Skip to main content

பேனை பெருமாளாக்குகிறதா பாஜக அரசு?

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை நீக்கிய மத்திய அரசு, தனது முடிவை காஷ்மீர் மக்களும், உலக நாடுகளும் வரவேற்பதாக கூறியது. ஆனால், சீனாவோ இந்தப் பிரச்சனையை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கே கொண்டுபோய்விட்டது.
 

thumb

 

 

தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை காஷ்மீரிகளுக்கே உண்டு என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் 11 முறை தீர்மானம் இயற்றியிருப்பதாகவும், அந்தத் தீர்மானங்களை வலியுறுத்தும் வகையிலேயே இந்தப் பிரச்சனையை ஐ.நா. விவாதத்துக்கு எடுத்துக்கொண்டது என்றும் பாகிஸ்தான் கூறியிருக்கிறது.
 

அதாவது இந்தப் பிரச்சனை இப்போது சர்வதேச பிரச்சனையாகி இருக்கிறது என்பதே உண்மை. இதற்கிடையே பாகிஸ்தானுடன் மோதல் போக்கை தவிர்த்து, இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை தணிக்கும்படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு யோசனை தெரிவித்திருக்கிறார்.
 

அதைத்தொடர்ந்து ட்ரம்ப்புடன் பிரதமர் மோடி அரை மணிநேரம் பேசினார். அப்போது, காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என்று அவர் சொல்லவில்லை. மாறாக, இந்தியாவுக்கு எதிராக சில தலைவர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் தலைவர்களால்தான் பதற்றம் ஏற்படுகிறது. அவர்களுடைய நடவடிக்கைகளால் பதற்றத்தை தணிக்க முடியாது என்று ட்ரம்ப்பிடம் கூறியிருக்கிறார்.
 

சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை காஷ்மீர் மக்கள் வரவேற்பதாக மத்திய அரசு இதுவரை கூறிவந்தது. ஆனால், 15 நாட்களாகியும் அங்கு அமைதி திரும்பவில்லை. லட்சம் ராணுவ வீரர்களை தெருக்களில் நிறுத்தி, அமைதி திரும்பியதாக கூறினாலும், காஷ்மீரில் வாழும் பண்டிட்டுகள், டோக்ராக்கள், புத்தமதத்தினர் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்கள். அதாவது, காஷ்மீரில் நிலத்தை வாங்கவோ விற்கவோ வெளி ஆட்களுக்கு உரிமை கொடுக்கக்கூடாது என்றும், காஷ்மீரில் வெளி ஆட்களை குடியமர்த்தி மக்கள் தொகையை அதிகரிக்கும் முயற்சியை மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

எதற்காக மத்திய அரசு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததோ அந்த நோக்கத்தையே இவர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

காஷ்மீரில் பள்ளிகளைத் திறந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், பிள்ளைகளைத்தான் காணோம் என்கிறார்கள். மிகச் சிறிய அளவிலேயே மாணவர்கள் வந்ததாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
 

பள்ளிகளைத் திறந்த அரசு கல்லூரிகளை எப்போது திறக்கும் என்பது தெரியவே இல்லை. அரசு அலுவலகங்கள் எப்போது இயங்கும், மக்கள் எப்போது வீடுகளை விட்டு வெளியே வந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என்பதெல்லாம் கேள்விகளாகவே நீடிக்கின்றன.
 

வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் மட்டுமே காஷ்மீரைக் குறித்த உண்மையான செய்திகளை வெளியிடுவதாகவும், உள்ளூர் செய்தி நிறுவனங்களில் அரசுக்கு சாதகமானவை மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள்.
 

மத்திய ராணுவ அமைச்சரும் மற்ற பாஜக தலைவர்களும் பேனைப் பெருமாளாக்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அவர்கள் ஹரியானா, மகாராஸ்டிரா, ஜார்கண்ட் மாநில தேர்தல்களுக்காக பல பொய்களை பரப்பி வருகிறார்கள்.
 

kashmir

 

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்த இந்தியா, பாலகோட் தாக்குதலைக் காட்டிலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருந்தார். இதை குறிப்பிட்டு ராஜ்நாத் சிங் ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். அப்போது, பாலகோட் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலையும், அந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கில் தீவிரவாதிகள்  கொல்லப்பட்டதையும் இம்ரான்கான் ஒப்புக்கொண்டிருப்பதாக கூறினார்.
 

பாலகோட்டில் ஆளில்லாத வனப்பகுதியில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால், அதைக்காட்டிலும் பெரிய தாக்குதலுக்கு இந்தியா திட்டமிடுவதாகத்தான் இம்ரான்கான் சொல்லியிருந்தார். அவர் சொன்ன விஷயத்தையே மாற்றி, பாஜக அரசின் வீரதீரச் செயலைப் போல ராணுவ அமைச்சரே பேசியிருப்பது தவறு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.