50 சதவீத மானிய விலைக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த இடைக்கால தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்த ராமகுமார் ஆதித்தன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ," தமிழகத்தில் மானிய விலை இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் பிப்ரவரி 24-ல் தொடங்கப்படுகிறது.இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படும். இரு சக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது 25 ஆயிரம், இதில் குறைவான பணம் வழங்கப்படும். இதனால் ஆண்டுக்கு அதிகபட்சம் அரசுக்கு ரூ.250 கோடி வரை செலவாகும்.நடப்பாண்டில் ஒரு லட்சம் வாகனங்களை பெற 3,36,104 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஏற்கெனவே இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் மீண்டும் இரு சக்கர வாகனம் பெறுவதை தடுக்க விதிகள் இல்லை. இரு சக்கர வாகனம் வாங்க 50 ஆயிரம் முதல் 75 ஆயிம் வரை செலவிட தயாராக இருந்தால் அவர் பொருளாதார ரீதியில் வலுவான நிலையில் உள்ளவர். இவர்களைப் போன்றவர்களுக்கு மானியம் வழங்க வேண்டியதில்லை. பொருளாதார ரீதியில் வலுவாக உள்ளவர்களுக்கு மானியம் வழங்குவது திட்டத்தின் நோக்கத்தை சீரழிப்பதாகும்.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் சிறப்பு இரு சக்கரம் வாகனம் வழங்கி வருகிறது. 50 சதவீத மானிய திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திமுக ஆட்சியில் 1.72 கோடி இலவச கலர் டிவி மற்றும் இலவச கேஸ் இணப்பு, கேஸ் அடுப்பு வழங்க 3942 கோடி செலவிடப்பட்டது. அடுத்தவந்த அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் இலவச கிரைண்டர், மிக்சி, லேப்டாப், சைக்கிள், வேஷ்டி, சேலை வழங்க 1.20 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அரசின் நிதிப்பற்றாக்குறை அதிகமாக உள்ளது.இதனால் தமிழகத்தில் நிதிப்பற்றாக்குறை முழுமையாக நீங்கும் வரை பழைய இலவச திட்டங்களை தொடரவும், புதிய இலவச திட்டங்களை அமல்படுத்தவும் கூடாது என்றும், அதுவரை 50 சதவீத மானிய விலைக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் " என மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.