Skip to main content

எழுந்து சென்ற பறவை நீ... -பாடலாசிரியர் வேல்முருகன்

Published on 12/07/2018 | Edited on 12/07/2018
lyricist velmurugan

 

 

 

எழுந்து சென்ற
பறவை நீ
கிளைகளாய் அசைகிறது
உன் ஞாபகங்கள்.

 

எழுதிக் குவித்த
பேனா நீ
முள் உடையாமலே கிடக்கிறது
மரணித்து.

 

இழுத்துப் போர்த்திய
வானம் நீ
தூறிக்கொண்டே இருக்கிறது
உன் மேகங்கள்.

 

காஞ்சிப் புரத்து
பட்டுப்புழு நீ
பாட்டொலி வீசிப் பறக்கிறது
உன் கொடிமரங்கள்.

 

காதல் பண்ணாத
கவிஞன் நீ?
எத்தனையோ காதலர்களுக்கு
உன் பல்லவிகள்.

 

வலிகள் தாங்கிய
அரசன் நீ
தொடமுடியாமல் கிடக்கிறது
உன் சிம்மாசனம்.

 

 

ஸ்டராக்கள் நிரம்பிய
மூளை நீ
ஆயிரங்களில் உறிஞ்சியது
திரைப்பாக்கள்.

 

தாயோடு வளராத
குழந்தை நீ
பாடல்களால் தாலாட்டுகிறாய்
நீண்ட இரவுகளில்.

 

பள்ளிக் கூடத்து
மாணவன் நீ
புத்ததகமும் கையுமாய்
உன் அடையாளங்கள்.

 

கண்ணுக்குக் காட்டாத
உறக்கம் நீ
இப்போது துஞ்சுகிறாய்
எண்ணற்ற செவிகளில்.