உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. இந்தநிலையில் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான யஷ்பால் ஆர்யா தனது மகனோடு காங்கிரஸில் இணைந்துள்ளார். மேலும் அவர் தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
யஷ்பால் ஆர்யா மகனான சஞ்சீவும் பாஜக எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது. யஷ்பால் ஆர்யா ஏற்கனவே 2007ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை உத்தராகண்ட் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஹரிஷ் ராவத்துடனான மோதலால் அவர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்தச்சூழலில் உத்தரகாண்ட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் யஷ்பால் ஆர்யா மீண்டும் காங்கிரசுக்குத் திரும்பியுள்ளார்.
யஷ்பால் ஆர்யா கட்சியில் இணைந்தது, உத்தரகாண்ட்டில் எந்தப் பக்கம் காற்று வீசுகிறது என்பதைத் தெளிவாகக் கூறுகிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். காங்கிரஸில் இணைவதற்கு முன்பாக இன்று காலை யஷ்பால் ஆர்யாவும், சஞ்சீவும் ராகுல் காந்தியைச் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.