Skip to main content

நிம்மதியா வாழ விட மாட்டோம்னு சொல்லுவாங்க... சிறுமி ஜெயஸ்ரீ வழக்கில் நெஞ்சைப் பதறவைக்கும் வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

jayasri


"ரவ்வூண்டு தண்ணித் தாங்களேன்... அப்பா...…அப்பா... அப்பா எங்கே?''- உடல் முழுவதும் தீயில் வெந்துபோன அந்தச் சிறுமியின் கடைசிக்கட்ட குரலைக் கேட்ட தமிழகம் பதறியது. பத்தாம் வகுப்பு மாணவியான ஜெயஸ்ரீ, 95% தீக்காயங்களுடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாஜிஸ்ட்ரேட் மற்றும் காவல் அதிகாரி முன்பாக மரண வாக்குமூலம் அளித்த ஜெயஸ்ரீ, "கையெல்லாம் கட்டிப்போட்டு என்னைக் கொளுத்திட்டாங்க சார்'' என்று வலி தாங்க முடியாமல் கதறியவர், "அப்பா எங்கே?'' என்ற வார்த்தையுடன் தான்கேட்ட தண்ணீரையும் குடிக்காமல் உயிரை விட்டிருக்கிறாள்.


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள சிறுமதுரையில்தான், இந்தக் கொடுமை அரங்கேறியது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் - ராஜி தம்பதிக்கு ஜெயஸ்ரீ உள்ளிட்ட நான்கு குழந்தைகள். அனைவரும் பள்ளி வயதைத் தாண்டாதவர்கள். ஜெயபால் தன் வீடு மற்றும் ஊர்முகப்பில் இரண்டு பெட்டிக்கடைகளை நடத்தி வருகிறார். ஊர்முகப்பில் இருக்கும் பெட்டிக்கடையை ஜெயபாலின் உறவினர் ஏழம்மாள் என்கிற முதியவர் கவனித்துக் கொள்கிறார்.

ஏழம்மாளுக்குத் துணையாக ஜெயபாலின் மகன்கள், ஜெயராஜும், ராஜேஸ்வாலும் அவ்வப்போது கடைக்குச் செல்வது வழக்கம். அதன்படியே, கடந்த 10 ஆம் தேதி இரவு இதே பகுதியைச் சேர்ந்த குமரகுருபரன் என்பவரது மகன் பிரவீன், பீடி தருமாறு கேட்டிருக்கிறார். இருட்டிவிட்டது, அதனால பகலில் வாருங்கள், என்று ஏழம்மாளின் வீட்டிலிருந்த ஜெயராஜ் கூற, ஆத்திரமடைந்த பிரவீன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியிருக்கிறார்.

இதில் ஜெயராஜுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. விடிந்ததும் தந்தையிடம் இதுபற்றி சொன்னதும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கையோடு, திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருக்கிறார் ஜெயபால். அப்போது அவரது செல்போனுக்கு வந்த அழைப்பில், "உங்க மகள் ஜெயஸ்ரீயை யாரோ பெட்ரோல் ஊற்றி கொளுத்திட்டாங்க. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகணும். சீக்கிரம் வாங்க'' என்று அலறியிருக்கிறார்கள்.
 

admk


பதறியடித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, உடல் முழுவதும் எரிந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள் ஜெயஸ்ரீ. அங்கிருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார்கள். அங்கு ஜெயஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையிலிருப்பதைக் காவல்துறை மூலம் அறிந்த, விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நீதிபதி அருண்குமார், ஜெயஸ்ரீயைச் சந்தித்தார்.

அவரிடம் வாக்குமூலம் அளித்த ஜெயஸ்ரீ, "அண்ணனை அடிச்சவங்க மேல புகார் கொடுக்க, அப்பா போலீஸ் ஸ்டேஷன் போயிருந்தாரு. அம்மாவும் வயலுக்குப் போயிட்டாங்க. நான் மட்டுந்தான் வீட்டுல தனியா இருந்தேன். அப்போ திடீர்னு வீட்டுக்கு வந்த முருகைய்யன் என்கிற முருகனும், ஏசகம் என்கிற கலியப்பெருமாளும் அப்பாவைக் கேட்டு மிரட்டினாங்க. அப்பா இல்லைன்னு நான் சொல்லிட்டு இருக்கும்போதே, கை, காலைக் கட்டிப்போட்டு வாயில் துணி வைச்சு அடைச்சாங்க. மேலெல்லாம் பெட்ரோல் ஊத்தி தீவைச்சிட்டு ஓடிட்டாங்க. சூடு தாங்காம என்னால கத்தக்கூட முடியலை'' என்று உயிர்ப்போகும் வலியிலும் நடந்ததை விவரித்திருக்கிறார். இதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில்தான், ஜெயஸ்ரீ பரிதாபமாக இறந்து போனார்.

இதுதொடர்பாக சிறுமதுரை பகுதியில் நாம் விசாரித்தபோது, "ஜெயஸ்ரீயின் சத்தம் வெளியில் கேட்கவே இல்லை. தீ வாடை பரவிய பிறகுதான், ஓடிப் போய் பார்த்தோம். வீடு வெளியில் பூட்டப் பட்டிருந்தது. பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, பார்த்த காட்சியை எங்களால் சொல்ல முடியாது. அவ்வளவு கொடுமை.


