ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நாங்கள் விடமாட்டோம் என பேசினார். நீண்ட நாட்களாக கொடநாடு பற்றி யாரும் பேசவில்லை. கொடநாடு வழக்கு என்பது அ.தி.மு.க.வின் முதன்மை தலைவராக உள்ள எடப்பாடியின் முதுகெலும்பை முறிக்கக்கூடிய குற்றச்சாட்டுகள் கொண்டது. கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளையை நடத்தியது எடப்பாடி. வீட்டில் கொள்ளையடித்த நபர் எப்படி அ.தி.மு.க.வின் தலைவராக வரமுடியும்? என்கிற கேள்வி அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எழுகிறது. சமீபத்தில் எடப்பாடிக்கு சாதகமாக வந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைப் பற்றி பேசிய ஓ.பி.எஸ்., “கொடநாடு வழக்கில் தி.மு.க.வுக்கும் எடப்பாடிக்கும் இடையே மறைமுக ஒப்பந்தம் இருக்கிறது, அதனால்தான் அந்த வழக்கு அப்படியே நிலுவையில் இருக்கிறது” என்றார்.
இந்நிலையில், திடீரென்று முதல்வர் ஸ்டாலின் எப்படி கொடநாடு வழக்கு பற்றிப் பேசினார்? அதில் முன்னேற்றம் இருக்கிறதா? என காவல்துறை வட்டாரங்களைச் சுற்றி வந்தோம்.
மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கிறது என அடித்துச் சொன்ன அவர்கள், அதற்கான தரவுகளையும் தந்தார்கள். கொடநாடு வழக்கு எடப்பாடி ஆட்சி முடிந்து மறுவிசாரணைக்கு தி.மு.க. ஆட்சியில் வந்தது. கோவை மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான டீம் விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணை முடியும் தறுவாயில் திடீரென சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அந்த வழக்குப் போனது. ஆனால் அந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சுதாகர் டீமின் விசாரணையின் தொடர்ச்சி விட்டுப்போகக்கூடாது என சுதாகர் டீம் விசாரணையில் முக்கிய பங்கு வகித்த சந்திரசேகர் என்கிற டி.எஸ்.பி.யை சி.பி.சி.ஐ.டி. டீம், தங்களோடு இணைத்துக் கொண்டது.
சுதாகர் டீம் விசாரிக்காத பலரை சி.பி.சி.ஐ.டி. விசாரித்தது. அதில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக கொடநாட்டில் சி.சி.டி.வி. பதிவுகளைக் கையாண்ட தினேஷ், கொடநாடு கொள்ளைக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்டார். அதை காதல் விவகாரம் என சுதாகர் டீம் சொன்னது. இல்லை என தினேஷின் அப்பாவை கடுமையாக விசாரணை செய்து காரணம் கேட்டது சி.பி.சி.ஐ.டி. டீம். கொடநாட்டில் மர வேலைகள் பார்த்த கூடலூர் சஜீவன் என்பவர், கொடநாட்டில் கொள்ளையடித்து கொலை செய்துவிட்டு கேரளாவுக்கு தப்பிச் சென்ற கொலையாளிகளை, ஒரு செக்போஸ்ட்டில் தமிழக போலீசார் கைது செய்யும்போது, அவர்களை தப்பிக்க வைத்தார். அந்த சஜீவனை, சுதாகர் விசாரித்தார். ஆனால் சஜீவன் அப்போது துபாயில் இருந்தார். அவரது தம்பிகள்தான் போலீசாரை மிரட்டி தப்பிக்க வைத்தனர். அவர்களை நையப்புடைத்து தங்கள் விசாரணை வளையத்தில் கொண்டுவந்தனர் சி.பி.சி.ஐ.டி. போலீசார். அதேபோல் கொடநாடு கொலை, கொள்ளை நடந்த சமயத்தில் நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக இருந்தவர் முரளிரம்பா. இவரும், ஐ.ஜி.பாரியும் சேர்ந்து கொடநாடு கொள்ளை முடிந்த பிறகு ஜெ.வின் அறையிலிருந்த தங்கத்திலான குருவாயூரப்பன் சிலைகளை திருடிக்கொண்டு போனார்கள். அவர்களை சுதாகர் டீம் விசாரிக்கவில்லை. தற்பொழுது சி.பி.ஐ.யில் இருக்கும் முரளிரம்பாவை கஸ்டடிக்கு கொண்டுவந்து விசாரித்திருக்கிறது சி.பி.சி.ஐ.டி. டீம்.
