Skip to main content

இன்னும் வீசுகிறதா எம்.ஜி.ஆர் அலை? 

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

mgr

 

எம்.ஜி.ஆர் மறைந்து 33 வருடங்களாகிவிட்ட போதிலும் இன்னும் அவருடைய பெயர் தமிழக அரசியலில் எதிரொலித்துக்கொண்டேதான் இருக்கிறது. திமுகவிலிருந்து 1972ஆம் ஆண்டு பிரிந்த எம்.ஜி.ஆர் அதே ஆண்டு அதிமுகவை தொடங்கி, அடுத்த ஐந்து வருடங்களில் நடக்க இருந்த தேர்தலுக்கு ஆயத்தமானார். தனது சினிமா புகழ் எப்படி திமுக அரசியலுக்கும், ஆட்சிக்கும் உதவியதோ, அதேபோல தன்னுடைய அரசியலுக்கும் உதவும் என்ற நம்பிக்கையோடு தன்னுடைய அடுத்த தேர்தலுக்குத் தயாரானார் எம்.ஜி.ஆர்.  நேற்று இன்று நாளை (1974), இதயக்கனி (1975), இன்று போல் என்றும் வாழ்க (1977) உள்ளிட்ட படங்கள் அதிமுக தொடங்கியபின் வெளியானவை. இவற்றில்தான் அதிமுகவின் அரசியல் என்ன மாதிரியானது என்பதை மறைமுகமாகப் பரப்புரை செய்திருக்கிறார். 

 

இதுமட்டுமல்லாமல் அவருடன் இருந்த ஆர்.எம். வீரப்பன், திருநாவுக்கரசு போன்ற பலர் எம்.ஜி.ஆரின் அரசியலுக்கு உதவிகரமாக இருந்திருக்கின்றனர். என்னதான் தன்னுடைய பிம்பத்திற்கு மவுசு இருக்கிறது என்றாலும், அது வேறு, அரசியல் வேறு என்பதை முன்பே புரிந்துகொண்டு ஐந்து வருட காலம் தான் உருவாக்கிய கட்சியை வளர்த்தெடுத்து, வெற்றிபெறச் செய்தார் எம்.ஜி.ஆர். அதன்பின் அரசியலில் பெரிதும் சோபிக்கமாட்டார் என்று கணக்குப் போட்டவர்களுக்கு, தவறெனப் புரிய வைத்து தொடர்ச்சியாக மூன்று முறை வென்று காட்டியிருக்கிறார். அந்த பத்து வருட கால ஆட்சியில், எம்.ஜி.ஆர் மீது பல விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனாலும், அவற்றையும் முறியடித்துதான் வென்றிருக்கிறார். 

 

இந்த தொடர்ச்சியான மூன்று வெற்றியைதான் தற்போது அரசியலுக்கு வருபவர்கள் விரும்புகிறார்கள் எனத் தோன்றுகிறது. எம்.ஜி.ஆர் ஆட்சியில் நலத் திட்டங்களும் இருக்கின்றன, அதே அளவில் பொருளாதார இறக்கம், சில அடக்குமுறை போன்ற விமர்சனங்களும் இருந்தன. இந்த சூழலில், எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கொண்டுவரப் போகிறோம் என்று பெருமிதத்துடன் சொல்கிறார்கள் அரசியல் ரேஸுக்கு தயாராகுபவர்கள். எம்.ஜி.ஆரின் மோனோபோலியாக இருந்த அதிமுக, ஜெயலலிதா என்னும் மற்றொரு ஆளுமை கையில் கிடைத்தபோது அது வேறாக மாறியது. அப்போதிலிருந்து இப்போதுவரை அதிமுகவில் எம்.ஜி.ஆர். பேசப்பட்டாரோ இல்லையோ, ’அம்மா, அம்மா’ என்று ஜெயலலிதா பெருமளவில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னரும் கூட ‘மாண்புமிகு அம்மாவின் ஆட்சி...’ என்றுதான் முதல்வர் பழனிசாமி தொடங்கி அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் வரை மேடை ஏறினாலே சொல்கின்றனர். தற்போதைய ஆட்சி என்பது மறைந்த ஜெயலலிதாவினால் உருவானது. அதனால், இதை அம்மா ஆட்சி என்றுதான் சொல்ல வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் தெரிவித்துள்ளார். ஆனால், எம்.ஜி.ஆரின் ஒரே அரசியல் வாரிசு ஜெயலலிதா என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். அதை யாரும் சொந்தம் கொண்டாட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். 

