தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். அவர்களின் மரணம் அடைய அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவலர்களே காரணம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு மதுரை உயர்நீதமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் தொடர்புடைய காவலர்கள் தற்போது ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக நடிகர் மயில்சாமி கருத்துத் தெரிவித்துள்ளார். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
சாத்தான்குளத்தில் போலிசார் அடித்ததில் தந்தை மகன் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. காவலர்கள் ஒருபுறம் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்தச் சம்பவத்திற்கு பலவேறு நடிகர், நடிகைகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நான் நீண்ட காலமாக எந்தத் தொலைக்காட்சி விவாதங்களிலும் வரவில்லை. ஏன் என்றால் வர விருப்பமில்லை. மக்களே வாக்குக்கு பணம் வாங்க ஆரம்பித்துவிட்டதால் நான் பேசுவதில்லை. இந்தச் சம்பவத்தைக் கேட்டதில் இருந்து தூக்கம் வர வில்லை. இதற்கு நான் பேசவில்லை என்றால் எப்படி? இதற்கு நான் பேசவில்லை என்றால் நான் மனிதனே இல்லை. நீங்கள் கேட்ட உடன் அந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்க்கிறேன். அவர்களை எப்படி எல்லாம் இவர்கள் சித்திரவதைச் செய்திருப்பார்கள். நினைக்கும் போதே நெஞ்சம் கணத்துவிடுகின்றது. அதையும் தாண்டி இவர்கள் இருவரையும் ஒரே அறையில் நிர்வாணப்படுத்தி அடித்திருக்கிறார்கள். இது அவர்களுக்கு எவ்விதமான மன அழுத்தத்தைக் கொடுத்திருக்கும்.
இந்தக் கரோனா காலத்தில் வீட்டை மறந்துவிட்டு, மனைவி மக்களைப் பிரிந்து பணியாற்றுகின்ற எத்தனையோ காவலர்கள் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களின் பெயர்களைக் கெடுக்கின்ற விதத்தில் சாத்தான்குளம் போலிசாரின் செயல்பாடுகள் அமைத்துள்ளன. அவர்கள் அப்படி என்ன தவறிழைத்துவிட்டார்கள். நாட்டில் எத்தனையோ தவறு செய்பவர்கள் நம்மதியாக இருந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குக் காவல்துறையினரே சில இடங்களில் பாதுகாப்பு தருகின்ற நிலையையும் நாம் பார்க்கின்றோம். மரியாதைக்குரிய அவர்களின் பணியை இந்த மாதிரியான சில போலிசார் கேவலப்படுத்தி உள்ளனர். ஒழுக்கம் கட்டுப்பாடு இருந்தால்தான் அந்தத் துறைக்கு வர வேண்டும் என்பது விதி. அப்படி இருக்கையில் அதை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு இவர்கள் நடந்துகொண்டுள்ளார்கள்.
அந்தத் தாக்குதலுக்கு உள்ளான நபர்களின் அக்கா அல்லது தங்கை என்று நினைக்கிறேன். அவர் சொல்கிறார், பென்னிக்ஸின் நெஞ்சில் நிறைய முடி இருக்கும் அதை எல்லாம் காவல்துறையினர் பிடுங்கி உள்ளனர் என்று. மேலும் போலிசார் இவர்களிடம் வேட்டி கேட்டுள்ளனர். அதுவும் வெள்ளை கலர் இல்லாத சாரத்தைக் கேட்டுள்ளனர். எதற்காக என்று பார்த்தால் வெள்ளை கலரில் ரத்தம் வருவது பளீச் என்று தெரிந்துவிடும் என்பதற்காக. சாதாரணமாக அடித்தால் எப்படி ரத்தம் வரும். இப்படி எல்லாம் சித்தரவதைச் செய்வதால் அவர்களுக்கு என்ன மகிழ்ச்சி கிடைத்துவிடப் போகிறது. ஏன், எதற்காக இப்படிச் செய்கிறார்கள். சட்டத்தைக் காப்பவர்களே சட்டத்தை மீறலாமா? தவறு செய்பவர்களைப் பிடித்துத் தண்டியுங்கள். அதிகார வெறியில் தவறு செய்யாதீர்கள். உங்களால் மற்றவர்களுக்கும் கேடு நேருகின்றது. காவலர்கள் இதைத் திருத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.