உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற சம்பவம் சில நாட்களாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் அடுத்த கட்ட நகர்வாக அண்ணாமலை பயன்படுத்தி வந்த வாட்ச் சர்ச்சை ஏற்படுத்தியது. ரபேல் போர் விமானத்தைத் தயாரித்த நிறுவனம் உருவாக்கியதாக அண்ணாமலையால் கூறப்பட்ட அந்த வாட்ச் உலகத்திலேயே மொத்தம் 500 மட்டுமே இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த வாட்ச் விலை 5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகின்ற நிலையில், இந்த வாட்ச் வாங்கியதற்கான பில்லை வெளியிடும்படி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் டீக்கடையில் இந்த வாட்சை பற்றி எப்போது மக்கள் பேசுகிறார்களோ அப்போது பில்லை வெளியிடுவேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக வழக்கறிஞர் பாலுவிடம் நாம் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் கூறியதாவது, "இந்த விவகாரம் பெரிய அளவில் விவாதத்திற்கு வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அமைச்சர் கேள்விக்குக் கூட வாட்சை பற்றி எல்லாம் சின்ன பிள்ளை தனமாக நான் பேச முடியாது என்று அதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் வாட்ச் ரசீது பற்றி பதில் சொல்லாமல், தேவையில்லாமல் அவரும் அவரது கட்சிக்காரர்களும் பேசியதனால் மட்டுமே இந்த பிரச்சனை இந்த அளவுக்கு வந்துள்ளது. வாட்ச் விலையைக் கேட்டால் எவ்வளவு, எப்போது வாங்கியது என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியது தானே? நீங்கள் தான் ரொம்ப வெளிப்படையான மனிதர் ஆச்சே, அப்புறம் எதற்காகப் பயப்படுகிறீர்கள்.
ஒரு ரசீதைக் காட்டுவதற்கு உங்களுக்கு ஏன் இத்தனை மாதங்கள் தேவைப்படுகின்றது. உங்களிடம் ரசீதைக் கேட்டால் வருமான வரிக்கணக்கை வெளியிடுகிறேன் என்கிறார். அதைத்தான் கடந்த வருடம் தேர்தலின்போதே பார்த்து விட்டோமே. இப்போது எதற்கு அதைப்பற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை. நாம் ஒன்று கேட்டால் நாமே அசந்து போகும் அளவுக்கு அவர் வேறு ஒரு பதில் சொல்கிறார். 16 வயதினிலே சப்பாணி கேரக்டர் போல் அண்ணாமலை தொடர்ந்து உளறி வருகிறார். தைவான் காளான் சாப்பிடுபவர்கள் எல்லாம் டெல்லியில் தன்னை ஏழைத்தாயின் மகன் என்று சொல்வதைப் போல், இவர் இங்கே தன்னை ஏழைத்தாயின் மகன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். தற்போது அதில் பிரச்சனை வந்ததும் மாற்றி மாற்றிப் பேசுகிறார்" என்றார்.