Skip to main content

நாம் என்ன பேசினாலும் திமுகவிற்கு தெரியுது... பாஜகவிற்கு துரோகம் செய்த அதிமுக... அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்!

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

அ.தி.மு.க. கூட்டணியை விட 3 சதவீத வாக்குகள் கூடுதலாகப் பெற்று கிராமப்புற உள்ளாட்சிகளை கைப்பற்றியிருக்கிறது தி.மு.க. கூட்டணி. ஆட்சி மாற்றத்திற்காக மக்கள் கொடுத்துள்ள சிக்னல்' என மு.க.ஸ்டாலினிடம் தி.மு.க. மா.செ.க்கள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். ஸ்டாலினைப் பொறுத்தவரை, இந்த வெற்றி போதாது என்றே நினைக்கிறார்.
 

politics



"காவிரி டெல்டா உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில் தி.மு.க.வுக்கு கிடைத்த அதிகபட்ச வெற்றிதான் ஓவர் ஆல் நமக்கு நல்ல ரிசல்டை எட்டிப்பிடிக்க உதவியிருக்கிறது. காங்கிரசுடன் கூட்டணி இருந்ததால் தென் மாவட்டங்களும் தி.மு.க.வுக்கு கை கொடுத்துள்ளன. கொங்கு மண்ட லத்தில் தி.மு.க.வுக்கான வெற்றி சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அ.தி.மு.க.வுக்குத்தான் கிராமப் புறங்களில் செல்வாக்கு என்ற இமேஜை இந்த தேர்தலில் தி.மு.க. உடைத்திருப்பது சந்தோஷமென்றாலும், 60 சதவீதத்திற்கு அதிகமாக நாம் ஜெயித்திருந்தால்தான் முழு மகிழ்ச்சி'' என தனது ரியாக்சனை ஸ்டாலின் காட்டியிருக்கிறார்.


"மா.செ.க்களுடனான ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடக்கவிருக்கிறது. அதில், எங்கெங்கே தோல்வி ஏற்பட்டதோ அதற்கு காரணமான நிர்வாகிகள் மீது தயவுதாட்சண்யம் பாராமல் நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்படும். நடவடிக்கை எடுத்தால்தான் அடுத்தடுத்த தேர்தல்களில் உறுதியான வெற்றி கிடைக்கும் என்பது ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்கிறார்கள் சீனியர் நிர்வாகிகள்.

இதற்கிடையே, 11-ந்தேதி நடக்கவிருக்கும் மாவட்ட ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க.விடமிருந்து காங்கிரசுக்கான சீட்டுகளை பெறுவது குறித்து சத்தியமூர்த்திபவனில் ஆலோசனைக் கூட்டம் கே.எஸ். அழகிரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மேலிட பார்வையாளர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவல்ல பிரசாத் உள்பட மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். இதில் பேசிய மாவட்டத் தலைவர்கள் பலரும் தி.மு.க. மீது குற்றம் சுமத்தினர். கே.எஸ்.அழகிரியோ, நடந்தது பத்தி யாரும் பேசக்கூடாது. இனி என்ன செய்யலாம்ங்கிறதை பத்தி மட்டும் பேசுங்கள் என சொல்ல, என்னத்தை சொல்றது?'' என்கிற விரக்தியில் ஏதேதோ பேசினார்கள்.

 

 

bjp



கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர், "கூட்டணியில் நிறைய சீட்டுகளை பெறுவதற்கு முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும். அந்த முயற்சி இல்லாததால் குறைந்தளவில்தான் சீட்டு நமக்கு கிடைத்திருக்கிறது. கன்னியாகுமரி, கடலூர் உள்பட பல மாவட்டங்களில் கூட்டணியே இல்லைங்கிறது வருத்தம்தான். கூட்டணி இருந்த இடத்திலும் போட்டி வேட்பாளர்களை நிறுத்தியதால் வெற்றி வாய்ப்பு பறிபோயிடிச்சி. இங்கே எது பேசினாலும் ரெண்டே நிமிசத்துல வெளியே போய்டுது'' என சொல்ல, அப்போது, கூட்டத்திலிருந்தவர்கள், "லைவ் ரிலேவாகவே அறிவாலயத்துக்கு தகவல் போய்டுது'' என உரத்து சத்தம் எழுப்பினார்கள். கே.எஸ்.அழகிரியோ, "தொண்டர்கள் ஏற்கனவே சோர்வாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மேலும் அவநம்பிக்கை கொடுக்கிற மாதிரி திருநாவுக்கரசர் பேசியிருக்கக் கூடாது'' என சொல்ல, சட்டென்று எழுந்த திருநாவுக்கரசர், "நம்பிக்கை இழந்து பேசறவன் இந்த திருநாவுக்கரசு கிடையாது.

