Skip to main content

அதிமுக யாருக்கு சொந்தம்? - தேர்தல் முடிவும் தொண்டனின் கண்ணீரும்..!  #4 

 

Who owns ADMK

 

“அரசியல் கட்சி நடத்துவது ஆட்சியைப் பிடிக்கத்தான், ஆட்சியைப் பிடிப்பது அதிகாரம் செலுத்தத்தான் என்ற சித்தாந்தங்களை ஒதுக்கியவர் அமரர் அண்ணா. அண்ணாயிசத்தை ஆட்சிக் கட்டிலில் ஏற்றி, அதன் மூலம் தூய்மையான ஆட்சியை, லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சியை அமைத்துக் காட்டுவோம்!”  - அதிமுகவின் கொள்கையாக எம்.ஜி.ஆர். பிரகடனம் செய்த அண்ணாயிசம் இதுதான்!

 

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, ‘கட்சியாவது.. கொள்கையாவது..’ என்கிற ரீதியில்தான் சகலமும் நடந்தன. தனக்கு எதிரான வலிமையான 12 வழக்குகளை ஜெயலலிதா சந்திக்க வேண்டியதாயிற்று. இந்திய நாட்டில், பதவியிலிருக்கும்போதே ஊழல் வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறை சென்ற முதல் முதலமைச்சர் என்ற பெயரெடுத்தார். “முதலமைச்சராக பதவியேற்ற முதல் 27 மாதங்களில், மாதம் 1 ரூபாய் மட்டுமே அடையாளச் சம்பளமாக பெற்று வந்தார் ஜெயலலிதா. நடிகை என்ற முறையில் அவரால் சொத்துகளை சேர்த்திருக்க முடியுமென்றாலும், அவர் பெயரிலான சொத்துகளுக்கு விளக்கம் அளிக்க, அது போதுமானதாக இல்லை. ஜெயலலிதாவோடு குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய முன்று பேரும் எந்த வேலைக்கும் செல்லவில்லை. அவர்களுக்கென்று ஊதியமும் இல்லை. இவர்கள், நீதியைக் குழிதோண்டிப் புதைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால்தான், வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. ஊழலை அளவின் அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது. ஊழல்தான் ஒழுங்கீனத்தின் தாய். அது சமூக முன்னேற்றத்தை அழிக்கிறது; தகுதியற்ற ஆசைகளை வளர்க்கிறது; மனசாட்சியைக் கொல்கிறது; மனித நாகரிகத்தையே குலைக்கிறது!” என சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் கடுமையாகச் சாடியிருந்தார் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா.

 

Who owns ADMK

 

உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பிலும் ‘முறைகேடாக ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்த்த சொத்துகளை, முறையாகச் சம்பாதித்தது போலக் காட்டுவதற்கு, போயஸ் இல்லத்தில் சதியில் ஈடுபட்டு செயல்படுத்தியுள்ளனர். இது ஆழ்ந்த சதியின் விளைவு.’ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

ஆட்சி அதிகாரம் ஜெயலலிதா கையில் இருந்தபோது, ஊழல் புரிய தூண்டுகோலாக இருந்ததாலேயே, சசிகலாவுக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்தது உச்ச நீதிமன்றம். இந்த சசிகலாதான், தண்டனை முடிந்து விடுதலையானவுடன், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும், தனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கவில்லை என்று கோபத்தின் உச்சிக்கே சென்றார். இந்தத் தேர்தலில் முக்குலத்தோர் வாக்குகளை தினகரனின் அமமுக பிரிப்பதன் மூலம்  அதிமுக தோல்வி அடைய வேண்டும் என்ற திட்டத்தோடு, அரசியலைவிட்டு ஒதுங்குவதாக ஒப்புக்கு அறிக்கையும் விட்டார். தான் நினைத்தது நடக்கும்போது, அதிமுக என்ற கட்சி, வேறு வழியின்றி தன் பிடிக்குள் வந்துவிடும் என்பதே அவரது உள்நோக்கம்.

 

Who owns ADMK

 

டிடிவி தினகரன் மீதும், அந்நிய செலாவணி மோசடி, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் டாலர்களை மாற்றிய வழக்கு, பரணி பீச் ரிசார்ட்ஸ் வழக்குகள் பதிவாயின. வரி ஏய்ப்பு, வெளிநாட்டு வங்கிகளில் முறைகேடான முதலீடு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனைக்கான ஃபெரா வழக்குகளை அவர் சந்திக்க நேரிட்டது. இரட்டை இலை சின்னம் தங்களது அணிக்கு கிடைப்பதற்காக, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி திஹார் சிறையில் கம்பி எண்ணிய அனுபவமும் தினகரனுக்கு உண்டு. இவரும்கூட, அதிமுகவை மீட்டு, அம்மா ஆட்சியை அமைப்பதே தனது நோக்கம் என்று கூறிவருகிறார்.

 

எம்.ஜி.ஆரின் அண்ணாயிச கொள்கைகளுக்கு மாறாக, கோடிக்கணக்கான ஊழல் பணத்தில் திளைத்துவிட்டு தண்டனை பெற்ற சசிகலா, எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியை, சொந்தம் கொண்டாட துடிக்கிறார். தனது சித்தி என்பதால், தினகரனும் அதற்கேற்ப காய் நகர்த்தி வருகிறார். அதிமுக என்ற கட்சியை மூலதனமாக்கி, அதிகாரத்தில் இருந்தபோது அரசியலை வைத்து, பணம் காய்ச்சி மரமாக உலுக்கி எடுத்து, சொந்தபந்தங்கள் அத்தனை பேரையும், பொருளாதார ரீதியாக அபரிமிதமான வளர்ச்சிபெறச் செய்தவர், சசிகலா. 