இந்தக் கொடூரத்தை நிகழ்த்தி இருக்கும் இரண்டு இரக்கமற்ற அரக்கர்களும் அதிகாரத் திமிரில் திரிந்தவர்கள். முருகன் அ.தி.மு.க. பிரதிநிதியாக இருக்கிறார். அவரது மனைவி அருவி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். கலியப்பெருமாள் அ.தி.மு.க. கிளைச் செயலாளராக இருக்கிறார். இருவருமே நெருங்கிய உறவினர்கள். கட்சி பலத்தைக் கொண்டு, ஊரில் நாட்டாமை செய்வதுதான் இவர்களின் வழக்கம். ஏற்கனவே ஜெயஸ்ரீயின் தந்தை ஜெயபாலுக்கும், இந்த இருவருக்கும் இடையே முன்பகை இருந்தது.
 

jayasri


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிரச்சனையில் ஜெயபாலின் தம்பியான குமார் என்பவரை, முருகன், கலிய பெருமாள் தரப்பு ஊர்மக்கள் முன்னிலையில் தாக்கியதோடு அவரது கையை வெட்டியது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. மேலும், ஜெயபாலுக்குச் சொந்தமான நிலத்திற்கு அருகில் தான், கலியப்பெருமாளின் நிலமும் இருக்கிறது. இதைவைத்தும் அடிக்கடி கலியபெருமாள் தொந்தரவு செய்வார்.

இந்த நிலையில்தான், ஜெயபாலின் மகன் ஜெயராஜை, குமரகுருபரன் என்பவரின் மகன் பிரவீன் தாக்கியது தொடர்பாக, புகார் கொடுக்கச் சென்ற நேரத்தைப் பயன்படுத்தி, வீட்டில் தனியாக இருந்த ஜெயஸ்ரீயைக் கொளுத்தி இருக்கிறார்கள் முருகனும், கலியப்பெருமாளும். தாங்கள் வைக்கும் நெருப்பில் ஜெயஸ்ரீ செத்துப்போவாள். அந்தப்பழி பிரவீன் மீது விழும். நாம் தப்பித்துக் கொள்வோம். நம்மை எதிர்ப்பவனுக்கு இதுதான் கதி, என்ற அவர்களின் திட்டத்தை பொய்யாக்கி இருக்கிறது ஜெயஸ்ரீயின் மரண வாக்குமூலம். அதிகாரபலம், முன்பகையுடன் மதுபோதையும் சேர்ந்து ஏதுமறியா பிஞ்சுக் குழந்தையின் உயிரைக் குடித்திருகிறது'' என்கிறார்கள் மிரட்சி குறையாமல்.

"எங்களை நிம்மதியா வாழ விட மாட்டோம்னு சொல்லிட்டே இருப்பானுங்க. ஆனா, இப்படிப் பண்ணுவானுங்கன்னு நினைக்கலையே. இனி எப்படி இந்த ஊருல எங்களால வாழமுடியும்'' என்று மகளை இழந்த கவலையில் கதறியழும் ஜெயஸ்ரீயின் தாயார் ராஜியின் அழுகுரல், இன்னும் அடங்கவில்லை.

மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார், திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் குற்றவாளிகளான முருகன் மற்றும் கலியபெருமாளைக் கைது செய்துள்ளனர். ஊரடங்கில் நடந்திருக்கும் இந்தக் கொடூர வன்முறைச் செயலால், தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. அனைத்து கட்சிகளும் இந்தக் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. குற்றவாளிகள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவரையும் கட்சியை விட்டு நீக்கியிருக்கிறது அ.தி.மு.க. தலைமை.


மேலும், நெஞ்சைப் பதறவைக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று உறுதியளித்து இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இந்தச் சம்பவம் பற்றி அறிந்த தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ததோடு, இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏழு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரைக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இப்படியொரு கொடூரத்தை அரங்கேற்றிய உடனேயே, முருகனும் கலியப்பெருமாளும் மாவட்டத்தில் இருக்கும் அ.தி.மு.க. முக்கியப் பொறுப்பாளரை செல்போனில் அழைத்து, உதவி செய்யுமாறு கேட்டுள்ளனர். அந்தப் பொறுப்பாளர் காவல்துறை அதிகாரிகளிடம் இதுபற்றி விசாரித்திருக்கிறார். காவல்துறையினரோ, தீ வைக்கப்பட்ட பள்ளி மாணவி, உயிருக்குப் போராடும் துடிப்பைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது என்றுள்ளனர். இதைக் கேட்ட அந்தப் பொறுப்பாளர், சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் எனக்கூறிவிட்டு, குற்றவாளிகளுக்கு உதவ மறுத்திருக்கிறார்.
 

http://onelink.to/nknapp


“தர்மபுரி கல்லூரி மாணவிகள் மூன்றுபேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை, தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுதலை செய்தது எடப்பாடி அரசு. அந்தத் தைரியமும், அதிகாரம் கொடுத்திருக்கும் திமிரும்தான் இப்படியொரு பாதகத்தைச் செய்யத் தூண்டி இருக்கிறது. 

ஒவ்வொருமுறை இப்படியொரு குற்றம் அரங்கேறும்போதும், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மறுக்கப்படுகிறது. அதுவே, தொடர்ந்து இதுபோன்ற குற்றங்கள் நடக்கக் காரணமாகி விடுகிறது. இதில் விசாரணை அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு ஆணையங்களின் மெத்தனப் போக்கையும் கண்டிக்க வேண்டியிருக்கிறது. ஜெயஸ்ரீ என்ற குழந்தைக்கு நேர்ந்தது, நாளை நம் வீட்டுப் பிள்ளைகளுக்கும் நடக்கலாம் என்பதால், நீதிகேட்டு குரல் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.