 

pmk



தேர்தலில் ஏற்பட்ட ஏமாற்றங்களால் நிர்வாகிகள் வருத்தத்தில் இருக்கிறார்கள். வருத்தப்பட்டுக் கொண்டே இருக்காமல், இனி வரும் தேர்தல்களிலாவது தொண்டர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்ங்கிற நோக்கத்தில்தான் பேசினேன்' என்றார். இதனை ஆமோதிப்பதுபோல, "திருநாவுக்கரசர் பேசியதுதான் சரி. பல இடங்களில் கூட்டணி தர்மத்திற்கு எதிராகத்தான் நடந்துள்ளது' என்றார் திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார். உடனே, "சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்'' என அழகிரியே அவநம்பிக்கையுடன் பேசியது ஹைலைட்!.

மாலையில் நடந்த காங்கிரசின் 24 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவின் ஆலோசனையிலும், தி.மு.க. போட்டி வேட்பாளர்களை நிறுத்தியதோடல்லாமல் அவர்களுக்கு பண உதவியும் செய்திருக்கிறது. இதனால் தி.மு.க. ஓட்டு தி.மு.க.வுக்கும் காங்கிரசு ஓட்டு காங்கிரசுக்கும் கிடைத்ததால் கூட்டணி வாக்குகள் பிரிந்தன. அந்த இடங்களிலெல்லாம் அ.தி.மு.க. ஜெயித்திருக்கிறது. இனி இதுபோன்று நடக்காமல் தி.மு.க. தலைமையிடம் பேச வேண்டும் என விவாதித்துவிட்டு, எந்தெந்த மாவட்டங்களில் சேர்மன் பதவி, துணைத் தலைவர் பதவி கேட்பது என்பதை அடையாளம் காண முடியாமல் திணறியிருக்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.


தி.மு.க. கூட்டணிக்குள் இப்படிப்பட்ட ஆதங்கங்கள் வெளிப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க. கூட்டணியோ ஏகத்துக்கு கலகலத்து இருக்கிறது. பா.ம.க. பொதுக்குழுவில், "கூட்டணியில் பா.ம.க. இல்லைன்னா இன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சியே இருந்திருக்காது. அப்படியிருந்தும் உள்ளாட்சித் தேர்தலில் அரை சீட், கால் சீட்டுக்கு கெஞ்ச வைத்துவிட்டனர்'' என எகிறியிருந்த அன்புமணியின் பேச்சு குறித்து அ.தி.மு.க. மா.செ.க்களிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அப்போது, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அ.தி.மு.க.வை மிரட்டியே சீட் வாங்கியிருக்கிறது பா.ம.க.. எந்த இடத்திலும் அவர்கள் கெஞ்சவில்லை என எடப்பாடிக்கு விளக்கம் தந்திருக்கிறார்கள் அ.தி.மு.க. மா.செ.க்கள்.

"விரைவில் நடக்கவிருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 7 மாவட்டங்கள் வட தமிழகத்தில் இருக்கின்றன. அதிலும் அதனைத் தொடர்ந்து நடக்கவிருக்கும் நகராட்சித் தேர்தலிலும் பா.ம. க.வுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அன்புமணி இப்படி மிரட்டிப் பார்க்கிறார். நடந்து முடிந்துள்ள தேர்தலில் நிறைய இடங்களில் பா.ம.க போட்டியிட்டதினால்தானே மூன்றாவது இடத்துக்கு வர முடிந்தது?' என்றும் அ.தி.மு.க. மா.செ.க்கள் எடப்பாடியிடம் விவரித்திருக்கின்றனர்.

