Skip to main content

கழுத்து வெளுத்தாலும் காகம் கருடனாக முடியாது - ரஜினிகாந்த் குறித்து வைகைச்செல்வன் 

Published on 06/03/2018 | Edited on 06/03/2018


 

நடிகர் ரஜினிகாந்த் நேற்று வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரியில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் உருவச்சிலையை திறந்து வைத்து எம்.ஜி.ஆர் பற்றியும், தனது அரசியல் வருகை பற்றிய அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும் உரையாற்றினார். அதில் எம்.ஜி.யாரின் பெருமைகளையும் அவர் மக்களுக்கும் தனக்கும்  செய்த உதவிகளைப் பற்றி பேசிய ரஜினிகாந்தின் பேச்சு, எம்.ஜி.ஆரின் அபிமானிகளை தன்பக்கம் இழுக்கவே என விமர்சனங்கள் எழுந்துள்ளன. 
 

இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான வைகைச் செல்வன் நக்கீரன் இணையதளத்திடம் பேசுகையில்,
 

திடீர் என்று ஞானஉதயம் வந்து  எம்.ஜி.ஆரின் கருணையையும், பெருமைகளையும் குறிப்பிட்டு ரஜினிகாந்த் பேசியிருக்கிறார் என்பது எல்லோருக்கும் வியப்பைத்  தருகிறது. எம்.ஜி.ஆர். தனக்கு செய்த உதவிகளையும், கருணைகளையும் சொல்லி அதற்கு சாட்சிகளாக இருவரையும் குறிப்பிட்டிருக்கிறார். ஒருவர் ஒய்.ஜி.பி. அவர்களின் துணைவியார், மற்றொருவர் திருநாவுக்கரசர். ஆக இதுபோன்ற உண்மைகளை காலம் கடந்து அவர் சொல்வதற்கு அரசியல் உள்நோக்கம்தான் காரணம் என நாங்கள் கருதுகிறோம்.

 

rajini mgr


எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த போதும் அவர் இல்லாதபோதும், அதிமுக-வை கால் நூற்றாண்டுக்கு மேலாக வழிநடத்தி நாடாளுமன்றத்தில் மூன்றாவது கட்சியாக மாற்றிய ஜெயலலிதா இல்லாத இன்றைய சூழலில், எம்.ஜி.ஆரின் ஆட்சி பெருமைகளை பற்றி அன்று பேசாமல் மௌன சாமியாராய் இருந்த ரஜினிகாந்த் இன்று எம்.ஜி.ஆரின் பெருமைகளை பேசியிருப்பது இவரும் அரசியல் களத்தில் இடம்பிடிக்க அரிதாரம் பூசிவிட்டார் என எண்ணத்தோன்றுகிறது.
 

கழுத்து வெளுத்தாலும் காகம் கருடனாக முடியாது, குறுக்கு சிறுத்தாலும் கிழவன் குமரனாக முடியாது. இப்படித்தான் அரசியலில் ரஜினிகாந்தின் நிலைமையும் இருக்கும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்பது அரசு சார்பில் 32 மாவட்டங்களில் சென்னை, கன்னியாகுமரி தவிர 30 மாவட்டங்களில் நடந்துள்ளது. அரசின் அர்ப்பணிப்பு உணர்வோடு நடத்தப்படும் இந்த அரசு விழாவை ஏ.சி.சண்முகம் நடத்திய எம்.ஜி.ஆர் விழாவோடு ஒப்பிட்டு பேசுவது அவரது அரசியல் தெளிவின்மையை வெளிக்காட்டுகிறது. அரசியல் விழா என்பது வேறு. தனிநிகழ்ச்சி என்பது வேறு. இந்த சிறிய வேறுபாடுகூட தெரியாமல் இருக்கிறார் ரஜினிகாந்த் எனத் தோன்றுகிறது.
 

தற்போது தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என தப்புக்கணக்கு போட்டிருக்கிறார். வெற்றிடம் எப்போதும் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் ஏற்பட்ட வெற்றிடத்தை தன் திறம்பட்ட ஆட்சியால் அம்மா நிரப்பினார். அவரைத் தொடர்ந்து தொண்டர்களாக இருந்து உயர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நிரப்பி ஜெயலலிதாவின் ஆட்சியை திறம்பட நடத்தி வருகின்றனர்.

 

vaigaiselvan

சினிமா துறையை சேர்ந்த ரஜினிகாந்த் வெற்றிடம் உள்ளது என நினைத்து வந்தால் கண்டிப்பாக தோற்கடிக்கப்படுவார். இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை கலைஞர்களை வாழவைத்திருக்கிறார் எத்தனை திரையரங்கங்க உரிமையாளர்களுக்கு உதவியிருக்கிறார் என அவர்தான் சொல்லவேண்டும். இப்படி தான் உள்ள, தன்னை வளர்த்துவிட்ட துறைக்கே ஒன்றும் செய்யாத ரஜினிகாந்த் அரசியில் தோல்வியைத்தான் சந்திப்பார். இன்னைக்கு எவ்வளவு திரையரங்குகள் திருமண மண்டபங்களாக மாறியுள்ளன. இவரே சினிமாவில் இருந்துகொண்டு திரையரங்கம் கட்டாமல் திருமண மண்டபத்தைதானே கட்டினார்? இப்படி சினிமா துறைக்கே ஒன்றும் செய்யாத இவரின் பேச்சு ஒன்றாகவும் செயல் ஒன்றாகவும் இருக்கிறது.
 

கடந்த ஆண்டுகளில் அரசியல் பற்றியோ, ஏன் கடந்த மாதம் வந்த காவிரி தீர்ப்பு பற்றிக்கூட எதுவும் பேசவில்லை. காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியபோது கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் வேண்டாம் என தீர்மானம் கொண்டுவருவதாக அறிவித்த போது அவருக்கு ஒரு கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லை. ஆன்மீக அரசியல் என சொல்லும் ரஜினி ஆன்மீக தமிழ்க்கடவுள் ஆண்டாளை பற்றி அவதூறாக பேசிய கவிஞர் வைரமுத்துவுக்கு ஒரு கண்டனமும் தெரிவிக்கவில்லை. இப்படி முன்னுக்குப் பின் முரணாக பேச்சு ஒன்றும் செயல் ஒன்றுமாக இருக்கிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது ஏதோ ஒரு அரசியல் ஆதாயத்திற்காக உந்தப்படுகிறார் என்பதே தெளிவாகிறது.
 

இப்படி ஆதாயத்திற்கான அரசியல் பயணமும், ஆதாயத்திற்காக அடியெடுத்துவைத்திருப்பதும் அவருக்குத் தோல்வியை பெற்றுத்தரும் என்பதே  தெளிவான உண்மை" என்று கூறியுள்ளார்.