Skip to main content

'இன்று காஷ்மீர்... நாளை தமிழ்நாடு' கொதிக்கும் பீட்டர் அல்போன்ஸ்..!

Published on 06/08/2019 | Edited on 06/08/2019


காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் 370 உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகளை மத்திய அரசு நேற்று நீக்கியது. மேலும், மாநில அந்தஸ்து நீக்கப்பட்டு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை தற்போது ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நம்முடைய பல்வேறு கேள்விகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அதிரடியாக பதிலளித்தார்.
 

peter




காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. மாநிலமாக இருந்த அது தற்போது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. இதை குறித்து உங்களின் பார்வை என்ன?

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அதிகார விதிமீறல் செய்துள்ளது. ஒரு மாநில அந்தஸ்து பெற்றுள்ள காஷ்மீரை எதற்காக இப்படி துண்டாட வேண்டும். இது இன்று காஷ்மீருக்கு நடக்கிறது. நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது. மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கும் இந்த அநீதி நடக்க வாய்ப்பிருக்கிறது. தங்களுக்கு எங்கெல்லாம் தேர்தல் ஆதாயம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் அதிகார மீறலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. ஒரு மாநிலத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டுவர விரும்பினால், அங்குள்ள தலைவர்களுடன் பேசி தீர்வு காண வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த விதிகளையும் மத்திய அரசு பின்பற்றவில்லை.

காஷ்மீரை பிரிப்பதால் அங்கு தொழில் வளம் மேம்படும் என்றும், காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறதே?

இதை பற்றி நாம் எதுவும் கூற இயலாது. காஷ்மீர் மக்கள்தான் அதை பற்றி தெரிவிக்க வேண்டும். ஆனால், மாநிலங்களின் குரலை ஒடுக்கநினைக்கும் அவர்கள், மக்களுக்கு நல்லது செய்துவிடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. நாம் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருப்பதும், பாண்டிச்சேரி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருப்பது ஒன்றா? நமக்கு தேவையான நிதியையும், உரிமைகளையும் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எடுத்து வைப்பார்கள். மாநிலங்கள் துண்டாடப்படும் போது அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது. தங்களுக்கான உரிமைகளை அவர்கள் போராடினால் கூட பெறமுடியாத சூழ்நிலை ஏற்படும். மாநில நலன் சார்ந்த திட்டங்களை மாநில தலைவர்களால் உருவாக்க முடியாது. அனைத்திற்கும் மத்திய அரசை எதிர்பார்க்கும் நிலை ஏற்படும். மாநிலங்கள் முனிசிபாலிட்டி போன்று குறுக்கப்படுவதால் எந்த நன்மையும் கிடைக்காது. மாறாக அந்த மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்பதே உண்மை.

காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் நேரு காலத்தில் வழங்கப்பட்டது. அந்த அனுமதி வழங்கப்பட்டு 70 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. கால சூழ்நிலைகள் மாறிவிட்டது. ஒரே நாட்டில் இரண்டு கொடிகள், நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் பொருந்தாது என்பது போன்ற பல்வேறு சூழ்நிலைகள் இந்த சட்டத்தின் மூலம் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக கூறுகிறார்களே? 

காஷ்மீருக்கு எதற்காக சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது என்பதை பார்க்க வேண்டும். இந்தியா சுதந்திரமடைந்த போது ஆங்கில அரசு பல்வேறு சிறப்பு உரி்மைகளை கொடுத்தது. நீங்கள் பாகிஸ்தானோடு செல்கிறீர்களா, இந்தியாவோடு இருக்கிறீர்களா அல்லது தனிநாடாக இருக்கிறீர்களா என்று அவர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அளித்தார்கள். ஆனால், அவர்கள் நாங்கள் மதசார்பற்ற இந்தியாவோடு இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அதன்படி அவர்கள் இந்தியாவோடு இணைந்தார்கள். அதையும் தாண்டி காஷ்மீர் முஸ்லிம்கள் தனித்துவம் மிக்கவர்கள். அவர்கள் மற்றவர்களோடு தங்களை தனிமைப்படுத்தியே எப்போதும் வைத்திருக்க விரும்புவார்கள். மேலும் இயற்கை வளங்களை அவர்கள் பெரிதும் நேசிப்பார்கள். ஆதலால், அவர்கள் வைத்த கோரிக்கைகளை அடுத்து அவர்களுக்காக அப்போதைய காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லா உடன் பேசி இந்த சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டது. இதை தற்போதைய பாஜக அரசு நசுக்க பார்கிறது. பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இதை எந்தமாதிரியாக பார்க்க போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.