இந்தியாவில் பல செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் இருந்தும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் 18 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற தமிழக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்தான். கடந்த 25 ஆம் தேதி விஸ்வநாதன் ஆனந்த் ஒரு ட்வீட் போட்டார் அதில், "வெல்கம் டூ தி க்ளப், பிரக்ஞானந்தா. சீ யு சூன் இன் சென்னை" என்று குறிப்பிட்டிருந்தார். இவரைத் தொடர்ந்து பல அரசியல்வாதிகளும், பிரபலங்களும் பிரக்ஞானந்தா என்னும் அந்த 12 வயது சிறுவனை பாராட்டி வந்தனர். தற்போது வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிவிட்டதால் நேரில் சென்றும் பலர் பாராட்டி வருகின்றனர். நேற்று தமிழக ஆளுநர், பிரக்ஞானந்தாவையும் அவரின் குடும்பத்தினரையும் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது செய்தியாளர்களை நேரில் சந்தித்து பேசிய பிரக்ஞானந்தா, “இதுவரை 20 க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று உலக சாம்பியன், ஆசிய சாம்பியன் பட்டங்களைப் பெற்றுள்ளேன். தற்போது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றது மிகழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றவர்தான் இந்த பிரக்ஞானந்தா. உலகின் முதல் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த செர்ஜட் கர்ஜாகின். இவர் 2002 ஆம் ஆண்டு அவருக்கு வயது 12 வருடம் 7 மாதம். அப்போதே அவர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுவிட்டதனால் பிரக்ஞானந்தா மூன்று மாத வயது வித்தியாசத்தில் உலகின் இரண்டாவது கிராண்ட் மாஸ்டராக இருக்கிறார். பிரக்ஞானந்தா இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டில் பிரக்ஞானந்தா 10 வயதில் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை பெற்ற இளம் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய உலக சாம்பியனாக இருக்கும் மக்னஸ் கார்ல்சன்கூட கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை தன்னுடைய 13 வயதில்தான் பெற்றார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் என்பது செஸ் விளையாடும் வீரர்களுக்கு கனவு பட்டம் என்றே சொல்ல வேண்டும், இதுதான் செஸ் விளையாட்டின் உயரிய பட்டமாகும்.
எப்படி இவர் இந்த கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார்:
அதற்கு மொத்தம் மூன்று தகுதி பெற வேண்டும். முதல் கிராண்ட் மாஸ்டருக்கான தகுதி 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் நடந்த உலக இளம் செஸ் போட்டியில் சாம்பியன்ஷிப் பெற்றார். இரண்டாவது தகுதியான ஹெற்காலியன் பிட்சர் நினைவு கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்த வருட ஏப்ரல் மாதத்தில் கலந்துகொண்டு வெற்றிகண்டார். கிராண்ட் மாஸ்ட்டருக்கு தேவையான கடைசித் தகுதி போட்டியில் பிரக்ஞானந்தனுடன் விளையாட இருப்பவருக்கு 2482 இ.எல்.ஓ. (E.L.O.) ரேட்டிங் இருக்க வேண்டும். பிரக்ஞானந்தனுடன் இறுதி போட்டியில் விளையாடிய கிராண்ட் மாஸ்டர் ப்ருஜ்ஜர்ஸ் ரோலண்ட் 2514 புள்ளிகளுடன் இருந்தார். இவரையும் தோற்கடித்து உலகின் இரண்டாம் இளம் கிராண்ட் மாஸ்டராகினார் பிரக்ஞானந்தன். இவருடைய அக்காதான் செஸ் விளையாடுவதற்கு இன்ஸ்பிரேஷன் என்று கூறியுள்ளார். இவரது அக்கா உலக 14 வயதுகுட்பட்டோர் மற்றும் 17 வயத்துக்குட்பட்டோர் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரக்ஞானந்தனின் கோச்சாக செயல்பட்டவர் இந்தியாவின் பத்தாவது கிராண்ட் மாஸ்டர் ராமச்சந்திரன் ரமேஷ்...