தொகுதிக்குள் வீடு, இரண்டு வருடங்களாக சுணக்கமில்லாத தேர்தல் வேலை என ஜரூராக வலம் வந்த நிலையில், நீலகிரி நாடாளுமன்ற பொதுத்தேர்தலை விட்டு ராஜ்யசபா எம்.பி. ஆகியிருக்கின்றார் மத்திய இணை அமைச்சர் எல். முருகன். அதன் பின்னணியை அலசினால் ஊட்டி குளிரைத் தாண்டி அனலடிக்கின்றது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் உள்ளிட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுடன், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மேட்டுப்பாளையம், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவிநாசி மற்றும் ஈரோடு மாவட்டத்தினைச் சேர்ந்த பவானிசாகர் சேர்ந்து மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது நீலகிரி நாடாளுமன்றம். இதில் கூடலூர் மற்றும் பவானிசாகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் தனித் தொகுதிகள். பொதுவாக மேற்கு மண்டலங்களில் அ.தி.மு.க. செல்வாக்குமிக்க கட்சியாக கட்டமைத்திருந்தாலும், மலைப் பகுதிகளான ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய தொகுதிகளில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் செல்வாக்கு மிக்கவையாகவும், சமவெளிப் பகுதிகளில் உள்ள மேட்டுப்பாளையம், அவிநாசி மற்றும் பவானிசாகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் செல்வாக்கு மிக்கவையாகவும் திகழ்கின்றன.
“தாராபுரம் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ராஜ்யசபா எம்.பி.யாகி மத்திய இணை அமைச்சர் ஆனதிலிருந்தே தனித் தொகுதியான நீலகிரி தொகுதி மீது எல்.முருகனுக்கு ஒரு கண் இருந்து வந்தது. இந்த முறை நீலகிரி தொகுதியில் சீட் வாங்க வேண்டும் என்பதற்காக, ஈராண்டிற்கு முன்பே, நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் வேலைகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துவங்கிவிட்டார். மத்திய அரசின் பல திட்டங்களை கூடலூர், மேட்டுப்பாளையம், காரமடை, உதகை சுற்றுவட்டாரப் பகுதியில் துவக்கி வைத்து, தனது இருப்பை காட்டிக்கொண்டார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தாம்தான் பா.ஜ.க. வேட்பாளர் என அவர் தொகுதிக்குள் வீடுகள் எடுத்து தேர்தல் வேலையை பார்க்கலானார். வேறு எந்த வேலைக்கு தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றாலும் நீலகிரிக்கு கட்டாயம் வந்துவிடுவார். கல்யாணம், விருந்து, துக்க வீடுகளில் அவ்வப்போது தலையைக் காட்டி, தான் தொகுதிக்காரன் என்ற நினைவை மக்களிடம் பதியவைத்தார்.
அ.தி.மு.க. கூட்டணியில் எப்படியும் நீலகிரியை பெற்று, அதில் களம் இறங்கத் திட்டமிட்டு காய்நகர்த்தி வந்தார் எல்.முருகன். இதை உறுதிப்படுத்திடும் வகையில், அண்மையில் மேட்டுப்பாளையத்தில் தேர்தல் அலுவலகத்தையும் திறந்து வைத்தார். அதுபோல், 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் இருமுறை பா.ஜ.க. சார்பில் மாஸ்டர் மதனின் வெற்றி, அ.தி.மு.க.வுடனான கூட்டணி ஆகிய கணக்கீட்டில் எளிதாக வென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். தனக்கு போட்டி, தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா என்றே களத்தினை எதிர்கொண்டார். இருப்பினும், இன்று அவர் ம.பி.யில் ராஜ்யசபா சீட்டை உறுதிப்படுத்திக் கொண்டார். இனி இங்கு அவர் போட்டியிடும் சூழல் இல்லை என்பதே உண்மை” என்கின்றார் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சரவணக்குமார்.
தொகுதியில் படுகர்கள், பழங்குடியினர்கள், பட்டியலின சமூகத்தினர்கள், கவுண்டர்கள் மற்றும் ஒக்கலிகர்கள் உள்ளிட்டோர் கணிசமான எண்ணிக்கையில் இருப்பினும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைப்பகுதி சட்டமன்றத் தொகுதிகளில் தமிழர்கள், படுகர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களாக மாறுபடுகின்றனர். இதேவேளையில், சமவெளிப்பகுதி சட்டமன்றத் தொகுதிகளில் பட்டியலின சமூகத்தினர்கள் மற்றும் கவுண்டர்கள் வெற்றி வேட்பாளரைத் தீர்மானிக்கும் சக்திகளாக விளங்குகின்றனர்.
மாங்கோடு பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான ராஜாவோ, “இங்கு தி.மு.க.விற்கு யாரும் போட்டியில்லை. நீலகிரி தொகுதியில் தி.மு.க.வின் வெற்றி உறுதி என்பதாலேயே எல். முருகன் விலகினார் என்றே கூறலாம். நீலகிரி மாவட்டத்தில் பெரு மழையின்போது, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பேரிடர் பாதிப்புகளை பார்வையிட்ட ராசா, சீரமைப்புப் பணிகளை முடுக்கிவிட்டார். இந்த முறையும் நீலகிரியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசாதான் களம் இறங்குவார். அதுபோல் டான் டீ தேயிலைத் தொழிலாளர்கள் விவகாரத்தில் நேரடியாக நின்று தொழிலாளர்களைக் காத்தவர். வெற்றி எளிதானது. அதே வேளையில் பா.ஜ.க.விற்கு என தனிப்பட்ட செல்வாக்கு இங்கு இல்லை” என்றார் அவர்.
இது இப்படியிருக்க, வியாழனன்று நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கான பா.ஜ.க. பிரதிநிதிகள் மாநாடு ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பா.ஜ.க.வின் நீலகிரி தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளரான நந்தகுமார், “ஆ.ராசாவிற்கு எதிராக செல்வாக்குமிக்க வேட்பாளரை கட்சி அறிவிக்கும், சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும்” என்றார் அவர். இதே வேளையில் ஆ.ராசாவை எதிர்க்க அனைவரும் ஒதுங்கிய நிலையில், “எனக்கு சீட் கொடுங்கள். நான் வெற்றி பெறுவேன்” என சீட் வேண்டி டெல்லிக்கு பறந்திருக்கின்றார் வழக்கறிஞரான சௌந்திரபாண்டியன்.
மாவட்ட உளவு அதிகாரி ஒருவரோ, “மேட்டுப்பாளையம், பவானிசாகரில் அ.தி.மு.க. ஓட்டு கை கொடுக்கும் என மலைபோல் நம்பியிருந்தார் முருகன். ஆனால், கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி பிடி கொடுக்கவில்லை. இதனால், தோல்வி நிச்சயம் என்பதை கணித்த எல்.முருகன், கோவையைச் சேர்ந்த கல்லூரி ஒன்றின் உதவியுடன் சைலண்டாக சர்வே ஒன்றை எடுத்தார். அதிலும் தேறமாட்டோம் என்பது தெரியவர வேறு வழியில்லாமல் தன்னுடைய டெல்லி லாபி மூலம் ராஜ்ய சபா சீட்டை வாங்கி தன்னைக் காத்துக்கொண்டார்” என எல்.முருகன் பின்வாங்கிய பின்னணியை எடுத்துரைத்தார்.
தேர்தலுக்கு முன்னரே நீலகிரி தி.மு.க. வசமாகியுள்ளது. என்ன செய்யப்போகின்றது பா.ஜ.க?
-நா.ஆதித்யா
படங்கள்: விவேக்