Skip to main content

தம்பிதுரை எம்.பி.யின் கருத்துக்கு புள்ளி விவரத்துடன் பதிலடி கொடுத்த தமிழக அரசு!

Published on 12/03/2025 | Edited on 12/03/2025

 

TN govt responded to Thambithurai MP's comments with statistics

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஒன்றிய அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் இரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை நில எடுப்பு செய்வதில் மாநில அரசு காலதாமதம் செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மு. தம்பிதுரை தெரிவித்துள்ளதாக சில நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது இது தொடர்பாக பல்வேறு விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட இரயில்வே திட்டங்களின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த இரயில்வே திட்டங்களுக்கான நில எடுப்பு பணிகளின் மீது தனிக்கவனம் செலுத்தி விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் இரயில்வே திட்டங்களுக்கு மொத்தமாக 2197.02 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய ஏற்கனவே தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முக்கியமான 17 இரயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு செய்யப்பட வேண்டிய 1253.11 ஹெக்டேர் நிலங்களில், 1144.84 ஹெக்டேர் நிலங்களுக்கான நில எடுப்புப் பணிகள் முடிவுற்று (அதாவது 91% சதவீதம்) நிலம் இரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் குறிப்பாக முக்கியத் திட்டங்களான திண்டிவனம் - நகரி அதல ரயில்பாதை (100%), மதுரை - தூத்துக்குடி அகல ரயில்பாதை (100%), மணியாச்சி - நாகர்கோவில் அகல ரயில்பாதை (97%), கன்னியாகுமரி - நாகர்கோவில் அகல இரயில் பாதை இரட்டிப்பாக்குதல் (100%), தூத்துக்குடி - மதுரை (அருப்புக்கோட்டை வழி) புதிய அகல இரயில் பாதை கட்டம்1 (100%), சின்னசேலம் கள்ளக்குறிச்சி புதிய அகல ரயில்பாதை (98%). கொருக்குப்பேட்டை - எண்ணூர் நான்காவது வழித்தடம் (100%) மயிலாடுதுறை - திருவாரூர் அகல ரயில்பாதை (100%) பட்டுக்கோட்டை நான்குமுனை சந்திப்பு (100%), புதிய அகல இரயில் பாதை (சேலம் கரூர் வழித்தடம் உருவாக்குதல்) (100%). மன்னார்குடி - நீடாமங்கலம் அகல ரயில்பாதை (100%), சென்னை கடற்கரை - கொருக்குப்பேட்டை மூன்றாவது நான்காவது வழித்தடம் (100%) மற்றும் விழுப்புரம் - திண்டுக்கல் அகல இரயில்பாதை (100%) ஆகிய திட்டங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ளவாறு 97% முதல் 100% வரை நில எடுப்புப் பணிகள் முடிக்கப்பட்டு ஒன்றிய இரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. எஞ்சிய நில எடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இரயில்வே துறையால் எடுக்கவேண்டிய நடவடிக்கையால் நிலுவையிலுள்ள இனங்கள் : திருவண்ணாமலை திண்டிவனம் புதிய அகல ரயில்பாதை திட்டத்திற்கு 229.23 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய 2011ஆம் ஆண்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டும் இரயில்வே துறையினரால் நில எடுப்பிற்கு நிதி ஒதுக்கப்படாததால் நில எடுப்புப் பணிகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளன. அத்திப்பட்டு புத்தூர் இடையிலான இரயில்வே தடத்திற்கு இதுவரை இரயில்வே துறையினரால் நிலத் திட்ட அட்டவணை (LP.S) சமர்ப்பிக்கப்படவில்லை மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தூத்துக்குடி - மதுரை (வழி : அருப்புக்கோட்டை) புதிய அகல ரயில்பாதை இரண்டாம் கட்ட திட்டத்திற்காக 702.30 ஹெக்டேர் நிலங்களுக்கு நிர்வாக அனுமதி கடந்த 2023ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை மேலும் நில ஆர்ஜித பணி இடங்களை கலைத்திட இரயில்வே துறையினரால்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

TN govt responded to Thambithurai MP's comments with statistics

ஈரோடு மாவட்டத்தில் கதிசக்தி பல்முனை மாதிரி சரக்கு முணைபம் அமைக்க 12.38 ஹெக்டேர் நிலத்திற்கு நிர்வாக அனுமதி கடந்த 2022ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் இரயில்வே துறையினரால் தற்போது கைவிடப்பட்டது. மொரப்பூர் தர்மபுரி புதிய அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு 78.55 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தும் பணியில் 8.25 ஹெக்டேர் நில எடுப்பு முடிக்கப்பட்டுள்ள நிலையில் 24.00 ஹெக்டேர் நிலங்களுக்கு நிலம் கையகப்படுத்துதலில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ள காரணத்தினால் இந்நிலங்களுக்கு இழப்பீடுதொகை வழங்க நிறுத்தம் செய்யவும் மாற்று வழித்தடம் அமைத்திடவும். பரிசீலனையில் உள்ளதாகவும் இரயில்வே துறையினரால் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நேர்வில் ரயில்வே துறையினரால் தொழில் நுட்ப முடிவிற்கேற்ப நில ஆர்ஜிதம் செய்யப்படும். மேலும், 46.30 ஹெக்டேர் மீதமுள்ள நிலங்களுக்கு நில எடுப்பு பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மன்ணர்குடி - பட்டுக்கோட்டை இடையிலான 41 கி.மீ. இரயில் பாதை திட்டம் மற்றும் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை இடையியான 51 கி.மீ இரயில் பாதை திட்டம் ஆகிய இவ்விரண்டு திட்டங்களுக்கும் தற்போதைய நில மதிப்பின் அடிப்படையில் அரசின் நிர்வாக அனுமதி வழங்கிட மாவட்ட நிர்வாகத்தால் முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இரயில்பாதை அமையவுள்ள அரசு புறம்போக்கு நிலங்களைப் பொறுத்தவரையில் மேற்படித் திட்டங்களைச் செயல்படுத்த எந்தவிதமான தடைகளும் இன்றி அவ்வப்போது அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு அரசு நிலங்கள் இரயில்வே துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே இரயில்வே துறையின் திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை நிலஎடுப்பு செய்வதில் தமிழக அரசின் வருவாய் துறையால் தாமதம் எதுமில்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்