கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், மன்னர்கள் காலத்தில் இருந்த டோல்கேட் முறை குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு,
"இன்றைக்கு இருக்கும் டோல்கேட் முறை ஆங்கிலேயர்கள் காலத்திலேயே... ஏன், சேர, சோழ, பாண்டியர்கள் காலத்திலேயே வந்துவிட்டது. அந்தக் காலத்தில் கட்ட வண்டி போவதற்கு ஏற்ற மாதிரி சிறிய ஒத்தையடி பாதை மட்டும் இருக்கும். அது வழியாகத்தான் ஆட்களும் நடந்துபோவார்கள். கால்நடைகளும் செல்லும். எல்லையில் கேட் போட்டு ஒருபுறம் பாண்டியர்களும் மற்றொருபுறம் சோழர்களும் இருப்பார்கள். அந்தந்த நாட்டு அடையாள உடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள். இங்கிருந்து செல்லக்கூடிய வாணிகம் செய்யக்கூடியவர்கள் எல்லையில் கப்பம் கட்டிவிட்டுத்தான் அடுத்த எல்லைக்குள் செல்ல வேண்டும். அதுபோக எல்லையில் நின்று கொண்டு அவர்கள் கொண்டுவரும் பொருட்களில் சிலவற்றையும் எடுத்துக்கொள்வார்கள். உழைக்கும் மக்களிடம் இன்றைக்கு உள்ள போலீஸ்காரர்கள் அத்துமீறுவதுபோல.
இன்றைய போலீஸ்தான் அன்றைய படைவீரர்கள், இன்றைய எஸ்.பி. அன்றைக்கு தளபதி, இன்றைய சி.எம். அன்றைக்கு அரசர். பெயர்கள்தான் மாறிவிட்டனவேயொழிய மக்களை சுரண்டுவது அப்படியேதான் உள்ளது. வியாபாரிகளிடம் சுங்கவரி என்ற பெயரில் காலணா, அரையணா என்று வரி வசூலித்திருக்கிறார்கள். இது மாதிரியான சுங்க வரியால் அன்றைக்கு அதிகம் பாதிக்கப்பட்டது வாணிகம் செய்யக்கூடிய வியாபாரிகள்தான். இந்த வரி மட்டுமல்ல வாணிப வரி, திருமண வரி என்று பல வரிகள் அன்றைக்கு இருந்தன". இவ்வாறு ரத்னகுமார் தெரிவித்தார்.