மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்காக கடந்த மே மாதம் 3 ஆம் தேதி பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் இந்த கலவரத்தில் 98 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குக்கி இன மக்கள் தங்கியுள்ள முகாம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் டோன்சிங் ஹேங்சிங் (வயது 8) என்ற சிறுவன் மீது குண்டு பாய்ந்தது. இதையடுத்து சிறுவனின் தாய் ஹேங்சிங் (வயது 45) உடனடியாக சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேற்கு இம்பாலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். இவர்களுடன் லிடியா லூரம்பம் (வயது 37) என்ற உறவுக்கார பெண் ஒருவரும் ஆம்புலன்சில் சென்றுள்ளார். மேலும் இந்த ஆம்புலன்ஸ் காவல்துறை பாதுகாப்புடன் ஐசோ செம்பொ என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அங்கு சுமார் சுமார் 2,000 பேர் கொண்ட கும்பல் திரண்டு இருந்துள்ளனர். அந்த இடத்தில் இருந்து ஆம்புலன்ஸ் கடக்க முயற்சிக்கும் போது ஆம்புலன்சை வழி மறித்த கும்பல் ஆம்புலன்சுக்கு தீ வைத்தது. இதில் ஆம்புலன்சில் இருந்த சிறுவன் உள்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.