அதேபோல, தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் விவாதித்துள்ள எடப்பாடி, "தி.மு.க. கூட்டணிக்குள் உள்ளடிகளும், போட்டி வேட்பாளர்களும் அதிகரித்ததால்தான் கௌரவமான வெற்றி கிடைத்திருக்கிறது. இல்லைன்னா, இன்னமும் சறுக்கியிருப்போம். கொங்கு மண்டலம்தான் நம்மை காப்பாற்றியிருக்கிறது. மாவட்ட நிர்வாகிகள் அர்ப்பணிப்புடன் வேலை பார்க்கவில்லை. கொடுக்கப்பட்ட வைட்டமின்களை பதுக்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை நம்பி எப்படி அடுத்தகட்ட தேர்தலை எதிர்கொள்வது?'' என்றிருக்கிறார்.

"வேலூர் லோக்சபா தேர்தலின் போது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தார் அமித்ஷா. இப்போது, குடியுரிமைச் சட்டம். இதனால்தான் பல இடங்களில் நாம் தோற்றுப்போயிருக்கிறோம். பா.ஜ.க.வுடனான கூட்டணி நமக்கு வெற்றியை தரவில்லை'' என அமைச்சர்கள் சொல்ல, "ஒரு வகையில் இது சரின்னு எடுத்துக்கொண்டாலும் கிருஷ்ணகிரி, புதுக்கோட்டையில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டதும் நமக்கு பின்னடைவுதான் என்பதை மறக்கக்கூடாது'' எனவும் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததில் அதிருப்தியடைந்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர்கள், "கூட்டணி தர்மத்திற்கு அ.தி.மு.க. துரோகமிழைத்து விட்டது. பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள பல இடங்களை அ.தி.மு.க. தர மறுத்ததோடல்லாமல், பா.ஜ.க. போட்டியிட்ட இடங்களில் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி நம்முடைய வெற்றியை அ.தி.மு.க. தடுத்துவிட்டது, போட்டி வேட்பாளர்களை வாபஸ் பெற வையுங்கள் என எடப்பாடியின் கவனத்துக்கு எடுத்துச் சென்றபோதும் அவர் அக்கறை காட்டவில்லை. கூட்டணி விசயத்தில் அ.தி.மு.க. விடம் நேர்மை இல்லாததால் கூட்டணியை மறுபரிசீலனை செய்யுங்கள்''’ என எடப்பாடிக்கு எதிராக தங்களின் தேசிய தலைமைக்கு புகார் தட்டிவிட்டுள்ளனர். "பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டிருந்தால் இன்னும் அதிக சீட்டுகளில் ஜெயித்திருப்போம்' என அதிரடி கிளப்பியிருக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.

இது குறித்து சீனியர் அமைச்சர்களுக்கு நெருக்கமான அ.தி.மு.க.வினரிடம் விசாரித்தபோது, "அ.தி.மு.க. கூட்டணியை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு உரிமை இல்லை. தகுதிக்கு மீறி ஆசைப்படுகிறார்கள். லோக்சபா தேர்தலிலேயே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க எடப்பாடி விரும்பவில்லை. கூட்டணியை விட்டு பா.ஜ.க. வெளியேறாதா என்றுதான் எடப்பாடியும் சீனியர் மந்திரிகளும் எதிர்பார்க்கிறார்கள். பா.ஜ.க.வுக்குத்தான் அ.தி.மு.க. தயவு தேவையே தவிர, அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. தயவு தேவையில்லை என எடப்பாடியும் சீனியர் அமைச்சர்களும் இருக்கின்றனர். ஓ.பி.எஸ். தவிர பெரும்பாலான அமைச்சர்கள் பா.ஜ.க.வை உதறிவிடுவதே அடுத்தடுத்து வரும் தேர்தலுக்கு சரியாக இருக்கும் என்கிற மனநிலையில் இருக்கிறார்கள்'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.

பா.ம.க., பா.ஜ.க.வைப் போலவே அ.தி.மு.க. மீது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறது தே.மு.தி.க. இது குறித்து கட்சியின் பொருளாளர் பிரேமலதாவிடம், அ.தி.மு.க. மா.செ.க்கள் குறித்து கொந்தளித்துள்ளனர் தே.மு.தி.க. மா.செ.க்கள். நகராட்சி, மாநகராட்சி தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணி நீடிக்குமா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது கூட்டணி கலகங்கள்.