Skip to main content

நா.முத்துக்குமாருக்கு செல்வராகவன், எனக்கு அல்ஃபோன்ஸ் புத்திரன்!

Published on 10/12/2017 | Edited on 10/12/2017
நா.முத்துக்குமாருக்கு செல்வராகவன், 
எனக்கு  அல்ஃபோன்ஸ் புத்திரன்!

-பாடலாசிரியர் வேல்முருகன்  



"இன்னோர் வாய்ப்புதான்
தந்தால் நானும்தான்
வாழ்வேன் நாளும் நல்ல மகனாய் உனக்கே..!
உதறுதே எந்தன் கால்களும்-அத
உணருதா உந்தன் கண்களும்
என் சொந்தத் தாயே.!"

மனதிற்கு  சற்று வெளியில்  இருந்தே  ஓடிக்கொண்டிருந்த 'ரிச்சி' படத்தில், திடீரென வந்த  'தாயை தேடி...' பாடலின் இந்த வரிகள் மட்டும் உள்ளே வந்து உணர்வை தொட்டன. 'அம்மா என்றழைக்காத', 'நானாக நானில்லை தாயே', 'தீயில் விழுந்த தேனா' என தமிழர்கள் மறக்காத தாய்ப்பாசப் பாடல்களின் வரிசையில் வைக்கக் கூடிய வரிகள் தான். எழுதியது யாரென்று பார்த்தால், பாடலாசிரியர் வேல்முருகன். 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் 'கொலை சிந்து' வடிவத்தில் பாடல் எழுதி பேசப்பட்டவர். 'நேரம்' படத்தின் 'காதல் என்னுள்ளே' பாடலின் மூலம் அறிமுகமானவர். நினைவில் வாழும்  பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடன்பிறவா தம்பியாக, உதவியாளராக உடனிருந்தவர். மீண்டும் பேசினோம்.





நிவின் பாலிக்கு ஆஸ்தான பாடலாசிரியரா நீங்க?  

ஹா ஹா ஹா... அப்படி நான் சொல்றேன்னு எதுவும் கிளப்பி விட்டுடாதீங்க. இது யதார்த்தமாக அமைஞ்சது. இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் தான் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்தார். அவருக்கு நன்றி. நிவின் தான் நாயகன், அதுவும் அவரது முதல் நேரடி தமிழ் படமா இது இருக்கப்போவது தெரிந்து நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். 'நேரம்' சமயத்துல நிவின் பாலி கூட நெறய பேசியிருக்கேன். சிறந்த நண்பர், உழைப்பாளி. 'நேரம்' வெற்றி விழா முடிஞ்சு, கோடம்பாக்கத்துல ஒரு டீ கடை முன்னாடி உக்காந்து அதிகாலைல பேசுனோம். 'நேரம்' படத்துக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பேனரை பாத்துட்டு, 'இப்படி என் முகம் ஊரெல்லாம் தெரியும்னு நான் நினைக்கல' என்றார். 'இன்னும் சில வருடங்களில் உலகமெல்லாம் தெரியும்'னு சொன்னேன். இப்போ, 'ரிச்சி' படம் சத்யம் திரையரங்கில் பார்த்தோம். நிவின் வரும்போது ரசிகர்கள் விசிலடிச்சு குதூகளிச்சாங்க. அப்போ எனக்குள்ள பெரிய சந்தோஷம். ரிச்சி பாடல் வெளியீட்டு விழாவில் சந்தித்த போதும், அதே அன்போட பேசினார். அதுவே போதும்.    





எப்போ பேச  வாய்ப்பு கிடைத்தாலும்  நா.முத்துக்குமாரை குறிப்பிடுறீங்க... மறக்க முடியலையா?

எப்படி மறக்க முடியும்? மறந்தால் தான் தப்பு. அவரிடம் தான் புத்தகங்கள், சினிமா, வாழ்க்கை இப்படி எல்லாமே கத்துக்கிட்டேன். இன்னொரு தம்பியாகத்தான் என்னை பார்த்துக்கொண்டார். அவர் கிட்ட வேலை பாக்கும்போது ஒரு முறை சைக்கிளில் போய்கிட்டுருந்தேன். எதிரில் வந்த வண்டி மோதி கீழே விழுந்து கையில் பலத்த அடி. 'மணிக்கட்டு நொறுங்கிடுச்சு, இனி எழுதுறதெல்லாம் கடினம்' என்று  டாக்டர் சொல்லிட்டாரு. அண்ணன் தான் லட்சக்கணக்கில் செலவழித்து என் கையை சரி செய்தார். வேலை செய்பவன் என்று அவர் பாக்கல. 