 

தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான களம் தற்போதிலிருந்து சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக, அதிமுக இடையே வார்த்தைப் போர் தொடங்கி பின்னர் அடங்கிய நிலையில், எம்.ஜி.ஆர் யாருக்கு என்கிற உரிமைக்குரல் தற்போது உருவாகியிருக்கிறது. 

 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அண்மையில் மதுரையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்துகொண்டபோது மதுரையை இரண்டாம் தலைநகராக்கும் எம்.ஜி.ஆரின் ஆசை, தனது ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்றார். அதேபோல ட்விட்டரில்,  “புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும்” என்று இப்பதிவுடன் எம்.ஜி.ஆர் ஒரு விழாவில் கமலுக்கு சால்வை போற்றும் பழைய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

அடுத்த சட்டமன்ற தேர்தல் களத்தில் சந்திக்க இருப்பதாகத் தெரிவித்த ரஜினி, அதற்கு ஆரம்ப விதைப்போட்டது 2018ஆம் ஆண்டில்தான்.  “அரசியலுக்கு யார் வந்தாலும், யாரும் எம்.ஜி.ஆராக முடியாது. அவர் ஒரு தெய்வப் பிறவி. அவர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது. எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும். மதிய உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக மாற்றியவர் அவர். இன்று நான் வாழ்க்கையில் சந்தோசமாக இருப்பதும் முக்கிய காரணம் அவர்தான். அவரின் சிபாரிசில் தான் என் திருமணம் நடைபெற்றது. நான் இவ்வாறு பேசுவதால் எம்.ஜி.ஆர் விசுவாசிகளை இழுக்கப் பார்க்கிறார் என என்னைக் கூறுவார்கள்” என்று எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைக்கும் விழாவில் பேசியிருந்தார். ரஜினி அரசியல் குறித்துப் பேசுபவர்களும்கூட எம்.ஜி.ஆர் ஆட்சியைப்போல இருக்கும் என்று சொல்வதைக் கேட்க முடிகிறது.

 

திருவள்ளுவர் தொடங்கி தற்போது பாரதியார் வரை விட்டுவைக்காத பாஜக, இடையில் எம்.ஜி.ஆரையும் தங்கள் லிஸ்ட்டில் இணைத்துக்கொண்டது. பாஜகவின் வேல் யாத்திரை சமயங்களில் கொடிகள், பேனர்கள் என அனைத்திலும் எம்.ஜி.ஆர் இடம்பெற்றிருந்தார். இவர்களும் எம்.ஜி.ஆர் போன்ற ஆட்சியைக் கொடுப்பதாகத் தெரிவித்திருந்தார்கள். 

 

விஜயகாந்த் அரசியலுக்குள் வரும்போது கூட, கருப்பு எம்.ஜி.ஆர் என்று ஊரெங்கும் அவர்களுடைய ரசிகர்கள் பேனர்கள் வைத்தனர். எம்.ஜி.ஆர் தொப்பியை அணிந்துகொண்ட விஜயகாந்த் சிரிப்பது போன்ற ஓவியங்கள் பல சுவர்கள், பைபாஸ் மேம்பாலங்களிலும் இடம்பெற்றன. இவை அனைத்தும் அதிமுக பெருமளவில் எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்த மறந்துவிட்டது என்பதை உணர்த்துகிறதா? இல்லை, எம்.ஜி.ஆர் அலை இன்னும் இருக்கிறது என்ற நம்பிக்கையின் வெளிப்பாடா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...