மூடர் கூடம் நவீன் தயாரிப்பில் சில நாட்களுக்கு முன் வெளியான திரைப்படம் கொளஞ்சி. சமுத்திரகனி நடிப்பில் வெளிவந்த அந்த திரைப்படத்தில் பேசப்பட்ட வசனங்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வடநாட்டு கடவுள்கள் என்ற வார்த்தை அந்த படத்தில் பயன்படுத்தப்பட்டதற்கு பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பரபரப்பான வாத பிரதிவாதங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சர்ச்சைகள் தொடர்பாக இயக்குநர் நவீனிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். இதற்கு அவரின் பதில்கள் வருமாறு,
கொளஞ்சி படத்தில் இடம் பெற்றுள்ள வடநாட்டு கடவுள் என்ற வசனம் தொடர்பான காட்சிகள் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. சாதியத்தையும், மதவாதத்தையும் அந்த காட்சியில் விமர்சனம் செய்வது போன்று அமைத்திருப்பீர்கள். இந்த காட்சிக்கு பாஜக தலைவர் ஹெச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்து பெயரில் ஒளிந்துள்ள சமூக விரோத சக்திகள் என்றும், உங்கள் பெயரை ஷேக் தாவூத் என்று கூறி ஒரு டுவிட் போட்டுள்ளார். அதற்கு நீங்களும் ஒரு விளக்கம் கூறியிருந்தீர்கள். இந்த ஷேக் தாவூத் பற்றிய செய்திக்கு உங்களின் பதில் என்ன?
நான் சினிமாவுக்கு வந்த ஆரம்பத்திலேயே இதற்கான பதிலை கொடுத்துவிட்டேன். நான் முஸ்லிம் தாய், தந்தையருக்கு பிறந்தவன் தான். எனது தாயார் அவர்கள் திருமணத்துக்கு பிறகுதான் தியேட்டருக்கே செல்லும் அளவுக்கு கட்டுப்பாடுடன் வளர்க்கப்பட்ட முஸ்லிம் மதத்தை சார்ந்தவர். ஆனால், நான் சிறுவயதிலேயே அதில் இருந்து வெளியே வந்து விட்ட ஒரு பகுத்தறிவாளன். நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல. மனிதத்தை மட்டும் பேசுபவன். ஷேக் தாவூத் என்பது என்னுடைய பள்ளி சான்றிதழில் உள்ள ஒரு பெயர்தான். ஆனால், சிறுவயதில் இருந்தே என்னை அனைவரும் நவீன் என்றே அழைப்பார்கள். நீங்கள் கூறும் பெயரில் என்னை யாரும் அழைப்பதில்லை. அப்படி அழைத்தால் எங்கள் ஊரில் யாருக்கும் என்னை தெரியாது என்பதே உண்மை.
நவீன் ஏன் இந்து மத எதிர்ப்பை மட்டும் பேசுகிறார்?
நவீன் இந்து மத எதிர்ப்பை மட்டுமே பேசவில்லை. ஏற்கனவே பர்தா முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டதால் முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பை சம்பாதித்தேன். ஆகவே, மூட நம்பிக்கைகளை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எதிர்த்து கொண்டுதான் இருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக மட்டும் நான் பேசவில்லை. சாதியவாதமும், மதவாதமும் சமூகத்தில் இருக்க கூடாது என்பதில் தெளிவாக இருகிறேன்.
பிறப்பின் அடிப்படையில் இஸ்லாமியராக இருக்கிற ஒருவர், ஏன் இந்து மதத்தை எதிர்க்கிறார் என்று கேள்வி எழுகிறதே?
உங்கள் கேள்வி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் சமூகத்துக்காக ஆதரவாக பேசுகிறேன். அப்படி பேசினால் தப்பு என்று கூறுவீர்களா? ஜாதிய பெருமைகளை பேசுபவர்களை விட அதில் உள்ள மூட நம்பிக்கைகளை விமர்சிக்கலாம் என்பதை நான் அதிகம் நம்புகிறவன். அதனால், இந்துமதம் மட்டுமல்ல, இஸ்லாம் மதத்தில் உள்ள குறைகளையும் நான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளேன். ஆகையால், குறிப்பிட்ட மத்த்தை மட்டுமே நான் விமர்சனம் செய்கிறேன் என்பதே ஒரு தவறான கேள்வி. நமக்கு இருக்கும் ஒரே விஷயம் என்னவென்றால் குறிப்பிட்ட பிரச்சனையை மட்டும் பார்த்துவிட்டு, அதற்கு முன் செய்த செய்திகளை எல்லாம் மறந்துவிடுவது தான். நான் இஸ்லாமிய குடும்பத்தில் இருந்து வந்தவன் என்று பல நேர்காணல்களில் நேரடியாக கூறியிருக்கிறேன். அதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. அப்புறம், நான் லவ் ஜிகாதி என்று தவறான பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். நானே இஸ்லாமியன் அல்ல என்று கூறுகிறேன், அப்புறம் எதற்கு என்னுடைய மனைவியை மதமாற்றம் செய்ய போகிறேன். இது எல்லாமே இட்டுகட்டிய பொய்கள்.