Skip to main content

கர்நாடக சங்கீதத்தை வளர்க்க தமிழ் மக்களின் வரிப்பணம் - புஷ்பவனம் குப்புசாமி ஆவேசம்!

Published on 22/02/2018 | Edited on 22/02/2018

தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி நியமனத்தில் அநீதி நடந்ததாக பரபரப்பாகப் பேசப்படுகிறது. அனைத்து தகுதிகளும் இருந்தும், முன்னரே விண்ணப்பித்தும், தான் நிராகரிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் விண்ணப்பித்த பிரமிளா குருமூர்த்தி முறைகேடாக நியமிக்கப்பட்டதாக புஷ்பவனம் குப்புசாமி குற்றம் சாட்டியுள்ளார். உலகறிந்த தமிழ் இசைக் கலைஞரான புஷ்பவனம் குப்புசாமியை சந்தித்தோம்...
 

"ராசாத்தி உன்ன எண்ணி இராப்பகலா காத்திருந்தேன்" என்று பாடத்தொடங்கி இசையோடு மக்களோடு இணைக்கப்பட்டவர் நீங்கள். உலக தமிழர்கள் மத்தியில் உங்கள்  முகம்  பிரபலம். அதை விட   துணைவேந்தர் பதவி  கௌரவம் என்று நினைக்கிறீர்களா?

pushpavanam kuppusamy

கண்டிப்பாக இருக்கிறது, அது கெளரவம் இல்லை அங்கீகாரம். அது எனக்கு கிடைத்த அங்கீகாரம் இல்லை, என் தமிழ் மக்களுக்கு, தமிழ் இசைக்கு கிடைத்த அங்கீகாரம். அங்கீகாரம் மிகவும் முக்கியம் அதுதான் நாளை வரலாற்றில் பேசப்படும். அது நமக்கு கிடைத்த அங்கீகாரமாக நான் நினைக்கிறேன். அது கிடைக்கவில்லை என்பதுதான் தவிர துணைவேந்தர் பதவிக்கு சென்று சொகுசாக இருந்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை, அங்கு சம்பாதிக்கவும் முடியாது. மேலும் என்னால் இசைக்கச்சேரிகள் செய்ய முடியாது எனக்கு பணிகள் அதிகமாக இருக்கும். இந்த பதவி எனக்கு வேண்டுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று என் தமிழ் மக்களின்  தமிழ் இசைக்குஒரு அங்கீகாரம் கிடைக்கவேண்டும். இரண்டாவது மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இசைக்கல்லூரிகளில் சங்கீதம்  படிக்கிறார்கள்  அவர்களையெல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கிறது. நான் கண்முன்னாலே பார்த்துள்ளேன். அவர்களுக்கு உதவித்தொகை கிடைப்பதில்லை. அவர்கள் இசை ஆசிரியராக பணிக்கு வரவேண்டும் என்றால் பல லட்சம் ரூபாய் லஞ்சம் அளித்துதான் பணிக்கு வரும் கட்டாய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதனையெல்லாம் கண்முன் பார்த்துள்ளேன். அந்த பதவிக்கு நான் சென்றுவிட்டால் தமிழ் இசையை வளர்க்கலாம். ஏன்னென்றால் இது தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இயங்கக்கூடிய பல்கலைக்கழகம். இங்கு கர்நாடக இசை மட்டும் கிடையாது. நுண்கலை என்று உள்ளது. நுண் கலை என்றால் ஓவியம், சிற்பம், திரைப்படம் மற்றும் மண்பானை செய்வதும் கூட வருகிறது.மண்பானை செய்பவன் பி.எச்.டி படிப்பை முடித்துவிட்டா ஆசிரியர் பணிக்கு வருகிறான். அவனிடம் பணம் வாங்கி பணி அளிப்பதை தடுத்து அவரின் திறமைக்கு ஏற்ற பணியை அளிக்க வேண்டும் என்பதற்காகதான் நான் இந்த பதவியை கேட்டேன்.
 

