“நாளைய வாக்காளர்கள் நீங்க.. ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க.. உங்க பெற்றோர்கிட்டயும் இத சொல்லுங்க.. அம்பேத்கர், பெரியார், காமராஜர் எல்லாம் படியுங்க” என மாணவர்கள் மத்தியில் விஜய் பேசியது இந்த ஆண்டுக்கான விஜய்யின் அரசியல் வார்த்தைகள். இந்த வார்த்தைகள் காற்றில் கலந்து போகுமா அல்லது காலத்தை மாற்றுமா என விவாதம் எழுந்து வரும் நேரத்தில் விஜய் இன்று (ஜூன் 22) தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜய்யின் பேச்சை அரசியல் எண்ட்ரி பாஸாக எடுத்துக்கொண்ட அவரது ரசிகர்கள் ஊர் முழுக்க ‘முதல்வர் விஜய்’ எனும் தொனியில் போஸ்டர்களால் அமர்க்களம் செய்து வருகின்றனர்.
ஆட்சிகளை குறிப்பிட்ட வாக்கு சதவீதமே தீர்மானிக்கின்றன. அவை பெரும்பாலும் இளைஞர்களிடத்தில் உள்ளன. தேசியக் கட்சிகள் ஆண்டுகொண்டிருந்த தமிழ்நாட்டில் மாநிலக் கட்சியை கொண்டுவந்த திமுக அதன் அரசியலை மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்ற வைத்தது. இன்றைய தேசியக் கட்சித் தலைவர்களான ராகுலும், மோடியும் கூட மாணவர்களையும் இளைஞர்களையும் சந்தித்து பேசுவதை ஷெட்யூலாக வைத்திருக்கின்றனர். விஜய்யின் கல்வி விருதும் அப்படியே பார்க்கப்படுகிறது.
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்திற்கு ஒன்றும் புதிதல்ல. கோட்டைக்கு செல்ல கோடம்பாக்கம் தான் சார்ட் ரூட் என்பது தமிழக அரசியலில் எழுதப்படாத விதியாகவே உள்ளது. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என 5 அரசியல் ஆளுமைகளும் கோடம்பாக்கம் கேட் பாஸ் வாங்கி வந்தவர்களே. அந்த பட்டியலில் கார்டு போட்ட ரஜினி திரும்பப் பெற, பாஸ் வாங்கி புதுவரவாக கமல் உள்ளே இருக்க, விண்ணப்பிக்கும் முயற்சியில் விஜய் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.
விஜய்யின் அரசியல் பாய்ச்சல் இன்றோ நேற்றோ அல்ல, ஈழப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த 2008 ஆம் ஆண்டே பிள்ளையார் சுழி போட்டார். போரைக் கண்டித்து தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய நடிகர் விஜய், “ஈழத்தில் போர் நிறுத்தப்பட வேண்டும், தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று பேசினார். அதே அண்டு கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உடனடியாக தனது ரசிகர் மன்றத்தின் மூலம் நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதில் பேசிய விஜய், “நான் நடிகனாக இங்கு வரவில்லை. தமிழன் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஒரு தமிழனாக வந்திருக்கிறேன். இதற்கு யாரும் அரசியல் சாயம் பூச வேண்டாம்” என்று அரசியலா, தமிழனா எனும் விவாதத்தை ஏற்படுத்தினார். அந்த விவாதத்தின் சூட்டிலேயே 2009 ஆம் ஆண்டு ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி ரசிகர்களை மக்களுடன் நெருங்க வைத்தார். ரசிகர்களை மக்களுடன் ஜனநாயக நீரோட்டத்தோடு கலக்க வைத்த விஜய், டெல்லியில் ராகுலை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பு ஈழப்போர், அரசியல் என பல அடுக்கு பேச்சுகளை ஏற்படுத்தியது.
காவலன் பட ரிலீஸ் நெருக்கடி அவரை நெருக்க, 2011 இல் விஜய் அதிமுக ஆதரவு நிலையை எடுத்தாக தகவல்கள் வெளிவர, தேர்தல் முடிந்து ஜெயலலிதா ஆட்சி அமைக்க, ‘அந்த வெற்றிக்கு தான் ஒரு அணில் போல் செயல்பட்டதாக விஜய் தரப்பில் கூறப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதத்திலேயே ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வெளிவந்த வேலாயுதம் படத்தில், ‘நான் ஆளும் கட்சி’ என வசனமும் இடம்பெற்றிருந்தது. இதுவும் அதிமுக நிலைப்பாடு எனும் பேச்சு எழுந்தது.
இப்படி விஜய் அதிமுக ஆதரவாளர் எனப் பரவலாக கருத்து நிலவி வந்த நேரத்தில், அதிமுகவை ‘தலைவா’ படத்தின் மூலம் சீண்டினார். ‘தலைவா; டைம் டூ லீட்’ என்ற டாக் லைனுடன் வந்த படத்தில், ‘தலைவாங்கறது நாம தேடி போறது இல்ல; நம்மல தேடி வர்றது’ எனும் வசனத்துடன் வந்த ட்ரைலர் அரசியல் வட்டாரத்தில் கூர் தீட்ட பதம் பார்க்கப்பட்டார் விஜய். திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வர படம் திரைக்கு வராமல் இருந்தது. படத்தை வெளிக்கொண்டுவர கோடநாட்டில் ஓய்வில் இருந்த ஜெயலலிதாவை நேரில் சந்திக்க பயணமானார் விஜய். முற்றுப்புள்ளி வைக்க பயணமான விஜய்யை காக்க வைத்து ‘கமா’ போட்டு அனுப்பினார் ஜெயலலிதா. இது விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைக்க, “முதல்வர் அம்மா.. இந்த பிரச்சனையில் தலையிட வேண்டும்” என வீடியோ வெளியிட்டு பல கட்டுப்பாடுகளுடன் வெளியிட்டார் விஜய். இந்த பிரச்சனையின் போது ரசிகர்களிடம் இருந்து விஜய்க்கு கிடைத்த ஆதரவு பிற்காலங்களில் அவர் செய்யப்போகும் சம்பவங்களுக்கு தலையாய் அமைந்தது என்று கூடச் சொல்லலாம்.
