மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நேற்று பதவி ஏற்றார். 1978ம் ஆண்டு முதல் 1996 ஆண்டு வரை தொடர்ச்சியாக மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர், 96க்கு பிறகு மாநிலங்களவைக்கு செல்லவில்லை. கடந்த 23 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டும் சிவகாசி தொகுதி மக்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டிருந்தார். 2004ம் ஆண்டில் இருந்து அவர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கபடவில்லை. சில முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நாடாளுமன்றம் சென்ற அவர், தன்னுடைய முதல் கேள்வியை நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பினார். இதுதொடர்பாக பேசிய அவர், "சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் மாநிலங்களவைக்கு வருகிறேன். இதை என்னுடைய கன்னிப் பேச்சாகவே நினைத்து பேசுகிறேன்" என்றார்.
மேலும், கேள்வி நேரத்தின் போது வைகோ நூற்பாலை பிரச்சனை தொடர்பாக பேசினார். இந்தியாவில் உள்ள அனைத்து நூற்பாலைகளும் விதிகளை பின்பற்றுகிறதா? அதனை அரசாங்கம் முறையாக கவனிக்கிறதா? பருத்தி விலை, பஞ்சு விலை அடிக்கடி மாறுவதால் ஏகப்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசாங்கம் என்ன செய்ய உள்ளது. தமிழ்நாட்டின் நூற்பாலைகள் விதிகளை முறையாக பின்பற்றுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் நூற்பாலைகள் விதிகளை மதிக்காமல் உள்ளது. அதனை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். சீனாவில் இருந்து ஆயத்த ஆடைகளை குறைந்த விலைக்கு வங்கதேசத்துக்கு அனுப்பி, அவர்கள் அந்த நாட்டின் முத்திரையை ஆடைகளில் பதித்து இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். இதனை தடுக்க அரசு என்ன முயற்சி எடுத்துள்ளது என்று கேளவி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி இரானி, "உறுப்பினர் கூறுவதுபோல எதுவும் நடைபெறவில்லை" என்று ஒற்றை வரியில் பதிலளித்தார். இதனால், அதிருப்தி அடைந்த அவர், அமைச்சரின் பதில் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று தெரிவித்தார். முதல் நாளே அமைச்சர்களை அலற வைத்த வைகோ, இன்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவையும் அலற வைத்தார். இரண்டாவது நாளான இன்று அவையில் பேசிய அவர், " தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தால் தமிழகத்தில் உணவு பஞ்சம் ஏற்பட்டு, தமிழகமும் எத்யோப்பியா போன்று மாறிவிடும். எனவே அந்த திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது, மீறி செயல்படுத்தினால், மக்கள் கிளர்ச்சி ஏற்படும் என்றார். இதை கேட்ட சபாநாயகர் வெங்கையா நாயுடு, அரசுக்கு கோரிக்கை வையுங்கள், எச்சரிக்கை விடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.