pushpavanam kuppusamy


இப்பொழுது துணைவேந்தராக இருப்பவர்கள் தமிழ் இசையை வளர்க்கமாட்டார்கள், அது தமிழ் இசைக்கு புறம்பானதாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? 
கண்டிப்பாக எதுவும் செய்ய முடியாது ஏனென்றால் இந்த பதவியே கர்நாடக இசைக்கு சாதகமாக செயல்படவேண்டும் என்பதற்காக தானே பிரமிளா என்பவரை நியமித்துள்ளனர். இவர் ஏற்கனவே வேறு பணியில் இருக்கிறார். சொல்லப்போனால் இவர் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை, இவர்களால் தூண்டபட்டுள்ளார். இதற்கு சான்றாக ஒன்றை நான் சொல்கிறேன் சுதா ரகுநாதன் இந்த கமிட்டியின் விற்பனை குழு தலைவர். அமெரிக்காவில் "கிளீவ்லேண்ட்" எனும் இடம் உள்ளது அங்கு சுந்தரம் என்பவர் சபா ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு கர்நாடக சங்கீதம் மட்டும்தான் சொல்லித்தருகிறார். இவர்கள் அங்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார்கள் ஐந்து கோடி ரூபாய்க்கு. அதில் பாரம்பரிய இசை கற்றுத்தரப்படும் என்கிறார்கள். ஆனால் அதில் கர்நாடக இசை மட்டும்தான் உள்ளது. ஏன் கர்நாடக இசை மட்டும்தான் பாரம்பரிய இசையா? திருவாசகம், தேவாரம் எல்லாம் பாரம்பரிய இசை இல்லையா? நீங்கள் ஏன் பானை செய்வதற்கெல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடவில்லை சொல்லுங்கள். கிராமத்தில் மக்களின் பாடல் இப்படித்தான் இருக்குமென்பதையும், தேவாரம், திருவாசகம் இப்படித்தான் பாட வேண்டும் என்பதையும் அவர்களால் சொல்லித்தர முடியுமா என்னை தவிர? என் கோபமும், ஆதங்கமும் என்னவென்றால் கர்நாடக இசையை கற்றுக்கொடுக்க என் தமிழ் மக்களின் வரிப்பணத்தை செலவழிப்பதுதான்.  மாதம்தோறும் வரும் ஒரு லட்சம் ரூபாய் வைத்து என்னால என்ன சாதிக்க முடியும்? வேறு என்ன ஒரு கார் கொடுப்பாங்க ஏற்கனவே என்னிடம் நான்கு கார்கள் உள்ளது.


கிராமிய இசை, கர்நாடக இசை மற்றும் மேலை நாட்டு இசை என அனைத்து இசைகளும் நீங்கள் பாடுவீர்கள். கர்நாடக இசை மட்டும்தான் பாரம்பரிய இசையாக இருக்கிறது என்ற ஒரு  தோற்றம்  சமூகத்தில் உள்ளதே...

அந்தத் தோற்றத்தை உடைக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கமே. என் ஆராய்ச்சி படிப்பில் தலைப்பு 'மக்கள் இசை பாடல்களே சாஸ்திரிகள் இசைக்கு அடித்தளம்' என்பதே. அதாவது கர்நாடக இசைக்கு அடித்தளம் மக்கள் இசை என்று அர்த்தம். "மக்களின்  இசைதான் நாட்டுப்புற இசை என்று சொல்லமாட்டேன். நாட்டுப்புற இசை என்றால் நாட்டிற்கு புறம்பான இசை என்று பொருள்படும் அதனால்தான் அதற்கு மக்கள் இசை என பெயரிட்டேன். என் ஆராய்ச்சிக்கு பல இன்னல்கள் கொடுத்தார்கள். பத்தாண்டுகள் கழித்து "மக்கள் இசையின் மாண்பு" என்று தலைப்பை மாற்றிய பின்புதான் என் முனைவர் பட்டத்தை முடிக்க முடிந்தது. என் ஆராய்ச்சியில்  மக்கள் இசை பாடல்களுக்கு இசை குறிப்புகள் எழுதியுள்ளேன்.
 

