வடிவேலு இடத்தை நிரப்பும் கோமாளி அமைச்சர்கள் -நாஞ்சில் சம்பத் கலாய்ப்பு!
மதவாத கட்சிகளோடு அதிமுக கூட்டணி வைக்காது என்று அமைச்சர் செல்லூர் ராஜு பேசியிருக்கிறார், தினகரன் மூட்டைப்பூச்சியைப் போல நசுக்கப்பட வேண்டியவர் என்ற அர்த்தத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருக்கிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள் என்று தினகரன் அணியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத்திடம் நக்கீரன் இணையதளம் கேட்டது.
அதற்கு அவர் தனது இயல்புப்படி அளித்த பதில் இதோ...
தமிழ்நாட்டின் வரலாற்றில் இடைத்தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஆளும்கட்சி தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. தோல்விக்கான காரணத்தை சொல்ல முடியாமல் திணறுகிறார்கள். திணறுவதால்தான் இப்படியெல்லாம் செல்லூர்ராஜு போன்ற விஞ்ஞானிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
பாஜகவோடு உறவு இல்லை என்ற ஒரு முடிவை இவர்கள் எடுப்பார்களேயானால், பன்னீர்செல்வத்தையும், பழனிசாமியையும் இம்போர்ட்டண்டு என்று குருமூர்த்தி சொல்லுகிறார். அந்த 'இம்பொட்டென்ட்' என்று சொன்ன ஆடிட்டர் குருமூர்த்தி மீது வழக்குப்போட்டு ஏன் இன்னும் கைது செய்யவில்லை.
மோடியின் படத்தை எடப்பாடி பாக்கெட்டில் வைத்திருந்தார் என்ற தினகரன் தொண்டனை கைது செய்வதற்கு விலங்குகளோடு திரிகிறது போலீஸ். அதோபோல, குருமூர்த்திதான் இவர்களுக்கு ஆலோசகர், அவருடைய கட்டளையை ஏற்றுத்தான் இவர்கள் செயல்படுகிறார்கள் என்று கருத்து சொன்ன நாஞ்சில் சம்பத் மீது வன்கொடுமை சட்டத்தை ஏவிவிட்டது போலீஸ். ஆனால், இப்போது, முதல்வரையும் துணை முதல்வரையும் 'இம்பொட்டென்ட்' என்று சொன்னதற்கு பிறகும்கூட வழக்குப்பதிவு செய்யாமல், கைது செய்யாமல் பதுங்குவது ஏன்? இவர்கள் இன்னும் பாஜகவின் காலடியில்தான் விழுந்து கிடக்கிறார்கள்.
சரிவின் விளிம்பில், அழிவின் விளிம்பில் அஸ்தமனத்தின் உச்சியில் கொண்டு தள்ளப்பட்ட பிறகு, புலம்புகிற புலம்பல்தான் செல்லூர் ராஜுவினுடைய பேச்சு. இவருடைய பேச்சை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. வடிவேலு இல்லாத குறையை தமிழ்நாட்டில் இப்போது சில அமைச்சர்கள் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த கோமாளி அமைச்சர்களுக்கு தலைமை தாங்குகிற இடத்தில் இருக்கிறார் செல்லூர் ராஜு.
ஜெயலலிதாவுக்கு முடிசூட்டி மகிழ்ந்த ஆர்.கே.நகரில், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு டி.டி.வி. தினகரன்தான் என்று ஆர்.கே.நகர் மக்கள் முடிசூட்டிவிட்டார்கள். தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாகிவிட்டார் தினகரன். அமைச்சர்களாக இருக்கிற இந்த தாறுமாறுகள் 6 ஆயிரம் ரூபாய் கொடுத்த பிறகும் ஆர்.கே.நகரில் தினகரன் வாக்கிய ஓட்டில் பாதி ஓட்டைத்தான் வாங்கியிருக்கிறார்கள். அங்கே அவரை நசுக்க முடியாதவர்கள், தேர்தலுக்கு பிறகு நசுங்கிப்போனார்கள். இப்போது, யாரோ நம்மை நசுக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் பேசுகிற பேச்சை தமிழ்நாட்டில் எந்த முட்டாளும் நம்ப மாட்டான்.
-வே.ராஜவேல்