அவரை பிரிந்து வந்து ஓரிரு படங்கள் வேலை செய்தபோது,  திடீரென அவர் மறைந்தது இன்னும் எனக்கு அதிர்ச்சிதான். அண்ணன், உலகத் தரமான ஒரு படம் எடுக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டார். 'சில்க் சிட்டி'னு ஆங்கில  நாவல் எழுதும் வேலைகளையும் செய்தார். ஆனால், அவரோட நேரம் எல்லாத்தையும் பாடல்கள் வாங்கிக்கொண்டன. அதிலும் அவர் முதன்மையாகத்தான் இருந்தார். படம் எடுத்துருந்தா, அந்த படமும் அப்படிதான் இருந்திருக்கும். அவர் மனதில் இருந்தது எனக்கு தெரியும். அது போல ஒரு படத்தை எடுத்து அவருக்கு சமர்ப்பிப்பதுதான் என் ஆசை.

உங்களுடன் பணியாற்றிய இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் எப்படி?

எல்லோருமே எனக்கான சுதந்திரத்தை கொடுத்தவர்கள், என் நண்பர்கள். அதில் தொழிலைத் தாண்டியும் நெருக்கமானவர்கள் என்றால் இயக்குனர்  அல்ஃபோன்ஸ் புத்திரன், இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன், 'ஒரு கிடாயின் கருணை மனு' இயக்குனர் சுரேஷ் சங்கையா ஆகியோர் தொழிலைத் தாண்டிய நட்போடு பழகுவார்கள். 'ஒரு கிடாயின் கருணை மனு' சிங்கப்பூர் உள்பட பல திரைப்பட விழாக்களுக்கு சென்று வந்தது. இப்போ, நம்ம சென்னை சர்வதேச  திரைப்பட விழாவுக்கும் தேர்வாகியிருக்கு. இப்போதான் திருமணம் ஆகியிருக்கும்   சுரேஷ் சங்கையாகிட்ட 'சீக்கிரம் அடுத்த படம் எடுங்க'னு சொல்லிக்கிட்டுருக்கேன்.        

அல்ஃபோன்ஸ் சார்கிட்டயும் ஒரு கண்டிஷன் போட்டுருக்கேன். முத்துக்குமார் அண்ணனை முதல் முதலில் விமானத்தில் கூட்டிச் சென்றது இயக்குனர் செல்வராகவன் தான். 7G ரெயின்போ காலனி பட பாடல் கம்போஸிங்குக்காக கூட்டிட்டு போனார். அது மாதிரி, என்னை அல்ஃபோன்ஸ் புத்திரன் விமானத்தில் கூட்டி போகணும்னு சொல்லியிருக்கேன். சரின்னு சொல்லியிருக்காரு, செய்வாருன்னு நினைக்கிறேன் (சிரிக்கிறார்).





சரி, என்னதான் பல காதல், மண் சார்ந்த பாடல்கள் எழுதினாலும், தமிழ் சினிமாவுல எம்.ஜி.ஆர்க்கு வாலி, ரஜினிக்கு வைரமுத்து இப்படி அவர்கள் எழுதிய 'ஹீரோ ஓப்பனிங் பாடல்கள்' மக்கள்  மனதில் ஆதி ஆழம் வரை போகும். அஜித், விஜய் ஆகியோருக்கு ஓப்பனிங் பாடல் எழுத ஆசையிருக்கா? ரெண்டு வரி சொல்லுங்களேன்...

நீங்க ஏதோ ஒரு வம்புக்கு கூட்டி போறீங்க போல...  என் விருப்பம் கவிதை நிறைந்த வரிகளும், மண்ணின் வாசம் சொல்லும் வரிகளும் தான் என்றாலும், சினிமாவில் பாடலாசிரியரா வந்த பின் அஜித் விஜய்க்கு எழுதும் ஆசை இல்லாமல் போகுமா? கண்டிப்பா உண்டு. வாய்ப்பு வந்தா மிகச் சிறப்பா செய்யலாம்.

ரெண்டு வரி சாம்பிளா சொல்லுங்களேன்...       

(கதை, சூழ்நிலைக்கு ஏற்றபடி தான் எழுதணும் என்று  முதலில் அன்பாக தயங்கியவர், பின்னர் அவர்களின் நிஜ வாழ்வை வைத்து சொல்லுங்களேன் என்றதும்)

'தல' அஜித்துக்கு 'தானா முளைத்தவன், தலையாய் நிலைத்தவன், வானம் தொடுபவன்டா....' இப்படி போகும். தளபதி விஜய்க்கு 'மண்ணின் பிள்ளை, காப்பாத்தும்... சொன்ன சொல்லை, கைப்பத்தும்...' இப்படி போகும். 'இது பொதுவான வரிகள் தாங்க. எந்த உள்நோக்கமும் இல்லை. வாய்ப்பு வந்தால் கதைக்கேற்ப சிறப்பாக எழுதப்படும்'னு பேட்டியில் போட்டுருங்க...

வேல்முருகன் கூறக் கூற, 'இது போதும் எங்களுக்கு, பற்ற வைப்போம்'னு ஒலித்த  நம்ம மைண்ட் வாய்ஸ் அவருக்கு கேட்டிருக்கும்.

- VBK                                                                   

சார்ந்த செய்திகள்