pushpavanam kuppusamy


மக்கள் இசைப்பாட்டில் தாலாட்டு, தெம்மாங்கு, ஒப்பாரி, கானா என்று அனைத்தும் வரும். அவையெல்லாம் ஒரு விதிக்கு உட்பட்டதா கர்நாடக இசை மாதிரி ?
மக்கள் இசைப்பாடல் வாழ்வியலுடன் இணைந்தது. இதற்கு விதிகள் இல்லை, கர்நாடக இசை நவரசத்துக்குள் அடங்குவது .
 

கர்நாடக இசை என்றால் இப்படிதான் பாடவேண்டும் என்ற விதி உள்ளது... ?

ஆம் கண்டிப்பாக உள்ளது. தியாகராஜர் எழுதியுள்ளார் என்றால் அதனை அதன்படிதான் பாடமுடியும். அதனை மாற்ற முடியாது. ஆனால் மக்கள் இசை பாடல்கள் அப்படியல்ல. அவர்களுக்கு தோன்றும் வார்த்தைகளை கொண்டு பாடுவார்கள். அனைவரும் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் கர்நாடக இசை முதலில் வந்ததாகவும் தமிழ் இசை அதிலிருந்து பிச்சை எடுத்ததாகவும் கருதுகின்றனர். ஆனால் முதலில் உருவானது தமிழ் இசை பாடல்கள்தான் இசைக்கென்று ஒரு நூல் உள்ளது. இலக்கணத்திற்கு ஒரு நூல் உண்டு தமிழ் இசைக்கென்று ஒரு நூல் உள்ளது. தமிழ் இசை நூல் சிலப்பதிகாரம், இலக்கண நூல் தொல்காப்பியம். நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள் தமிழர்களே சிலப்பதிகாரத்தின் காலம் இரண்டாம் நூற்றாண்டு. திருவாசகம், தேவாரம் இவையெல்லாம் பண்கள் இதன் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு. கர்நாடக இசையின் காலம் 15 ஆம் நூற்றாண்டில் பேசப்பட்டு, பின்னப்பட்டு 17ஆம் நூற்றாண்டில் விரிவடைகிறது. தமிழ் இசை கர்நாடக இசையாக  மாறுகிறது. அப்பொழுது தியாகராஜர், முத்துசாமி தீக்ஷிதர் , டி.எம்.எஸ், ஷேமா சாஸ்திரி இவர்கள் அவரவர் தாய்மொழிகளில் விதிகளை வகுக்குகிறார்கள். இதை நாம் குறை சொல்ல முடியாது. கர்நாடகம் என்றால் பழமை என்று பொருள். இரண்டாம் நூற்றாண்டில் வந்த தமிழ் இசை பழமையா, இல்லை 17 ஆம் நூற்றாண்டில் வந்த கர்நாடக இசை பழமையான இசையா சொல்லுங்கள் தமிழ் மக்களே.
 

