தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியில் இருந்து எம்.மணிகண்டன் 07.08.2019 புதன்கிழமை நீக்கப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர், கேபிள் கட்டணம் குறைப்பு பற்றி முதல்வர் தன்னிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை என்று தெரிவித்திருப்பதும், கால்நடை அமைச்சர் மற்றும் கேபிள் டி.வி.கார்ப்பரேசன் சேர்மனுமான உடுமலை ராதாகிருஷ்ணனை குற்றம் சாட்டி பேசியதும் தான் அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டத்தில் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு ஒரு வகையில் சந்தோஷம் என்றாலும், அதைவிட திருப்தியாக இருப்பவர் நடிகரும், திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ்.
இவர் ஏற்கனவே பலமுறை அமைச்சர் மணிகண்டன் மீது ஊடகங்களிடமும், முதல் அமைச்சரிடம் புகார் கூறியிருக்கிறார். ''கடந்த ஓராண்டாக எனது சொந்த தொகுதியான திருவாடானைக்கு என்னால் செல்ல முடியவில்லை. இதற்கு அமைச்சர் மணிகண்டன்தான் காரணம். அவர் தன்னிச்சையாகவும், தான்தோன்றித்தனமாகவும் செயல்படுகிறார். தொகுதியில் நடைபெறும் அரசு விழாக்களுக்குகூட எனக்கு அழைப்பிதழ் அனுப்புவதில்லை. அமைச்சரின் பேச்சை கேட்டுக்கொண்டு, அதிகாரிகள் செயல்படுகிறார்கள். இதனால் வாக்களித்த எனது தொகுதி மக்களை சந்திக்க முடியவில்லை.
எனது தொகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் கொடுக்கும் விழாவுக்கு எனக்கு அழைப்பு அனுப்பவில்லை. இதுகுறித்து டிஆர்ஓவிடம் கேட்டால் மழுப்பலாக பதில் சொல்கிறார். அமைச்சர் மணிகண்டனின் செயல்பாடுகள் குறித்து, ஏற்கனவே 2 முறை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து புகார் அளித்துள்ளேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது கருணாஸ் தரப்புக்கு ஓரளவு ஆறுதலை தருகிறதாம்.