Skip to main content

மோடியின் கண்ணில் தெரியுது தோல்வி பீதி!

Published on 11/12/2017 | Edited on 11/12/2017
மோடியின் கண்ணில் தெரியுது தோல்வி பீதி!

தொடர்ந்து 22 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் பாஜகவிற்கு, நடந்து முடிந்துள்ள முதல் கட்டத் தேர்தல் நிலவரமே பெருத்த அடியாக அமைந்துள்ளது என்பதையும், ஆளும் பாஜகவின் தோல்வி பீதியையும் கண்கூடாகக் காட்டியிருக்கிறார் பிரதமர் மோடி.



தேர்தல் தொடங்குவதற்கு முன்பிருந்தே இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களை பிரச்சாரங்களில் கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி. ஆனால், ஒரு இடத்தில் கூட ‘குஜராத் மாடல்’ என்ற வார்த்தையை உபயோகிக்காதது வேறு கதை. அந்தளவிற்கு குஜராத் மாடலின் மீது அவருக்கே அதிருப்தி ஏற்பட்டிருக்கும் போல.

முதல்கட்ட வாக்குப்பதிவிற்கு முன்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர், தன்னை தீண்டத்தகாதவன் (நீச்) என்று கூறியதை, அனைத்து பிரச்சாரங்களிலும் பேசிய மோடி, தற்போது அதற்கும் ஒருபடி மேலே போய் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார்.

டிசம்பர் 9ஆம் தேதி நடந்துமுடிந்த முதல்கட்ட வாக்குப்பதிவிற்குப் பின்னர், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி, பாகிஸ்தானுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் குஜராத்தில் பாஜகவின் வெற்றியை முறியடிப்பதற்கு சதித்திட்டம் தீட்டி வருகின்றனர் என்ற குற்றம்சாட்டை முன்வைத்துள்ளார்.

வடக்கு குஜராத் பகுதியில் உள்ள பலன்பூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய மோடி, பாகிஸ்தான் தூதரும், பாக். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஹமீது அன்சாரியுடன் மணிசங்கர் ஐயரின் வீட்டில் வைத்து ரகசியமாக சந்தித்தனர். அந்த சந்திப்பில் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் இராணுவத் தலைவர் அர்சத் ரஃபீக், சோனியாவின் மூத்த ஆலோசகரான அகமது பட்டேலை குஜராத்தின் முதல்வராக ஆக்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தது தொடர்பாக பேசியுள்ளனர். அந்த ரகசிய சந்திப்பிற்குப் பிறகுதான் மணிசங்கர் ஐயர் என்னை ‘நீச்’ என்று விமர்சித்தார் என தெரிவித்தார்.

பாஜகவிற்கு இதுமாதிரியான பிரச்சாரமெல்லாம் புதிதல்ல..

பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் ஐந்து கட்டமாக நடைபெற்றது. தெற்கு மற்றும் மத்திய பீகாரில் இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில், எதிர்பார்த்த அளவிற்கான வாக்குவங்கியை பெற்றிருக்கவில்லை என்பதை உணர்ந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ‘பீகாரில் பாஜக தோற்றுப்போனால், அந்தத் தோல்வியை பாகிஸ்தான் கொண்டாடும்’ என பிரச்சாரங்களில் பேசினார். இருந்தபோதிலும், அந்தத் தேர்தலில் பாஜக நினைத்த அளவிற்கான வெற்றியைப் பெறமுடியாமல், அம்மாநில முதல்வர் நிதீஷ்குமாரை விலைக்கு வாங்கி புறவாசல் வழியாக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலின்போது பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ‘கான்பூரில் மிகப்பெரிய ரயில்விபத்து ஏற்பட்டது. அது சாதாரண விபத்தாக எனக்குப் படவில்லை. இதில் தீவிரவாதிகளின் சதி இருக்கிறது. நேபாள எல்லைக்குத் தப்பிச் சென்ற தீவிரவாதிகளைப் பிடிக்கவேண்டுமென்றால், பாஜகவிற்கு வாக்களியுங்கள்’ என கெஞ்சாத குறையாக பேசி முடித்தார். அங்கு ஆட்சியைப் பிடித்திருந்தாலும், மக்களின் அதிருதியைத் தவிர பாஜக வேறெதையும் சம்பாதித்ததாகத் தெரியவில்லை.

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குவங்கியோடு வெற்றிபெறத் துடிக்கும் பாஜக, அதன் அதிகார மையங்களாக கருதப்படும் சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்திருப்பதாகவே தேர்தல் கணிப்பாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.



சவுராஷ்டிரா பகுதியில் உள்ள படிதார் சமுதாய மக்களில் பெரும்பான்மையான வாக்குகளும், 18 முதல் 30 வயதுவரையிலான, அந்த சமுதாய இளைஞர்களின் வாக்குகளும் ஹர்தீக் பட்டேலுக்கே கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் நம்பகத்தன்மையாக நடந்துகொள்ளாத ஆளும் பாஜக அரசின் நிலைப்பாடும் இந்த நிலைக்கு காரணமாக முன்வைக்கப்படுகிறது.

89 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 60 தொகுதிகளைக் கைப்பற்றுவோம் என பாஜக தரப்பில் சொல்லப்பட்டாலும், அதற்குப் போட்டியாக ஐம்பதுக்கும் நெருக்கமான தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என காங்கிரஸ் தரப்பிலும் கூறிவருகின்றனர்.

மூன்றில் இரண்டு பங்கு வாக்குவங்கியோடு கூடிய வெற்றி என்ற நிலைமாறி, தற்போது வெற்றி என்பதே கேள்விக்குறியாகி இருப்பதுதான் மோடியின் தேசியவாத, இனவாத பிரச்சாரங்கள் தலைத்தூக்கிப் பார்ப்பதற்குக் காரணம்.
தேர்தலில் தோல்விபயம் எழும்போதெல்லாம் அண்டை மாநிலங்களையும், நாடுகளையும் வாய்க்கு வந்தபடி இழுத்துப் பேசுவது பாஜகவிற்கு புதிதொன்றும் இல்லையே!

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்