அரசாங்கம், தகுதியின் அடிப்படையில்தான் துணை வேந்தரை நியமிக்கின்றனர் என்று சொல்கிறார்கள் உங்களை விட அவர்களுக்கு என்ன தகுதியுள்ளது?  
தகுதியின் அடிப்படையில்தான் நியமித்ததாக சொல்கிறாரே தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர், அதற்கு நான் ஒன்று சொல்கிறேன். அம்மா ஜெயலலிதா இந்த இசை பல்கலைக்கழகம் தொடங்கியபொழுது முதலில் வீணை கலைஞர் காயத்ரியை துணைவேந்தராக நியமித்தார்கள். அவர்கள் பட்டம் பெறவில்லை இருந்தாலும் நல்ல வீணை கலைஞர் அதானால் நியமித்தார்கள். அவர் பணிக்காலம் முடிந்தவுடன் நான்கூட விண்ணப்பிக்கவில்லை  என்னை விண்ணப்பிக்க சொன்னவர்களே வீணை காயத்ரியுடன் இருந்தவர்கள்தான். நீங்கள் எந்த விரோதமும் இல்லாதவர் அனைத்து இசையையும் விரும்புபவர் என்றார்கள். என் மனைவியார்தான் அம்மாவிடம் சென்று என் கணவரும் இசையில் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார் என்றவுடன்  உங்கள் கணவரின் தகவல்களை கொடுத்து செல்லுங்கள் என்று அம்மா கூறியுள்ளார். என்னிடம் வந்து சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்து, "நல்லது செய்யலாம்" என்று நினைத்தேன். அதன்பின் ஏற்பட்ட மாற்றத்தின் பொழுது சசிகலா அம்மா அவர்களும் அம்மா என்னிடம் கூறியுள்ளார் உங்கள் சுயவிவரத்தை கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்றார். மேலும் பணியை நல்லமுறையாக செய்வாரா என்றல்லாம் கேட்டார். பின்பு அவர்களும் இல்லாமல் போக இவர்களாக புதிதாக பத்தாண்டுகளாக பேராசிரியராக இருக்க வேண்டும் என்கின்ற  விதியை உருவாக்கி  என்னை நீக்கிவிட்டார்கள்.
 

pushpavanam kuppusamy


உங்களை கர்நாடக இசை கலைஞராக ஏற்றுக்கொள்வார்களா?
என்னை மட்டுமில்லை மதுரை சோமு அவர்களை, சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை, டி.எம்.எஸ் அவர்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் கர்நாடக இசையை நன்றாக பாடுவார்கள். பாரதியார் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்  தானே அவர் தனது பாடல்களில் பெரும்பாலானவற்றை மக்கள் வாழ்வியல் ரீதியான மெட்டுகளில் பாடல்களை தானே பாடினார். "அச்சமில்லை அச்சமில்லை" என்ற  வீரமான பாடலை அவர்கள் வேறுமாதிரியாக பாடுகிறார்கள். இவர்களுக்கு கர்நாடக இசையை பாடுபவர்கள் முக்கியமில்லை, யார் பாடுகிறார் என்பதுதான் முக்கியம். இசையை ஜாதி ரீதியாக கொண்டு செல்கிறார்கள். இந்த ராகம் யாருடையது தமிழனுடைய ராகம் சிலப்பதிகாரத்தில் உள்ள பாடல்கள் மீனவர்கள் பாடிய பாடல்தான். இதனை தமிழனே ஆதரிக்காமல் இருக்கிறார்கள்.
 

நீங்கள் தமிழர் என்று சொல்கிறீர்கள். ஆனால் வடநாட்டை சேர்ந்த  பெண்ணை திருமணம் செய்துள்ளீர்கள்?
இது எந்த இடத்திற்கு போனாலும் கேட்கப்படுகிற நியாமில்லாத கேள்வி. அவரை திருமணம் செய்த பிறகுதான் தமிழ் மீது பற்று வந்தது. எனக்கு தமிழ் உணர்வை ஊட்டியது என் மனைவிதான். அதற்கு முன்புவரை எனக்கு தமிழ் பற்று இல்லை. அவர் தமிழச்சிதான். அவர் என்றும் தன்னை அனிதா அகர்வால் என்று குறிப்பிட்டுக்கொண்டது இல்லை, அனிதா குப்புசாமி என்றே குறிப்பிடுவார். அனிதாவிற்கு "தமிழச்சி" என்று சொல்வது தான் பிடிக்கும்.

சந்திப்பு : ஃபெலிக்ஸ்