சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள காது கேட்காத சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே குடியிருப்பில் பணியாற்றும் லிப்ட் ஆப்ரேட்டர், செக்ரியூட்டிகள் உள்பட 17 பேர் அவரை 7 மாதங்களாக பாலியல் வன்முறை செய்து வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 17 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து நக்கீரன் இணையதளத்தில் கருத்து தெரிவித்தார் நிர்மலா பெரியசாமி.
''இந்த செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து மனம் கொதிக்கிறது. கற்பனை செய்து கூட பார்க்க முடியாத சம்பவமாக இருக்கிறது. அதுவும் அந்தக் குடும்பம் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலேயே இந்த சம்பவம் 7 மாதங்களாக நடந்திருக்கிறது என்றால் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம் என்று அந்த பெற்றோர்கள் நினைத்திருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை அவர்களுடைய வேலைக்காரர்களே பயன்படுத்தி இந்த செயலை செய்திருக்கிறார்கள்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேருக்கும் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்று சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது. வழக்கறிஞர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். யாரும் இவர்களுக்கு ஆதரவாக வரக்கூடாது. போக்சோ சட்டப்பிரிவில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்க வழிவகை உள்ளது என்று வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். வழக்கறிஞர்கள் இந்த குற்றவாளிகளை நீதிமன்றத்திலேயே தாக்கியது சரிதான். குற்றவாளிகளை தாக்கியதில் தவறில்லை.
நீதிமன்றம் இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். இனி யாரும் இந்த தவறுகளை செய்ய முடியாத அளவுக்கு தீர்ப்பு வழங்க வேண்டும். நீதிமன்றம் இவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். கொடூரமான தண்டனை வழங்க வேண்டும். சாகும் வரை தூக்கிலிட வேண்டும். இது ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 17 பேரின் குடும்பத்தினரும் அவர்களை கைவிட வேண்டும். இப்படிப்பட்டவர்களை கணவர் என்று சொல்லாதீர்கள், மகன் என்று சொல்லாதீர்கள், உறவினர்கள் என்று சொல்லாதீர்கள். 17 பேருக்கும் கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று 17 பேரின் உறவினர்களே சொல்ல வேண்டும்.
பொதுவாக பெற்றோர்களுடைய கவனம் பிள்ளைகள் மீது இருக்க வேண்டும். பிள்ளைகளிடம் தோழமையாக, அன்பாக பழகினால் அனைத்து பிரச்சனைகளையும் உங்களிடம் தெரிவிப்பார்கள். இந்த பிரச்சனையை அம்மாவிடம் சொல்லலாம், இந்த பிரச்சனையை அப்பாக்கிட்ட சொல்லலாம் என்று பிள்ளைகளுக்கு நம்பிக்கை கொடுத்து வளர்க்க வேண்டும். பிரச்சனைகள் பெரியதாகாமல் ஆரம்பத்திலேயே சரிசெய்துவிடலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து''.