உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் அமைச்சராக வருவார் என்று அமைச்சர்களால் தொடர்ந்து கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சில நாட்களுக்கு முன்பு விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டது குறித்து அதிமுக மற்றும் பாஜக கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அவரை தீவிரமாக எதிர்த்து வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலு அவர்களிடம் கேட்டபோது, " பக்கத்து வீட்டில் குழந்தை பிறந்தால் குழந்தை இல்லாதவங்க வாயிலும் வயிற்றிலும் அடிச்சிப்பாங்க. அதைப் போன்று உளறுகின்ற மனநோயாளிகளின் பேச்சைப் பற்றி நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஸ்டாலின் அவர்களுடைய ஜாதகத்தில் எல்லா கட்டத்தையும் பார்த்துவிட்டோம். அவர் முதல்வராவதற்குரிய எந்த ராசியும் இல்லை என்று சிலபேர் பேட்டியெல்லாம் கொடுத்து வந்தார்கள்.
ஜாதகமெல்லாம் பொய் என்பதை ஏற்கனவே நாம் இளங்கோவடிகளின் வாழ்க்கையில் நடந்ததை வைத்துப் பேசியிருந்தோம். ஸ்டாலின் அவர்களை பாஜக அதிமுகவிலிருந்த சில கும்பல்கள் துண்டு சீட்டு எழுதி எடுத்து வந்து படிக்கிறார் என்று கூறினார்கள். ஸ்டாலின் அவர்களை மட்டுப்படுத்த அவர்கள் செய்த எதுவுமே எடுபடவில்லை. அவர் மக்கள் ஆதரவோடு சிம்மாசனத்தில் அமர்ந்தார். இன்றைக்கு அதேபோல இளைஞர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இடத்தில் என்ன விமர்சனம் வருகிறது என்று பார்க்க வேண்டும்.
திமுக என்ன குடும்ப சொத்தா, திமுகவில் வேறு யாரும் ஆளே இல்லையா என்று யார் கேட்கிறார்கள் என்று பார்த்தால் பாஜகவில் எந்தவித பொறுப்பும் இல்லாமல் இருக்கிற தலைவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு இரண்டு வருஷத்துக்கு முன்னாடி போட்டிருந்த காக்கிச்சட்டையை கழட்டிப் போட்டுவிட்டுக் குறுக்கு வழியில் வந்து குறுக்குச் சால் ஓட்டுகின்ற அண்ணாமலை அதைப்பற்றிப் பேசக்கூடாது. இன்றைக்கு என்ன ஆடியோ வரப் போகிறது; நாளைக்குக் காலை என்ன வீடியோ வரும்? இந்த நிலையில்தான் கட்சியை அவர் வைத்துள்ளார்கள். மூத்த தலைவர்கள் எல்லாம் அவர் கட்சி நடத்துவதைப் பார்த்து பொருமிக்கொண்டு இருக்கிறார்கள். இவர் வாரிசு என்று பிறரை சொல்லுகின்ற தார்மீகத் தகுதியை இழந்துவிட்டார்" என்றார்.