"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்..." - கௌசல்யா உணர்வலை
உரையாடலின் தொடர்ச்சி...
இந்த சம்பவத்திற்கு அடிப்படை காரணம் உங்கள் காதல், சாதியை தாண்டி நீங்கள் காதல் செய்ததால் ஏற்பட்ட கோபம்... இத்தனை வருட சிறை தண்டனையை அனுபவித்த உங்கள் தந்தை, தன் தவறை உணர்ந்திருக்கிறாரா, மனம் மாறியிருக்க மாட்டாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இல்லை தோழர்... அவர் உணர்ந்ததாக நான் நினைக்கல. நீங்க என்னோட ஃபேஸ்புக் பக்கத்தை பாருங்க. அங்க, இப்படி ஒரு தீர்ப்பை ஆதரித்து, வக்கிரமான மனநிலையோடு எவ்வளவு பேர் கொண்டாடுறாங்க என்று உங்களுக்குத் தெரியும். ஒன்னுமே தெரியாத ஒரு பையன, சின்னச்சாமிகிட்டயும் அன்னலக்ஷ்மிகிட்டயும் பேசியது கூட இல்லாத சங்கரை ஆள் வைத்து வெட்டுனாங்க. நாங்க அப்படி என்ன தப்பு பண்ணோம்? இந்த தீர்ப்பிலும் சாதியம் வேலை செஞ்சுருக்கு. அவுங்க என்னையும்தான் வெட்டணும்னு இதை செய்தார்கள். சங்கரை தனியே வெட்டவேண்டுமென்றால் அவன் தனியாக தினமும் பஸ்ஸில் போனபோது செய்திருக்கலாம். என்னையும் கொல்ல நினைத்த அவர்கள், தவறை உணர்ந்தது போல எனக்குத் தோன்றவில்லை. வெட்டப்பட்ட நான் உயிரோட இருக்கும்போதே இப்படி ஒரு தீர்ப்பு வந்தது வேதனையளிக்குது.
காலம் எல்லாத்தையும் மாற்றும் என்று சொல்வோம். அவர்களது மனநிலையையும் காலம் மாற்றியிருக்காதா?
இல்லை... என்னுடன் பிறந்த வளர்ந்த என் தம்பி கௌதம். நாங்கள் சின்ன வயசுல இருந்து சாதி குறித்து பேசியதில்லை. எங்களுக்கு சாதி சங்கங்களின் தொடர்பும் இல்லை. ஆனா, இன்னைக்கு அவன் எப்படி மாறியிருக்கான் என்று பார்க்கவே வியப்பா இருக்கு. அவனது ஃபேஸ்புக் பக்கத்தில் போய் பார்த்தால் முழுக்க முழுக்க சாதிப் பெருமை, சாதி வன்மம் நிறைந்திருக்கு. அந்த குடும்பத்தின் சூழல் முற்றிலும் மாறியிருப்பதை என்னால் உணர முடியுது.
அவர்கள் உங்களை ஏதாவது தொடர்புகொண்டார்களா?
இல்லை... தொடர்புகொள்ற அளவுக்கு நான் எந்த வாய்ப்பையும் வச்சுக்கல.
சிறு வயதிலிருந்து அந்தக் குடும்பத்தில் நீங்க வாழ்ந்திருக்கீங்க... அப்பா - மகள் என்ற உறவு இருந்திருக்கும். நேற்று அவர் விடுதலையானபோது எப்படி உணர்ந்தீர்கள்?
எனக்கு அழுகைதான் வந்தது. கட்டுப்படுத்த முடியாத அழுகை. சுற்றியிருந்த எல்லோராலும் ஆற்றப்பட முடியாத அழுகை. ஒரு குற்றவாளி இப்படி எளிதாக வெளியே செல்ல முடியுதே என்ற அழுகை. என்னோட இந்த நிலைக்குக் காரணம் அவுங்கதான். எத்தனை பேர் என்னவெல்லாம் எழுதுனாலும், அடிப்படையில் அவங்கதான் எங்களை இப்படியாக்கியது. அவுங்க ஒரு நிமிடம் யோசிச்சு விட்டு இருந்தா இந்த குமரலிங்கத்தில் ஒரு மூலையில் நாங்க வாழ்ந்திருப்போம்.
சட்ட ரீதியாக சரி, மன ரீதியாக உங்களுக்கு உங்கள் பெற்றோரை மன்னிக்கலாம் என்று தோன்றவில்லையா?
இதே கேள்வியை நான் அவுங்ககிட்ட கேக்குறேன். அவுங்க ஒரு நிமிஷம் எங்களை மன்னிக்கணும்னு நினைச்சிருந்தா இன்று நான் உங்களிடம் இப்படி பேசும் நிலையே வந்திருக்காது. ஒரு நிமிஷம் அவுங்க யோசிச்சிருந்தா, நாங்க எங்க வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருந்திருப்போம். அந்த உயிர் அவுங்களுக்கு இவ்வளவு சின்னதா போச்சு?பொத்திப் பொத்தி வளர்த்தோம், ஆசையா வளர்த்தோம் என்று சொல்றாங்க. அப்படி வளர்த்தவங்களுக்கு என்னை வாழ வைக்கணும்னு தோணலையே. விட்டு இருந்தா நாங்க கண்ணுக்குக் காணாத தூரத்தில் போய் வாழ்ந்திருப்போம். ஒருத்தர் போய் சாதி அழியப்போகுதான்னு கேக்குறாங்க. அந்த ஒருத்தருக்குப் பின்னாடி ஒவ்வொருத்தரா ஆயிரம் பேர் ஆகியிருப்பாங்க.
உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
உச்சநீதிமன்றத்துல ஒரு வழக்கறிஞரிடம் பேசி வருகிறோம். நீதியை பெற எத்தனை ஆண்டுகளானாலும் தொடர்ந்து போராட உள்ளோம். விடுதலையான அத்தனை பேரும் தண்டனை பெறவேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.
உங்கள் தாயுமா?
ஆம்.. அவரும் இதில் ஈடுபட்டார்தானே?