தலைவா படத்தில் அதிமுகவை சீண்டிப் பார்த்த விஜய், விவசாயிகள் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட கத்தி படத்தில், ‘காத்துல ஊழல் செய்ற ஊருயா இது’ என திமுகவையும் சீண்டினார். மாநிலக் கட்சிகளை வம்பிழுத்துக் கொண்டிருந்த விஜய், ‘மெர்சல்’ படத்தில் மருத்துவத் துறை ஊழல், ஜி.எஸ்.டிக்கு எதிரான வசனமென மத்திய அரசைக் கண் சிவக்க வைத்தார். எச்.ராஜா விஜய்யின் இயற்பெயரான ஜோசப் விஜய் என்பதைக் குறிப்பிட்டு அவர் மீது மத ரீதியிலான சாயத்தைப் பூசினார். இதனைக் கையில் எடுத்த விஜய், மெர்சல் படத்தின் வெற்றிக்கான நன்றி கடிதத்தில் ‘ஜோசப் விஜய்’ என்று குறிப்பிட்டார். மெர்சல் பட பிரச்சனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி ராகுல் காந்தி வரை விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.
மாநில, தேசியக் கட்சிகளை சீண்டிய விஜய், சர்க்கார் படத்தில் தன் அரசியலை முன்னெடுத்தார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய், “எல்லாரும் கட்சி தொடங்கி, பிரச்சாரம் செய்துதான் தேர்தலில் நிப்பாங்க. ஆனால் நான் சர்க்கார் அமைத்துவிட்டுத் தேர்தலில் நிற்கிறேன். சர்க்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால் நான் நடிக்க மாட்டேன்” என்று பேசியது அவரின் அரசியல் வருகையையும், முதல்வர் கனவையும் பிரதிபலிப்பதாக இருந்தது எனப் பேசப்பட்டது.
சர்க்காரில் வில்லியாக வரும் வரலட்சுமிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்ற பெயரை வைத்ததற்காக அதிமுகவினர் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இப்படி ரீலிலும், ரியலிலும் நிகழ்கால அரசியலையும் எதிர்கால திட்டங்களையும் கூறி அரசியல்வாதிகளை அதிர வைத்தார் சர்க்கார் விஜய்.
2019 இல் பிகில் பட இசை வெளியீட்டு விழாவில், “யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, மக்கள் அவர்களை அங்குதான் உட்கார வைக்க வேண்டும்” என்று பேசியதும், அதிமுக கொடி விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக பேசியதும் மீண்டும் அதிமுகவினரை அதிர வைத்தது. கிடைக்கும் இடத்தில் எல்லாம் அரசியல் ஆசைகளை வெளிப்படுத்தி வந்த விஜய், நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா குடும்பத்திற்கு நேரில் ஆறுதல், ஜல்லிகட்டு பிரச்சனை என அடுத்தடுத்து சத்தமில்லாமல் பல சம்பவங்களைச் செய்து வந்தார்.
அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பேசுபொருளாகி வரும் விஜய், கடந்த ஓர் ஆண்டாக ‘விஜய் மக்கள் இயக்க’த்தின் மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். நடந்து முடிந்த ஊராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற தனது இயக்க நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்தி வாழ்த்துகளை தெரிவித்தார். இது அடுத்து நடக்கும் தேர்தலுக்கு வெள்ளோட்டம் பார்க்கும் செயல் என்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது மாணவர்கள் சந்தித்த செயலையும் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது.
கல்வி விருதில், நாளைய வாக்காளர்கள், ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என பேசிய விஜய், ‘பெரியார், அம்பேத்கர், காமராஜரை பற்றி படிங்கள்’ என்று கூறியிருந்தார். மூன்று ஆளுமைகளை குறிப்பிட்ட விஜய், தமிழ்நாடு அரசியலில் மாற்றம் கொண்டு வந்த அண்ணாவை விட்டிருந்தார். இது தற்செயலானதாக இருக்கலாம் என்று சொன்னாலும், மற்றொரு பக்கம், திமுக, அதிமுக, பாஜக என சீண்டிய விஜய் காங்கிரஸை சீண்டியதில்லை. மக்கள் விடுதலைக்காக போற்றப்பட்ட பெரியாரையும், அம்பேத்கரையும் குறிப்பிட்ட விஜய், வாக்கு அரசியலில் ஈடுபட்ட காங்கிரஸின் முன்னாள் முதல்வர் காமராஜரையும் பேசினார். திராவிடத்திற்கு மாற்று என தமிழ்நாடு அரசியலில் ஒரு பேச்சு எழுந்து வருவதால், வாக்கு அரசியல் திராவிட இயக்கங்களின் மூலவர் அண்ணாவை தவிர்த்திருக்கலாம் என விஜய் ரசிகர்கள் மத்தியில் ஒரு பேச்சு நிலவுகிறது.