Skip to main content

“கொடநாடு வழக்கு; ஓபிஎஸ்க்கு ஒரே ஒரு நோக்கம் தான்” -  'தமிழா தமிழா' பாண்டியன்

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

Journalist Pandian Interview

 

கொடநாடு வழக்கில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் மேற்கொண்ட போராட்டத்தின் தாக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் விவரிக்கிறார்.

 

கொடநாடு வழக்கில் முதல் குற்றவாளியே பன்னீர்செல்வம் தான். இது நடந்தது அண்ணா திமுக ஆட்சியில். அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் ஆகின்றன. இவ்வளவு நாட்கள் பன்னீர்செல்வத்துக்கும் தினகரனுக்கும் கொடநாடு வழக்கு குறித்து தெரியாதா? இதுதான் மக்களின் கேள்வி. 2016 தேர்தலில் செலவு செய்யச் சொல்லி பன்னீர்செல்வம், பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கொடநாட்டில் சிறை வைக்கப்பட்டனர். அவர்களுடைய சொத்துக்கள் அடங்கிய டாக்குமென்ட்கள் அனைத்தும் ஜெயலலிதா, சசிகலாவால் கைப்பற்றப்பட்டன. 

 

அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். சசிகலா சிறை சென்றார். பன்னீர்செல்வத்தையும் மற்ற மூத்த அமைச்சர்களையும் தன் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் எடப்பாடியின் கார் ஓட்டுநர் கனகராஜ் மூலம் கொடநாட்டில் இருந்த டாக்குமென்ட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. 2021 வரை துணை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஏன் வாய் திறக்கவில்லை? மோடி இப்போது பன்னீர்செல்வத்தை கழற்றி விட்டுவிட்டார். எடப்பாடியை பக்கத்தில் சேர்த்துக்கொண்டார். இதனால் இவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

 

அதிமுக தொண்டர்களுக்கு கோவில் போன்ற தலைமை அலுவலகத்தை அடித்து உடைத்தவர் ஓ. பன்னீர்செல்வம். அவருக்கு இப்போது அரசியல் எதிர்காலம் முடிந்ததால் கோடநாடு வழக்கை கையில் எடுத்துள்ளார். அதிமுகவின் மீது இப்போது பன்னீர்செல்வத்துக்கு எந்த பிடிப்பும் இல்லை. அவரோடு இருந்த அனைவரும் இப்போது எடப்பாடியிடம் சென்றுவிட்டனர். அதனால் அவர் எடப்பாடியை திமுகவிடம் காட்டிக் கொடுப்பதற்கு தயாராகிவிட்டார். இதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

 

இவர்களிடம் பெரிய அளவில் வாக்கு வங்கியும் இல்லை. இரட்டை இலை எங்கே இருக்கிறதோ அங்கே தான் அண்ணா திமுகவின் வாக்கு வாங்கி இருக்கும். தினகரனிடமும் பன்னீர்செல்வத்திடமும் முன்பு இருந்த தொண்டர்கள் இப்போது இல்லை. இருக்கும் தொண்டர்களையும் அவர்களால் தக்கவைத்துக் கொள்ள முடியாது. எடப்பாடியிடம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி, தொண்டர்கள், பாஜக கூட்டணி, பணம் என்று அனைத்தும் இருக்கிறது. எனவே தினகரன் மற்றும் பன்னீர்செல்வத்தால் எடப்பாடியுடன் மோதி வெற்றி பெற முடியாது. அண்ணா திமுகவினர் எங்கு அதிகாரம் இருக்கிறதோ அங்கு தான் இருப்பார்கள்.