடிந்தாலும் தொடர்ந்து அவர் பத்தரிகையாளரைச் சந்தித்து வருகின்றார். உலக நாடுகளுக்கு முன் தலை நிமிர்ந்து நின்ற இந்தியா இன்றைக்கு மோடி ஆட்சியில் தலை குனிந்து நிற்கின்றது. சாலைகளில் கோடிக்கணக்கான மக்கள் செல்வதை உலக நாடுகள் தொடர்ந்து பார்த்து வருகின்றார்கள். நேரு, இந்திரா, ராஜூவ் என தலைவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்தியா இன்றைக்கு உலக நாடுகளுக்கு முன்பு அவமானப்பட்டு நிற்கின்றது.
மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறீர்களா? ரயில்களை ஏற்பாடு செய்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் ஊர் செல்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்களே?
காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களிலும், அதன் கூட்டணிக் கட்சி ஆளும் மாநிலங்களிலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எத்தனை கோடி நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தற்போது காங்கிரஸ் கட்சி விரிவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அப்படி ஆளும் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஏதேனும் தகவல் வெளியிட்டு இருக்கிறார்களா? புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த நடவடிக்கைகளில் மத்திய அரசு காட்டும் சுணக்கத்தைப் போலவே அவர்கள் ஆளும் மாநில அரசுகளும் செய்து வருகிறார்கள்.
பிரதமர் நிவாரண நிதி என்ற பொது நிவாரண நிதி கணக்கு இருக்கும் போது பி.எம். கேர் என்ற ரகசிய வங்கிக் கணக்கை ஆரம்பிக்கிறீர்கள். அதில் இதுவரை எவ்வளவு பணம் வந்துள்ளது என்பதையாவது தெரிவித்துள்ளீர்களா? அந்தப் பணத்தை யாருக்காவது நிவாரணம் வழங்க கொடுத்துள்ளீர்களா? குறைந்த பட்சம் பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களுகாவது அந்தப் பணத்தைக் கொடுத்துள்ளீர்களா? ஏன் இந்த அலட்சியம். மக்களை மனிதர்களாகக் கூட நினைக்க மாட்டீர்களா? இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது. அராஜகத்தின் மொத்த உருவமாக மத்திய அரசு செயல்படுகின்றது,என்றார்.