கமல் தனது பிறந்த நாளன்று "அரசியலுக்கு வருவது சாதாரணம் அல்ல, மக்களின் பிரச்னைகளை மக்களோடு மக்களாக புரிந்துகொள்ள வேண்டும்" என்றார். மக்களின் கருத்துக்கள் பிரச்னைகள் எல்லாம் தெரிந்துகொள்ள முதல்கட்டமாக மையம் என்ற செயலியை வெளியிட்டார். அரசியலுக்கு வரவேண்டும் என்றால் மக்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ள வேண்டாமா, கட்சிக்கு என ஒரு பெயர், கொடி, சின்னம் இதெல்லாம் வேண்டாமா என்று கேட்டவர்களுக்கு, கமல் "பிப்ரவரி 21 முதல் தமிழகத்தை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். முதல் ஊராக நான் பிறந்த இராமநாதபுரத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறேன், அப்போது என் கட்சிக்கான பெயர் சின்னத்தை எல்லாம் அறிவிப்பேன்" என்று சொல்லிவிட்டு அவர் மேற்கொள்ள போகும் அந்த சுற்றுப்பயணத்திற்கு 'நாளை நமதே' என்று பெயர் சூட்டினார்.
இந்த அரசியல் பயணங்களை தொடர்வதற்கு முன் கல்லூரி ஒன்றில் பங்குபெற்று மாணவர்களுடன் அரசியல், சமூகம் போன்றவற்றை கலந்துரையாடினார். இந்த கல்லூரி கலந்துரையாடலை அடுத்து கமல்ஹாசன் அமெரிக்காவில் ஒருவார சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று ஒரு தகவல் வெளிவந்தது. இந்த அமெரிக்கா பயணத்தை உறுதி செய்யும் வகையில் தன் டிவிட்டர் பக்கத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு கான்பிரன்சில் பேசப்போவதாக பதிவு செய்திருந்தார். அமெரிக்காவிற்கு சென்ற கமல், பிப்ரவரி 8ஆம் தேதி 'ப்ளூம் எனர்ஜி' சிஇஓ ஸ்ரீதரை சந்தித்தார். இச்சந்திப்பில் தமிழகத்துக்கு ப்ளூம் எனர்ஜி தயாரிக்கும் ஆற்றல் எவ்வாறு பயன்படும், வேறு என்னென்ன ஆற்றல்கள் எல்லாம் தமிழகத்தை உயர்த்தும் போன்ற விஷயங்களைப்பற்றி கலந்துரையாடியிருக்கிறார். பரவாயில்லை, அரசியலுக்கு நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு தேர்தலுக்கு மட்டும் நேராக வராமல் ஒவ்வொரு துறையில் சிறந்தவர்களை சந்தித்து வருவது சிறப்புதான் என்று பலரும் நினைக்கும் வகையில் இருந்தது அந்த சந்திப்பு.
பிப்ரவரி 10ஆம் தேதி ஹார்வர்ட் பல்கலைக்கழக கான்பிரன்சில் பேசப்போகும் கமலுக்காக காத்திருந்த அனைவருக்கும், கமலின் தோற்றமே ஆச்சரியத்தை அளித்தது. இதே ஹார்வர்டில் இரண்டு வருடங்களுக்கு முன்பு பேச வந்த கமல் ஹாலிவுட் ஹீரோ போன்ற தோற்றத்தில் கோட், உள்ளே ரவுண்ட் நெக் டி ஷர்ட் என்று பின்னினார். இந்த ஆண்டு அதற்கு அப்படியே எதிராக வெள்ளை வேஷ்டி, கருப்பு சட்டை என்று தமிழ் பாரம்பரிய உடையில் மேடையேறி தமிழ்நாட்டின் நிலவரத்தையும் அதை எவ்வாறு மாற்றவேண்டும் என்பது போன்ற தன் சிந்தனைகளை குறித்து பேசினார்.
உரையை வணக்கம் என்று தமிழில் கூறியே ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹார்வர்டில் உரையாற்றியபின் நடந்த நேர்காணலில் அரசியல் ரீதியாக கேட்கப்பட்ட கேள்விக்கு சற்றும் தாமதிக்காமல், தெளிவாக பதிலளித்து வந்தார். அரசியலில் என்னுடைய நிறம் காவியாக இருக்காது. ரஜினியும் நானும் ஒரு நல்ல நோக்கத்துக்காகத்தான் அரசியலுக்கு வருகிறோம். சினிமா வேறு அரசியல் வேறு போன்ற வசனங்கள் மூலம் அந்த நேர்காணலை சூடு பறக்க வைத்தார். மையம் என்ற செயலிக்கு 'நாளை நமதே' என்ற பெயரை மாற்றி அமைத்தார். தற்போது ஹார்வேடில் ஆற்றிய உரையை தமிழில் மொழிமாற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "மாவட்டம்தோறும் ஒரு கிராமம் தத்தெடுப்பு. மாறுபட்ட தமிழகம் உருவாக உறுதி" என்ற தலைப்பின்கீழ் அந்த கட்டுரை உள்ளது. பொறுத்து இருந்து பார்ப்போம் இதுவரை நாம் கணிக்கமுடியாத செயலையே செய்து வரும் கமல், பிப்ரவரி 21 தன் சுற்றுப்பயண தொடக்கத்தில் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாரோ?