Skip to main content

எம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

raja kannapan political journey

 

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதில் திமுக 133 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, நேற்று (05/05/2021) மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழு தலைவராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். 

 

அதன் தொடர்ச்சியாக, நாளை (07/05/2021) காலை 09.00 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழாவில், தமிழகத்தின் முதலமைச்சராக முதன்முறையாக மு.க. ஸ்டாலின் பதவியேற்கிறார். இந்நிலையில் திமுக அமைச்சரவை பட்டியலைத் தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. 

 

அதன்படி, போக்குவரத்துத்துறை அமைச்சராக ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழக அரசியலில் மிகநீண்ட வரலாற்றைக் கொண்ட ராஜா கண்ணப்பன் எம்.ஜி.ஆரின் தீவிர தொண்டராகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தவர். எம்.ஜி.ஆர் மீது கொண்ட பற்றால் 1972 ஆம் ஆண்டு தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். கட்சி பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு மிகத்தீவிரமாக பணியாற்றிய இவர், படிப்படியாக உயர்ந்து மாவட்டச் செயலாளர் ஆகியிருந்த காலத்தில் எம்.ஜி.ஆர் மறைவு காரணமாக அதிமுக இரண்டாக உடைந்திருந்தது. இதில் ஜெயலலிதா பக்கம் நின்ற ராஜகண்ணப்பன், 1989 தேர்தலில் ஜெ அணி சார்பாகத் திருப்பத்தூரில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். 

 

ஆட்சி கலைப்புக்குப் பின்னர் 1991 -ல் நடந்த தேர்தலில் அதிமுக சார்பாகத் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், ஜெயலலிதாவின் ஐந்தாண்டுகால ஆட்சியில் நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை மற்றும் மின்சாரத்துறை என மூன்று துறைகளுக்கு அமைச்சராக இருந்தார். மூன்று துறைகளையும் சிறப்பாகக் கையாண்டதோடு கட்சி பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டதற்காக ஜெயலலிதாவின் பாராட்டுகளைப் பெற்றதோடு, 'கம்ப்யூட்டர் கண்ணப்பன்'  என ஜெயலலிதா அழைக்குமளவுக்கு அவரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார் கண்ணப்பன். அதன் பின்னர் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில், அக்கட்சியிலிருந்து விலகிய இவர், 2000 ஆவது ஆண்டு மக்கள் தமிழ்த் தேசம் என்ற தனிக்கட்சியைத் துவக்கினார். இதற்காக இவர் 25 லட்சம் தொண்டர்களைக் கூட்டி சென்னையில் நடத்திய மாநாடு, அக்காலத்தில் மிகப்பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

2001 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி. மு. க வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இவர், 2006 ஆம் ஆண்டு தனது கட்சியைக் கலைத்துவிட்டு தி.மு.கவில் இணைத்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் இளையான்குடியில் போட்டியிட்டு வென்ற இவர், பிப்ரவரி 2009 -ல் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தி.மு.க -விலிருந்து விலகினார். அதன்பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்த இவருக்கு, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார் ஜெயலலிதா. ஆனால், மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ப.சிதம்பரத்திடம் இவர் தோல்வியைத் தழுவினார். 

 

அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தென் தமிழக தேர்தல் பொறுப்பாளராகவும், 2016 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராகவும் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை அதிமுக வென்றதில் முக்கிய பங்காற்றியவர் இவர். ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு சசிகலா குடும்பத்தை எதிர்த்த இவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திமுகவில் இணைத்தார். இவரது அரசியல் மீது நம்பிக்கை கொண்டு இந்த தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து, தீவிர களப்பணி ஆற்றிய இவர், இத்தேர்தலில் 94784 வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற நிலையில், தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். 1991 சட்டசபையில் அமைச்சராக அங்கம் வகித்த இவர் தற்போது 30 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.