"யாரைத்தான் நம்புவதோ' என்கிற பாட்டை சிறையிலிருந்து பாடிக் கொண்டிருக்கிறார் சசிகலா என்கிறது மன்னார்குடி வட்டாரம். எதையும் எந்த நேரத்திலும் செய்து முடிக்கும் படையாக இருந்தது மன்னார்குடி வகையறா. யார் சசிகலாவைப் போல பேசிக் கொன்றார்கள் என முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே. பாலன் வழக்கில் அ.தி.மு.க.வின் வடசென்னை மாவட்ட இணைச் செயலாளர் பூங்கா நகர் மாணிக்கம் மீது போலீசே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அப்படியிருந்த சசிகலாவின் டீம் இன்று சிதறிப் போயிருக்கிறது. சசிகலா சிறைக்குப் போவதற்கு முன்பு விசுவாசிகளாகவும் உறவுகளாகவும் நடித்த பலர் இன்று சசிகலாவுக்கு எதிராக திரும்புவதை பார்த்து சசிகலா திகைத்துப் போயிருக்கிறார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து நவம்பர் மாதம் 2017ஆம் ஆண்டு இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியபோது, இளவரசி மகள் கிருஷ்ணப்ரியாவின் செல்போனில் இருந்த படங்களை கைப்பற்றியது. அதில் இருந்த கம்பெனிகள் மற்றும் முதலீடு விவரங்கள் சுமார் 2,000 கோடி ரூபாய்க்கு இருந தது. அதைப் பற்றி கிருஷ்ண ப்ரியாவிடம் வருமான வரித் துறை கேட்டது. "சசிகலா அத்தைக்கு பல மனுக்கள் வரும். அதில் ஒரு மனுவில் கம்பெனிகளின் பெயர்களும் பண விவரங்களும் குறிப்பிட்டிருந்ததால் அதை நான் போட்டோ எடுத்து வைத்தேன் என சொல்லியிருக்கிறார். இது தான் கிருஷ்ணப்ரியா கொடுத்த வாக்குமூலம் என சசிகலாவின் வழக்கறிஞர்கள் சசிகலாவிடம் சொல்லியிருக்கிறார்கள். அதைத் தான் உண்மை என சசிகலா நம்பியிருந்தார். அந்த வாக்குமூலத்தை தாண்டி வருமான வரித்துறையிடம், கிருஷ்ண ப்ரியாவிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் இருந்தன.
2017ஆம் ஆண்டு சசிகலா, தனது கணவர் நடராஜன் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து அக்டோபர் மாதம் 7-ம் தேதி பரோலில் வெளியே வந்தவர் இளவரசியின் வீட்டில் தங்கினார்.
அக்டோபர் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை 2,000 கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கியது பற்றிய கணக்கு வழக்குகள் சசிகலா தங்கியிருந்த கிருஷ்ணப்ரியாவின் தி.நகர் வீட்டில் ஆராயப்பட்டன. கிருஷ்ணப்ரியா, விவேக் ஆகியோர் முன்னிலையில் நடந்த கணக்கு வழக்குகளை சசிகலா சரிபார்த்து குறித்து கொடுத்தார். அந்த ஐந்துநாட்களும் நடந்த விவகாரங்களை கிருஷ்ணப்ரியா தனது செல்போனில் படம் எடுத்து வைத்திருந்தார்.
கிருஷ்ணப்ரியாவின் செல்போனில் பதிவாகியிருந்த போட்டோக்களில் காணப்பட்ட கணக்கு விவரங்கள், "சசிகலா பரோலில் வந்து தங்கிய ஐந்து நாட்களையும் அவரது வீட்டில் இருந்த நேரத்தையும் தெளிவாக காட்டியது. இந்த தேதிகளில் சசிகலா இந்த நேரத்தில் இருந்தார் அல்லவா?' என வருமான வரித்துறை கிருஷ்ணப்ரியாவை மடக்கியது. "ஆமாம். அப்பொழுது நிறைய மனுக்கள் வந்தன. ஒரு மனுவில் கம்பெனி விவரம் இருந்தது. அதை நான் போட்டோ எடுத்தேன்' என்கிற கிருஷ்ணப்ரியாவின் பதிலை முறியடிக்கும் விதத்தில் வழக்கறிஞர், நாமக்கல் செந்திலின் வாக்குமூலம் இருந்தது. அதை தூக்கிப் போட்டதும் கிருஷ்ண ப்ரியா நிலைகுலைந்தார். கூடவே தேசபந்து என்பவரின் வாக்கு மூலமும், கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜனின் வாக்குமூலமும் வருமான வரித் துறையால் காட்டப்பட்டவுடன் கிருஷ்ணப்ரியா அழுதார் என்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.
