Skip to main content

காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை - கவிஞர் வைரமுத்து!

Published on 11/06/2020 | Edited on 11/06/2020

 

xம


அமெரிக்காவின் மின்சொட்டாவில் கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணை ஒன்றின் போது ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற நபர் காவலரால் கொல்லப்பட்டார். இதனையடுத்து கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. கடந்த பத்து நாட்களாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், உலகம் முழுவதிலும் இருந்து இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு குவிந்து வருகிறது.  ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் ‘என்னால் சுவாசிக்க முடியவில்லை’.
 


நிறவெறிக்கு எதிராக இன்று உலகமே சிலிர்த்து எழுந்திருக்கிறது. உலகத்தின் பெரும்பான்மை நாடுகளில் அந்தக் கிளர்ச்சி காட்டுத் தீயாய் பரவிக்கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாகவும், நிறவெறிக்கு எதிராகவும் கவிஞர் வைரமுத்து ஒரு பாடல் எழுதியிருக்கிறார். ரமேஷ் தமிழ்மணி இசையமைத்திருக்கிறார். நேற்று மாலை வெளியிடப்பட்ட ‘காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை’ என்ற அந்தப் பாடல் உலகம் முழுவதும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. கறுப்பின மக்களுக்கு ஆதரவாக ஒரு தமிழனின் குரல் இதோ...

காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்
மூச்சுவிட முடியவில்லை

என் காற்றின் கழுத்தில் - யார்
கால்வைத்து அழுத்துவது?
சுவாசக் குழாயில் – யார்
சுவர் ஒன்றை எழுப்பியது?

காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்
மூச்சுவிட முடியவில்லை

எத்தனை காலம் விலங்குகள் இறுகும்?
எத்தனை காலம் நுரையீரல் நொறுங்கும்?

ஆளைப் பார்த்து மழையும் பெய்யுமா?
தோலைப் பார்த்துக் காற்று வீசுமா?

காக்கையும்  உயிரினம்
கருமையும் ஒரு நிறம்
எல்லா மனிதரும் ஒரே தரம்
எண்ணிப்பாரு ஒரு தரம்
 


மாளிகை நிறத்தை மாற்றுங்கள் - ஒரு
பாதியில் கறுப்பைத் தீட்டுங்கள்

நீங்கள் பகல் நாங்கள்  இரவு
இரண்டும்  இல்லையேல் காலமே  இல்லை

காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்
மூச்சுவிட முடியவில்லை


https://www.youtube.com/watch?v=TIUkCI9F1CE