இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், இதில் ஈரான் ராணுவ உயர் அதிகாரிகள் 2 பேர் உட்பட 16 பேர் இறந்தனர். இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரான் கூறிய நிலையில் கடந்த மாதம்(ஏப்ரல்) இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை நடத்தியது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.
இதனிடையே, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “சபஹர் துறைமுகம் தொடர்பான ஒப்பந்தத்தில் ஈரானும், இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் எங்களுக்குத் தெரியும். சபஹர் துறைமுகம் மற்றும் ஈரானுடனான இருதரப்பு உறவுகள் குறித்து இந்திய அரசு தனது சொந்த வெளியுறவுக் கொள்கை இலக்குகள் குறித்து தெரிவிக்கும்படி கேட்போம். ஈரான் மீதான அமெரிக்கத் தடைகள் நடைமுறையில் உள்ளன, அவற்றை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம். எந்தவொரு நிறுவனமும், ஈரானுடன் வணிக ஒப்பந்தங்களைக் கருத்தில் கொண்டால், யாராக இருந்தாலும் அமெரிக்க பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கான ஆபத்துக்கு சாத்தியம் இருப்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ‘ஒய் பாரத் மேட்டர்ஸ்’ என்ற புத்தகத்தின் வங்காள் மொழி பதிப்பை கொல்கத்தாவில் இன்று (15-05-24) வெளியிட்டார். அப்போது நடந்த கலந்துரையாடலின் போது, அமெரிக்காவின் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஈரானிய முடிவில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. அதாவது கூட்டு முயற்சி பங்குதாரர் மாற்றங்கள், நிபந்தனைகள் போன்றவை. இறுதியாக, எங்களால் இதை நீண்ட கால ஒப்பந்தத்தை செய்து கொள்ள முடிந்தது. ஒப்பந்தம் அவசியம். ஏனெனில் அது இல்லாமல், துறைமுக செயல்பாட்டை மேம்படுத்த முடியாது. அதன் செயல்பாடு, முழு பிராந்தியத்திற்கும் பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அமெரிக்கா சொல்லப்பட்ட சில கருத்துகளை நான் பார்த்தேன். ஆனால் இது உண்மையில் அனைவரின் நலனுக்கானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வைப்பது போன்ற ஒரு கேள்வி என நினைக்கிறேன். மக்கள் இதை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது. சபாஹர் மீதான அமெரிக்காவின் சொந்த அணுகுமுறையைப் பார்த்தால், சபாஹருக்கு அதிகப் முக்கியத்துவம் இருப்பதாக அமெரிக்கா நினைப்பதாகத் தெரிகிறது” என்று பதில் அளித்தார்.
இரானின் தெற்கு கடற்கரையின், ஓமன் வளைகுடாவில் சபஹர் துறைமுகத்தை தற்போது இந்தியா தொடர்ந்து 10 ஆண்டுகள் நிர்வகிக்க ஒப்பந்தமிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.