ஜெ.வுக்கெதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் இளவரசிக்கான வழக்கறிஞராக வழக்கு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டவர் தான் இந்த நாமக்கல் செந்தில். வெறுமனே கோர்ட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்த செந்திலை நம்பிக்கைக்குரிய வக்கீலாக, இளவரசியின் பேச்சைக் கேட்டு சசிகலா நியமித்தார். கோர்ட் டில் நடப்பவற்றை இளவரசிக்கும் சசிக்கும் சொல்லும் தபால்காரர் வேலை செய்து கொண்டிருந்த செந்தில் நாளடைவில் சசிகலாவின் சொத்துகளை கையாளும் நபரானார். ஜெ., இளவரசி ஆகியோருக்கு எந்த வழக்கறிஞர்கள் வாதிட்டால் சரியாக இருக்கும் என்பதை தீர்மானிக் கும் அதிகாரம் கூட செந்திலிடம் ஒப்படைக்கப்பட்டது.
தான் சிறைக்கு போனதும் வழக்கறிஞர்கள் சரியாக வாதிடவில்லை என்கிற அதிருப்தியில் சசிகலா செந்திலை திட்டினார். அன்று முதல் ஒதுங்க ஆரம்பித்த செந்தில் சசிகலாவுடனான நெருக்கத்தை குறைத்துக் கொண்டார். கொங்குப் பகுதியைச் சேர்ந்த தங்கமணி அமைச்சரானதும், அவரிடம் நெருக்கம் காட்டினார். ஜெ.வின் வழக்கறிஞர் என எடப்பாடியிடமும் ஒட்டிக் கொண்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வாய்தா வாங்கக் கூட தகுதியான வாதத்தை வைக்கும் திறமையற்றவர் செந்தில் என தெரிந்து கொண்ட டி.டி.வி. தினகரன், ராஜா செந்தூர் பாண்டியை வழக்கறிஞராக நியமனம் செய்தார். அவரே ஆறுமுகசாமி கமிஷன், வருமான வரித்துறை, தேர்தல் கமிஷன் என அனைத்திலும் சசிகலாவுக்காக வாதாட தொடங்கினார்.
"செந்திலை அவர் செய்த தரகர் வேலைக்காக பணம் வாங்கி சொத்து சேர்த்த அவரை குற்றவாளியாக்குவோம்' என அவருக்கு நெருக்கமான அமைச்சர்கள் மூலமே வருமான வரித்துறை சொல்ல... பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நடந்த டீலிங்குகளை சொல்லிவிட்டார்.
அடுத்தது, தேசபந்து. இவர் திவாகரன், இளவரசிக்கு நெருக்கமானவர். இவர் அமைச்சராக கண்ணப்பன் இருந்தபோது அவரது பி.ஏ.வாக பயங்கர ஆட்டம் போட்டவர். இவர் திவாகரன், இளவரசி ஆகியோர் சொல்கிறார்கள் என சசிகலா மூலமாக ஏராளமான ஒப்பந்த பேப்பர்களை கொடுத்திருக்கிறார். திவாகரன் அண்ட் கோவிற்காக ஜெ., தேசபந்து கொடுத்த லிஸ்ட்படி ஒப்பந்தங்களை வாரி வழங்கினார். தேசபந்து பெரும் செல்வந்தரானார். அவரது வீட்டை சோதனை போட்ட வருமான வரித்துறை அவரை கைது செய்வோம் என மிரட்ட, சசிகலா குடும்பத்தை பற்றி ஒரு பத்திரிகையாளரைப் போல நேற்று-இன்று-நாளை என தகவலை திரட்டி வருமான வரித்துறையிடம் சொன்னார்.
