1930-ல் காந்தி நடத்திய உப்பு சத்தியாக்கிரகம் இந்திய அளவில் எழுச்சிமிகு போராட்டமாக அமைந்தது. வெள்ளைக்கார ஆட்சி, உப்புக்கு வரி விதித்ததை எதிர்த்து, தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து 24 நாட்கள் 240 மைல்கள் பயணித்து, தண்டியில் உப்பு அள்ளினார் காந்தி.
அவரது வழியில், தமிழ்நாட்டிலும் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தை ராஜாஜி தலைமையில் சர்தார் வேதரத்தினம் முன்னெடுத்தார். எழுத்தாளர் கல்கி, பத்திரிகையாளர் ஏ.என்.சிவராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ராஜாஜி, வேதரத்தினம் போன்றோர் கைதாகி 6 மாத சிறைத் தண்டனை பெற்றனர். இப்படி காந்தி முன்னெடுத்த போராட்டங்கள், அதற்காக அவர் போட்ட கட்டளைகளை நிறைவேற்றியதில் தமிழ்நாட்டுக்கும் முக்கிய பங்கு உண்டு.
வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தை நினைவுபடுத்தி ஆண்டு தோறும் திருச்சியிலிருந்து பயணம் மேற்கொள்கிறது திருவாரூர் காந்தியன் அறக்கட்டளை உள்ளிட்ட உப்பு சத்தியாக்கிரக யாத்திரை நினைவு கமிட்டி. 89வது ஆண்டு நினைவு யாத்திரை கடந்த 28.04.2019 ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள டி.எஸ்.எஸ். ராஜன் பங்களா நினைவு ஸ்தூபியில் தொடங்கியது. திருவாரூர் தெ.சக்தி செல்வகணபதி தலைமையில் ஏறத்தாழ 25 ஆண்டு காலமாக இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது.
இந்த யாத்திரை ஸ்ரீரங்கம், திருவளர்ச்சோலை, கல்லணை, கோவிலடி, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, திருக்கண்டியூர், தஞ்சாவூர், நெடார், அய்யம்பேட்டை, வழுத்தூர், பாபநாசம், நல்லூர், தாராசுரம், கும்பகோணம், வலங்கைமான், ஆலங்குடி, பூவனூர், ராஜப்பன்சாவடி, மன்னார்குடி, ஆதிச்சபுரம், தட்டாங்கோவில், திருத்துறைப்பூண்டி, மேலமருதூர், தகட்டூர், ஆயக்காரன்புலம் வழியாக 28.04.2019 இரவு வேதாரண்யம் வந்தடைந்தது.
மறுநாள் 29.04.2019 திங்கள்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை சர்தார் வேதரெத்தினம் சிலை அருகில் யாத்திரையில் பங்கேற்றவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 30.04.2019 செவ்வாய்க்கிழமை காலை அகஸ்தியம்பள்ளி புனிதக் கடற்கரையில் தியாகிகள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உப்பு அள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.