 

சினிமா வாய்ப்பு இல்லாமல் ஜெயலலிதா தவித்த காலக்கட்டமும் இருந்தது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின், அரசியலில் தீவிரம் காட்டியபோது, பொருளாதார தேவைகளுக்காக அவர் பட்ட கஷ்டத்தை உடன் இருந்தவர்கள் அறிவார்கள். ஆனால் பாருங்களேன்! தமிழக மக்கள், ‘ஷிஃப்ட்’ முறையில் மாறி மாறி முதலமைச்சராக்கிவிட, இறந்தபோது ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.913 கோடிக்கு உயர்ந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், உயர் நீதிமன்ற தீர்ப்பால் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு ஜெ.தீபாவும் தீபக்கும் நேரடி வாரிசுகள் ஆகிவிட்டனர். 

 

அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆருக்கு நேரடி வாரிசு இல்லையென்றாலும், அண்ணன் சக்ரபாணி உள்ளிட்ட தனது சொந்தங்கள் யாரையும் அரசியலுக்குள் இழுக்கவில்லை. எம்.ஜி.ஆர். வழி சொந்தங்களுக்கோ, அவருடைய மனைவி வி.என்.ஜானகி வழி சொந்தங்களுக்கோ, மலைக்கும் அளவுக்கு சொத்துகள் இல்லை. திமுக நிறுவனரான அண்ணாவுக்கும் நேரடி வாரிசு இல்லை. அக்கா மகள் சௌந்தரியின் மகன்களான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந்திரன் ஆகிய நால்வரும் அண்ணாவின் தத்துப் பிள்ளைகள். நேர்மையாளரான பரிமளம், தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவருடைய வாழ்க்கைச் சூழல் இருந்தது. அண்ணா குடும்பத்தினர் யாரும், அரசியல் கட்சிகளிடமிருந்தோ, ஆட்சியாளர்களிடமிருந்தோ எதையும் எதிர்பார்த்ததில்லை.

 

அண்ணா, எம்.ஜி.ஆர். குடும்ப வாரிசுகளெல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் ஒதுங்கிவிட்டனர். சசிகலா, தினகரன் போன்றோரோ, அதிமுகவைக் கைப்பற்றி, பின்னாளில் ஆட்சி பீடத்தில் அமர்வதற்காக, இத்தேர்தலில் அக்கட்சியை வீழ்த்தும் திட்டத்தைக் கையில் எடுத்து, நடத்தியும் காட்டியிருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர் ஒருவர் இப்படிச் சொன்னார், “திமுக தானாக ஒன்றும் வெற்றிபெறவில்லை. சசிகலாவும் தினகரனும் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து திமுகவை வெற்றிபெற வைத்து விட்டனர். இவர்களின் சுயநலமும், அமமுக பிரிக்கப்போகும் சாதி வாக்குகளும் தேர்தலுக்கு முன்பாகவே திமுகவின் வெற்றியை உறுதி செய்தது. 

 

இந்த அடையாளமும் ஆடம்பர வாழ்க்கையும் அதிமுக என்ற கட்சிதான், பின்வழியாக இவர்களுக்கு அள்ளிக் கொடுத்தது. அதிமுகவால் வளர்ந்து, அந்தக் கட்சியை அழிக்கத் துணிந்த துரோகிகள் இவர்கள். ‘என் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை’ என்றார் ஜெயலலிதா. தனக்குப் பின்னால் இருப்பவர்களைப் பார்க்காமல் சொல்லிவிட்டார். அதிமுகவை பின்னால் இருந்து குத்திய இவர்கள், இந்தத் தேர்தலில்  ‘ஜீரோ’ ஆனார்கள். ஒரு தொகுதியில்கூட, அந்தக் கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்பது சரியாகிவிட்டது. 

 

Who owns ADMK

 

1991 தேர்தலில் அதிமுக கூட்டணி 225 தொகுதியில் வெற்றிபெற்றது. 1996 தேர்தலிலோ, ஜெயலலிதாவே பர்கூரில் தோற்றுப்போனார். அப்போது, உடன்பிறவா சகோதரியாக சசிகலா கூடவே இருந்தார். அந்தத் தேர்தலில் 4 தொகுதிகளில் மட்டுமே அதிமுக கூட்டணி வெற்றிபெற்றது. அப்படி ஒரு தோல்வி இந்த 2021 தேர்தலில் கிடையாது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இனி, சசிகலாவுக்கு என்ன மரியாதை கிடைத்துவிடப் போகிறது? 

 

போலிப்பாசம் காட்டும் தலைவர்கள் வருவார்கள். வந்த சுவடு தெரியாமல் போய்விடுவார்கள். எடப்பாடி பழனிசாமியோ, பன்னீர்செல்வமோ, சசிகலாவோ, தினகரனோ, யாரும் கட்சியை முழுமையாக சொந்தம் கொண்டாட முடியாது. இரட்டை இலையைக் கெட்டியாகப் பிடித்தபடி, வெள்ளந்தியான தொண்டர்கள் விடும் மூச்சுக்காற்றில், அதிமுக இயங்கிக்கொண்டே இருக்கும். எம்.ஜி.ஆர். ஏற்றிவைத்த ஒளிவிளக்கு ஒருநாளும் அணையாது. சுயநலமிகளால் அதை அணைத்துவிடவும் முடியாது.” என்று நா தழுதழுக்கச் சொன்னபோது, அந்தத் தொண்டனின் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தது.

 

எம்.ஜி.ஆர். சிந்திய கண்ணீரில் தோன்றிய இயக்கம் அல்லவா! இந்தத் தேர்தல் முடிவுகளும் அதிமுக உண்மைத் தொண்டர்களை அழவைத்திருக்கிறது.