தேசபந்து பாணியில் மிரட்டவோ அடிக்கவோ செய்யாமல் கடகடவென ஒப்பித்தார்கள். கொடநாடு மேனேஜர் நடராஜன் மற்றும் அமைச்சர் சம்பத்தின் பி.ஏ.வாக இருந்த நபர் என்கிறார்கள் வருமான வரித்துறையை சேர்ந்தவர்கள். "இந்த சாட்சியங்களை பார்த்த பிறகுதான் கிருஷ்ணப்ரியா ஒத்துக் கொண்டார். சசிகலா தான் எல்லாவற்றையும் செய்தார். சசிகலாவின் முன்னிலையில் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளின் போது ஜெ. உடல்நலம் சரியில்லாமல் இருந்த சூழலில் இந்த பணப் பரிவர்த்தனைகள் நடந்தன. ஜெ. இறந்ததும் கூவத்தூர், எடப்பாடி முதலமைச்சர் என ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்தன. அதனால் சசிகலாவால் கணக்கு வழக்கு பார்க்க முடியவில்லை. அதனால் அக்டோபர் மாதம் சசிகலா பரோலில் வந்து எங்கள் வீட்டில் தங்கியபோது, இந்த பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக தொழிலதிபர்களை அழைத்து சந்தித்து பேசினார்' என ஒத்துக் கொண்டார் கிருஷ்ணப்ரியா'' என்கிறது வருமான வரித்துறை.
வருமான வரித்துறை முதலில் தாக்கல் செய்த அறிக்கையில் 1674 கோடியே 50 லட்சம் தொடர்பான சொத்துகள் இருந்தன என செய்திகள் வெளியாகின. அடுத்தநாள், நாமக்கல்லை சேர்ந்த கிறிஸ்டி நிறுவனத்திடம் 200 கோடிக்கு மேல் கொடுத்து... செல்லாதது என அறிவித்த நோட்டுகளை மாற்றியதாக செய்திகள் வெளியாகின. இந்த கணக்கு வழக்குகள் தொடர்பாக சசிகலா தனது ஆடிட்டர் மூலம் அளித்த பதிலில் "ஜெ.வின் சொத்துகள் எனக்கே சொந்தம்' என அறிவித்ததாக செய்திகள் வெளிவந்தன.
தமிழகம் முழுவதும் 2017ஆம் ஆண்டு சசிகலா குடும்பத்தின் சொத்துக்களை குறிவைத்து வருமான வரித்துறை 185 இடங்களில் ரெய்டு நடத்தியது. ஜாஸ் சினிமா தியேட்டர் வாங்கியது. பல புதிய கம்பெனிகளையும், ஹோட்டலையும் மிரட்டி வாங்கியது, விவேக் நடத்திய வைர வியாபாரம். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கில் இணைக்கப்பட்டு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவால் அரசு சொத்து ஆக்கப்பட்ட ஜெ.வின் சொத்துக்கள் (அதுமட்டும் 5,000 கோடி) என சசிகலாவிற்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் சொத்து இருக்கும் என வருமான வரித்துறை மதிப்பிட்டுள்ளது. அதில் 2,000 கோடி ரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வாங்கப்பட்டது. 2,000 கோடி என்பது அரசு மதிப்பு. அதன் மார்க்கெட் மதிப்பு 5,000 கோடியை தாண்டும் என்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.
இதுபற்றி நம்மிடம் பேசிய சசி உறவினர்கள், "ஜெ. இறந்தபின் அவரது சொத்துகளுக்கு சசிதான் வாரிசு என வருமான வரித்துறைக்கு பதிலளித்துள்ளார். சசிகலா எல்லோரையும் நம்பினார். பலர் இன்று அவரது முதுகில் குத்துகின்றனர். ஜெ. எவ்வளவு மோசமான உடல்நிலையில் போயஸ் கார்டனில் இருந்தார். அவரை ஒரு குழந்தை போல சசிகலா பார்த்துக் கொண்டார் என ஜெ. அனுமதியுடன் எடுத்த 3 மணி நேர வீடியோ ஒன்று சசிகலா கையில் உள்ளது. சசி சிறையில் இருந்து விடுதலையானதும் அந்த வீடியோ வெளியிடப்படும். அதன்மூலம் சசியின் அரசியல் என்ட்ரி பா.ஜ.க.வுக்கு எதிராக தொடங்கும்'' என்கின்றனர். இந்த சொத்துகளில் பலவும் சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டவையாகும். யாருடைய சொத்தை யார் யாரோ அனுபவிக்கிறார்கள் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.