இந்நிலையில் சுதாகர் டீம் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கும் போது ஒரு முக்கியமான துப்பை ஆராய்ந்து கொண்டிருக்கிறது. எடப்பாடியின் பாதுகாவல் அதிகாரியாக இருந்த கனகராஜ் என்பவர் தற்பொழுது விழுப்புரம் காவல்துறையில் இருக்கிறார். அவரைப் பற்றிய முக்கியமான தகவல்தான் அது.
கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த ஜெ.வின் முன்னாள் பாதுகாவலர் கனகராஜ் (இரண்டு பெயரும் ஒன்றே) கொள்ளை முடிந்ததும் சேலம் ஆத்தூரில் ஒரு கார் விபத்தில் இறக்கிறார். கொள்ளையடித்த கனகராஜ் உபயோகித்த செல்போன் பி.எஸ்.என்.எல். செல்போன். ஆத்தூரை அடுத்த காட்டுக்கொட்டாய் என்கிற ஊரில் அவரது அண்ணனுடன் சேர்ந்து மது குடித்துவிட்டு ஆத்தூருக்கு வந்தபோது எதிர்த் திசையில் வேகமாக வந்து மல்லிகா நல்லுசாமி என்பவரது காரில் மோதி இறந்துபோனார். அவரது மரணம் நடப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு எடப்பாடி அவரிடம் பேசியிருக்கிறார். எடப்பாடியின் செக்யூரிட்டி ஆபீசரின் செல்போன் எண் இறந்த கனகராஜின் செல்போனில் பதிவாகியிருக்கிறது. ஜி.டி.ஆர். என்ட்ரி என்ற தரவுகள்படி இந்த விஷயத்தை சுதாகர் டீம் கண்டுபிடித்தது. அதைப் பின்தொடர்ந்த சி.பி.சி.ஐ.டி. டீம், எடப்பாடியின் செக்யூரிட்டி ஆபீசரான விழுப்புரம் மாவட்டத்தில் தற்பொழுது டி.எஸ்.பி.யாக பணியாற்றும் கனகராஜை கடுமையாக விசாரித்து வருகிறது. செத்துப்போன கனகராஜை எப்படித் தெரியும்? அவன் சாவதற்கு முன்பு அவனுடன் நீ ஏன் போனில் பேசினாய். நீ தனிப்பட்ட முறையில் பேசினாயா? அல்லது உன் போனை வாங்கி எடப்பாடி பேசினாரா?
கொடநாடு கொலை, கொள்ளையில் கனகராஜ் பணத்தைத் தேடி அந்த பங்களாவுக்குள் செல்லவில்லை. ஆவணங்களைத்தான் எடுத்துக்கொண்டு சென்றதாக கனகராஜுடன் ஒன்றாகப் பயணித்த சயான் சொல்கிறார்.
அந்த டாகுமெண்டுகள் எங்கே? எடப்பாடிக்கும் இந்த கொள்ளை, கொலைக்கும் என்ன தொடர்பு? கொள்ளையடித்த கனகராஜை யார் கொன்றது? கொடநாடு கொலை, கொள்ளையில் கனகராஜ் மரணத்திலும் எடப்பாடி நேரடியாக தலையிட்டாரா? எடப்பாடி உனது செல்போனை வைத்து தான் ரகசியமான விஷயங்களைப் பேசுவார் எனச் சொல்கிறார்களே? என ஏகப்பட்ட கேள்விகளை சி.பி.சி.ஐ.டி.யினர் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதில், கனகராஜ் உண்மையைச் சொல்கிறாரா? இல்லையா என்பதை அறிய அவரை உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் சி.பி. சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள். இதில் சில விஷயங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதனால்தான் முதல்வர் வெளிப்படையாக வாய் திறந்திருக்கிறார் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.